Claim: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Fact: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு முதல் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை தொடர்பான சர்ச்சை வரை, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக சர்ச்சைகள் தொடர்கின்றன.
இந்நிலையில் “3 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.” என ஒரு பதிவு அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. சில செய்தி தளங்களும், பேஸ்புக் பயனர்களும் இந்த தகவலை பகிர்ந்திருந்தமையை நாம் அவதானித்தோம். அந்த பதிவுகளில் சிலவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

மேலும் சில பதிவுகள் “மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு” எனும் தலைப்பில் இருந்தாலும் அவற்றின் உள்ளடக்கங்கள் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.” எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.


Fact Check/Verification
இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில் ‘நீர் விநியோகம்’, ‘மஹிந்த ராஜபக்ஷ’ மற்றும் ‘விஜேராம உத்தியோகபூர்வ இல்லம்’ போன்ற முக்கிய சொற்களைக் கொண்டு தேடலில் ஈடுபட்ட்டபோது, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகத்தை துண்டிக்கவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தெளிவுபடுத்தியதாக கூறி செய்திகள் வெளியாகியிருந்ததை காணக்கிடைத்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிக்கை வெளியாகியிருப்பதை நாம் கண்டோம்.
அந்த அறிக்கையில் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள மற்றொரு இடத்தில் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் 2024 ஒக்டோபர் மாதம் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர், இந்த இடத்தில் நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் நீர்க் கட்டண நிலுவைத் தொகையை செலுத்துமாறு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பல சந்தர்ப்பங்களில் சபை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும், நிலுவைத் தொகையை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. தற்போது குறித்த நீர் கட்டண நிலுவைத் தொகை 429,000 ருபாய் ஆகும் எனவும், அதன்படி இந்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எந்த இடையூறும் ஏற்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேளையில், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டின் நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட இடத்திற்கான நீர்க்கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டவை எனவும் அப்போது அங்கு கிட்டத்தட்ட 160 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்ததாகவும் அதனால் இவ்வளவு பெரிய தொகை நீர்க்கட்டணத்தை பெறுவது சாதாரணமானது எனவும், குறித்த இடம் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துடன் தொடர்பற்றதாக காணப்பட்டாலும் அந்த இடத்திற்கான பராமரிப்புகள் இதுவரை காலமும் அசராங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அதற்கான நீர் கட்டணம் ஜனாதிபதி செயலகத்தினாலேயே செலுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.” அச்செய்தியறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Conclusion
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் பரவிய செய்தி தவறானது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பின்னால் முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருந்த இடத்திற்கான 429,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாமையினால் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதி அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுவதாகவும், இதுவரை அப்பகுதிக்கான நீர்கட்டணம் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Result: Missing Context
எமது மூலங்கள்
13.02.2025 அன்று Newswireஇல் செய்தியறிக்கை.
14.02.2025 அன்று News 1st Sri Lanka YouTubeஇல் வெளியான செய்தியறிக்கை.
13.02.2025 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிக்கை.
13.02.2025 அன்று Ada Derana YouTubeஇல் வெளியான மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகேவின் அறிக்கை.
13.02.2025 அன்று Dasatha News YouTubeஇல் வெளியான மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகேவின் அறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.