Claim: இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Fact: ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை, ஆனால் நாட்டின் தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு(TRCSL), அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் கூற்றுப்படி, ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படும்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எலான்மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை இலங்கையில் செயல்படுவதற்கான உரிமத்தை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) வழங்கியது. இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள் சமீபத்தில் ஸ்டார்லிங்க்கின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாகக் கூறி பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Fact Check/Verification
இப்பதிவுகளின் உண்மையை கண்டறிய நாம் முதலில் “ஸ்டார்லிங்க்” மற்றும் “இலங்கை” போன்ற முக்கிய சொற்களினூடான தேடலொன்றை மேற்கொண்டோம். அதன்போது ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான TRCSL இன் ஒப்புதல் வழங்கப்பட்டமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி அறிக்கைகளைக் கண்டோம். இலங்கையில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்கிற்கு 2024 ஜூன் மாதம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பில் EconomyNext இல் வெளியான ஒரு அறிக்கையை இங்கே காணலாம்.
2024 ஆகஸ்ட் மாதத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு ஸ்டார்லிங்க்கிற்கு உரிமம் வழங்கப்பட்டது. “TRCSL ஆனது 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் இலங்கையில் செய்மதி அகன்ற அலைவரிசை(broadband) இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் வழங்குநர் உரிமத்தை வழங்கியுள்ளது” என்று TRCSL இனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டார்லிங்க் செயல்பாடுகளின் தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரவலாக தெரிவிக்கப்பட்டது. அவ்வறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இது தொர்பில் வெளியிட்ட அறிக்கையில் “ஸ்டார்லிங்க் செய்மதி தொடர்பாடல் சேவைகள் சில தனிநபர்களால் எந்தவொரு சட்டவிரோத செயலுக்கும் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். சட்டப்பூர்வ தேவை ஏற்பட்டால், ஸ்டார்லிங்கின் தரவுகளை சட்டப்பூர்வமாகக் கைப்பற்றுவதற்கான அல்லது தொடர்பாடல் தகவலை அணுகுவதற்கான உரிமையை உறுதி செய்த பின்னரே சேவைகளை செயல்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டார். அவரது அறிக்கை, ஸ்டார்லிங்க்கின் நடவடிக்கைகள் பாதுகாப்பு காரணங்கள் உறுதி செய்யப்படும்வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவை முற்றிலும் கைவிடப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
இலங்கையில் ஸ்டார்லிங்கின் நடவடிக்கைகளின் போது தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு காண பாதுகாப்பு அமைச்சு, TRCSL மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார். சட்டப்பூர்வ தேவை ஏற்பட்டால் தரவை சட்டப்பூர்வமாக இடைமறிப்பதற்கான உரிமையை அல்லது தகவல்தொடர்பு விவரங்களை அணுகுவதற்கான உரிமையை ஸ்டார்லிங்க் உறுதி செய்த பின்னர் சேவைகள் செயல்படும் என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, 2025 மார்ச் 26 ஆம் திகதியன்று, வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஸ்டார்லிங்க் வழியாக நிகழக்கூடிய சாத்தியமான குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கான செயற்பாடுகளை மட்டுமே அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்றும் உறுதியளித்தார்.
“எந்தவொரு சேவை வழங்குநரது, சேவையையும் மேற்பார்வையிடவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்கு ஒரு கடமை உள்ளது. தற்போது நிலுவையில் எந்தவொரு சேவையும் இல்லை, இந்த சேவை ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கப்பெறும்” என்று அவர் கூறினார்.
மேலும், TRCSL இன் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் “ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகள் நிறுத்தப்படாது என்பதை நான் பொறுப்புடன் கூற முடியும். இந்த சேவை ஏப்ரல் மாதத்திற்குள் நம் நாட்டில் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது… அவர்கள் வழங்கும் சேவையை சரியாக ஒழுங்குபடுத்துவதற்கும், தேவையான சேவை வாடிக்கையாளர்களுக்கு சரியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்கள் ஒரு Dashboard ஐ வழங்குகிறார்கள். இதன் மூலம், இரண்டு பிரச்சினைகளையும் திறம்பட கட்டுப்படுத்த முடியும்” என உறுதிப்படுத்தினார்.
அத்தோடு, நாங்கள் ஸ்டார்லிங்க்கின் வலைத்தளத்தை ஆராய்ந்தபோது, அதில் இலங்கையிலிருந்து சேவையை பெற விரும்பும் எவரும் அதனை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் கண்டறிந்தோம்.

Conclusion
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை, ஆனால் நாட்டின் தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் சேவைகள் செயல்படத் தொடங்கும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Result: Missing Context
எமது மூலங்கள்
24.06.2024 அன்று ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில் Economy Next இல் வெளியான செய்தி அறிக்கை.
13.08.2024 அன்று ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில் TRCSL இனால் வெளியிட்ட அறிக்கை.
24.03.2024 அன்று ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில் Daily Mirror இல் வெளியான செய்தி அறிக்கை.
26.03.2025 அன்று ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில் News First LK இல் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
26.03.2025 அன்று ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில் ADA Derana இல் வெளியான செய்தி அறிக்கை.
ஸ்டார்லிங்க்கின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.