Claim: புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Fact: சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் நெருங்கிய தொடர்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.
சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, 2025 பெப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கொன்றிற்காக அழைத்துவரப்பட்டிருந்தபோது, இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி வேடத்தில் வந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிதாரி மற்றும் அவரது வாகன சாரதி ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சட்டத்தரணி வேடத்திலிருந்த ஒரு பெண்ணும் இந்த முக்கிய குற்றவாளியுடன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் செல்வதையும் காட்டியது. அந்த பெண்ணைப் பற்றி பல்வேறு கூற்றுக்களைக் கொண்ட பதிவுகளும், அந்த பெண் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறி பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அப்பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.


Fact Check/Verification
இந்த சம்பவம் குறித்த முக்கிய சொற்களினூடான தேடலில், சந்தேகத்திற்குரிய பெண் நீர்கொழும்பு, கட்டுவெலேகமவில் வசிக்கும் 25 வயதான இஷாரா செவ்வந்தி என்றும், இவரே துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதை சட்டத்தரணிகள் பயன்படுத்தும் புத்தகமென்றுக்குள் மிகவும் நுட்பமாக மறைந்து வைத்து துப்பாக்கிதாரிக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் பல அறிக்கைகள் வெளியாகியிருந்ததை நாம் அவதானித்தோம். அவ்வறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
ஆனால், செவ்வந்தி கைது செய்யப்பட்டதாக இதுவரை எந்த செய்தியறிக்கையையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை. மாறாக குறித்த சந்தேகத்திற்கிடமான பெண் குறுகிய காலத்தில் கைது செய்யப்படுவார் என இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 23 அன்று, இலங்கை பொலிஸார் செவ்வந்தியைப் பற்றிய புகைப்படங்கள், அவரது தேசிய அடையாள அட்டை எண் மற்றும் அவரது முகவரி உட்பட மேலதிக தகவல்களை பகிரங்கமாக பகிர்ந்து அவரைப் பற்றிய தகவல்களைக் கோரியுள்ளனர்.

பெப்ரவரி 24 அன்று, சந்தேகத்திற்குரிய பெண்ணின் மேலதிக இரண்டு புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு பகிர்ந்திருந்தனர். அவற்றை இங்கே காணலாம்.

பெப்ரவரி 25 அன்று, இந்தப்பெண்ணின் தாய் மற்றும் சகோதரரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகின. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேலும், இலங்கை பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெப்பிரவரி 24 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்று அதிகாரிகள் நம்பும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். செவந்தி இன்னும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று நம்புவதற்கான தகவல்கள் தங்களிடம் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், இலங்கை பொலிஸின் பேஸ்புக் பக்கத்தில் இந்த பெண் மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது, மேலும் அவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கை பொலிஸ் இணையத்தளத்தில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

Conclusion
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைவழக்கில் துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை, அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
Result: False
எமது மூலங்கள்
20.02.2024 அன்று Ada Derana யூடியூபில் வெளியிடப்பட்ட இத்துப்பாக்கிச் சூடு தொடர்பான சிசிடிவி காட்சிகள்.
21.02.2025 அன்று இலங்கை பொலிஸ் இணையத்தளத்தில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரது சாரதி கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
21.02.2025 அன்று BBC சிங்கள செய்தித்தளத்தில் இப்பெண்ணின் விபரங்களுடன் வெளியான செய்தி அறிக்கை.
21.02.2025 அன்று Daily Mirror செய்தித்தளத்தில் இப்பெண்ணின் விபரங்களுடன் வெளியான செய்தி அறிக்கை.
20.02.2025 அன்று இலங்கை பொலிஸ் இணையத்தளத்தில் குறித்த பெண்ணைப் பற்றிய மேலதிக தகவல்களை வழங்குமாறு பொதுமக்களைக் கோரும் செய்தி அறிக்கை.
20.02.2025 மற்றும் 24.02.2025 ஆகிய நாட்களில் குறித்த இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த பெண்ணைப் பற்றிய மேலதிக தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.
24.02.2025 அன்று DailyNews.lk இல் இப்பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
24.02.2025 அன்று குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய இலங்கை பொலிஸின் ஊடக அறிக்கை.
24.02.2024 அன்று Ada Deranaவில் வெளியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.