Claim: இவ்வருட க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதோடு பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் 08 மேலதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதுடன், தரப்படுத்தல் எல்லைகள் 10 மதிப்பெண்களால் குறைக்கப்பட்டுள்ளன.
Fact: வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மேலதிக மதிப்பெண்கள் குறித்த இந்த கூற்றுக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற எந்த முடிவுகளையும் தாம் அறிவிக்கவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L), மாணவர்கள் தங்கள் இடைநிலைக் கல்வியை பூர்த்தி செய்ய நடத்துவிக்கப்படும் ஒரு முக்கிய பொதுப் பரீட்சையாகும். 2024-25 க.பொ.த சா/த பரீட்சை 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இந்நிலையில், மார்ச் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஞ்ஞான பாடத் தேர்வு வினாத்தாள் தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பைப் போல் பகிரப்பட்ட இந்த பதிவில், இவ்வாண்டு க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாளின் கட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றீடான நடவடிக்கையாக, விஞ்ஞான பாட பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மேலதிக எட்டு (08) மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தர எல்லைகள் பத்து (10) மதிப்பெண்களால் குறைக்கப்படும் என்று இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. அதாவது:
25 மதிப்பெண்களைப் பெற்றால் S சித்தி வழங்கப்படும்.
C சித்தி பெற 40 மதிப்பெண்கள் தேவைப்படும்.
B சித்திக்கு 55 மதிப்பெண்கள் தேவைப்படும், அத்தோடு
65 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு திறமைச் சித்தி (A) வழங்கப்படும்.
கல்வி அமைச்சின் அறிவிப்பைப் போல வடிவமைக்கப்பட்ட இந்த பதிவு, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.



Factcheck / Verification
இந்த செய்தியின் நம்பகத்தன்மையை ஆராய நாம் முதலில் பிரதான ஊடக அலைவரிசைகளில் இதுபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்ததில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த செய்திகள் தவறானவை என்று சுட்டிக்காட்டிய சில பதிவுகளை நாம் கண்டோம்.
அதனையடுத்து, இந்த தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நாம் ஆராய்ந்ததில், அங்கு சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தும் ஒரு அறிக்கையைக் கண்டோம்.

அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாளின் கட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் கூறுகின்றன. மேலும், இதனை ஈடுசெய்யும் நடவடிக்கையாக, விஞ்ஞான பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக எட்டு (08) மதிப்பெண்களும் வழங்கப்படுவதோடு, தர எல்லைகள் பத்து (10) மதிப்பெண்களால் குறைக்கப்படும் என்றும், அறுபத்தைந்து (65) மதிப்பெண்களுக்கு மேல் பெறும் எந்தவொரு மாணவருக்கும் திறமைச் சித்தி வழங்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் போலியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை. அத்தகைய முடிவை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் போன்ற எந்தவொரு உத்தியோகபூர்வ அரசாங்க அமைப்பும் வெளியிடவில்லை.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
“கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் அல்லது ஊடக வெளியீடும் புகழ்பெற்ற ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசாங்க வலைத்தளங்கள் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற அனைத்து அறிவிப்புகளும் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பின் கீழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் கையொப்பத்துடன் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே வெளியிடப்படுகின்றன.” எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இதனைப் பதிவிட்டுள்ளது. அந்த பதிவை இங்கே காணலாம்.
Conclusion
இவ்வருட க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதோடு பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் 08 மேலதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதுடன், தரப்படுத்தல் எல்லைகள் 10 மதிப்பெண்களால் குறைக்கப்பட்டுள்ளன என பகிரும் தகவல் தவறானது. இந்த கூற்றுக்கள் போலியானவையெனவும் , அத்தகைய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கையையொன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமைச்சு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
Result: False
எமது மூலங்கள்
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.