Claim: வெளிநாடுகளில் சென்று தொழில்புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு 15% வரி விதிக்கப்படுகிறது.
Fact: இந்த செய்தி உண்மையல்ல என் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்ற அமர்வில் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவை ஏற்றுமதியாளர்களுக்கு 15% வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறை பாராளுமன்றத்திலும் இணையத்திலும் குறிப்பிடத்தக்க விவாதத்தை ஏற்படுத்தியது. நாட்டிற்கு டொலர்களைக் கொண்டுவரும் முக்கிய நபர்களாக இலங்கையிலிருந்து உலகளாவிய நிறுவனங்களுக்காக பணிபுரியும் டிஜிட்டல் துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் காணப்படுகின்றவேளை, இந்த புதிய வரிவிதிப்பானது அவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், “செய்திகள்- நிதர்சனம்” என்ற பேஸ்புக் பக்கத்தில், “வெளிநாட்டு ஊழியர்களும் 15% வரி செலுத்த வேண்டும்” என்ற வார இறுதி அருண பத்திரிகையின் தலைப்புடன் அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலை பத்திரிகை செய்தி நிகழ்ச்சியின் காணொளியொன்று பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த காணொளி “வெளிநாட்டு தொழிலாளர்களின் அடிமடியில் கை வைத்துள்ள அனுர. கோத்தாவின் காலத்தில் இல்லாமல் செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணத்திற்கான வரி மீண்டும் ஏப்ரல் முதல் 15% அறவிடப்படவுள்ளது. ஒருவர் அனுப்பும் முதல் 18 லட்சத்திற்கு வரி விலக்காகவும் அதன் பின்னரான 28 லட்சத்திற்கு 6% வீதமாகவும் 28 லட்சத்திற்கு மேற்பட்டவைக்கு 15% ஆகவும் அனுரவின் அரசு அறவிடவுள்ளது.” எனும் தலைப்புடன் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் சில பேஸ்புக் பயனர்கள், “வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு 15% வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் அனுர தோழர்கள் எங்கே?” மற்றும் “வெளிநாட்டில் பணிபுரியும் 1,50,000 க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் 15% வரி செலுத்த வேண்டும்.” போன்ற வெவ்வேறு தலைப்புகளுடன் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்தகைய பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


Factcheck/ Verification
எமது முதற்கட்ட ஆய்வில், “வெளிநாட்டு ஊழியர்களும் 15% வரி செலுத்த வேண்டும்” என்ற தலைப்பிலான செய்தி வார இறுதி அருண பத்திரிகையில் (සති අග අරුණ) வெளியிடப்பட்டதா என்பதை சரிபார்த்தோம். இந்த தலைப்பிலான செய்தி மார்ச் 2, 2025 அன்று வார இறுதி அருண சிங்கள பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்ததை நாம் உறுதிப்படுத்தினோம். மார்ச் 2,2025 வெளியான வார இறுதி அருண சிங்கள பத்திரிகையின் இலத்திரனியல் பதிப்பின் முதல் பக்கத்தை இங்கே காணலாம்.
தொடர்ச்சியான எமது ஆய்வில் இந்த செய்தியானது வார இறுதி அருண சிங்கள பத்திரிகையைத் தவிர, வேறு எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை என்பதை கண்டறிந்தோம்.
வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கு இந்த வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு அரசாங்கம் எந்த வரியையும் விதிக்கவில்லை எனவும் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவுபடுத்தியிருந்தார்.
புதிய வரி முறையின் கீழ், வெளிநாட்டு சேவை வழங்குநர்களுக்கு முதல் 1,50,000 ரூபாய்க்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அடுத்த 85,000 ரூபாய்க்கு 6 சதவீதம் மட்டுமே விரி வசூலிக்கப்படும், அதற்கு மேலான எந்தவொரு வருமானத்திற்குமான அதிகபட்ச வரி 15 சதவீதத்திற்கு உட்பட்டது எனவும், டிஜிட்டல் சேவை ஏற்றுமதியாளர்களுக்கு, சேவையைப்பெற்றுக்கொள்ளும் நாடுகளில் 15 சதவீதம் வரி அறவிடப்படும் பட்சத்தில் இங்கு அவர்களுக்கு வரி விதிக்காப்படாது என்றும், பிற நாடுகளில் 15 சதவீதத்திற்கும் குறைவாக வரி விதிக்கப்பட்டால், இரட்டை வரி நிவாரணக் கொள்கையின் கீழ் 15 சதவீதம் வரையிலான மிகுத்து வரி மட்டுமே இங்கு வசூலிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.
வெளிநாட்டில் தொழில்புரிவோர் அனுப்பும் பணத்திற்கு அரசாங்கம் எந்தவொரு வருமான வரியையும் விதிக்காது என்று பாராளுமன்றத்திலும் ஊடக நேர்காணல்களிலும் தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும், 02.03.2025 திகதி வெளிவந்த வார இறுதி அருண பத்திரிகையில் வெளிநாட்டில் வேலை செய்து இந்நாட்டிற்கு பணம் அனுப்புபவர்களுக்கும் 15% வரி விதிக்கப்படுவதாகக் வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, 2025 மார்ச் 3 ஆம் திகதி தனது பாராளுமன்ற உரையின் போது உறுதிப்படுத்தினார்.
மேலும், வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 15% ஏற்றுமதி சேவை வரி வெளிநாடுகளில் சென்று தொழில்புரிபவர்களை பாதிக்காது என்று பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெளிவுபடுத்தினார். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், உள்நாட்டு இறைவரிச் சட்டம் குடியிருப்பாளர்களையும் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களையும் தெளிவாக வேறுபடுத்துகிறது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Conclusion
வெளிநாடுகளில் சென்று தொழில்புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு அரசு 15% வரி விதிப்பதாக கூறும் பதிவுகள் தவறானவை. இந்த செய்தி தவறானது என்றும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உறுதிப்படுத்தினார்.
Result: False
எமது மூலங்கள்
02.03.2025 அன்று Rupavahini News YouTube இல் வெளியான புதிய வரி பொறிமுறை குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை.
02.03.2025 அன்று The Morning News தளத்தில் வெளியான புதிய வரி விதிப்பு பற்றிய செய்தி அறிக்கை.
03.03.2025 அன்று பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ X தளமான Manthri.lk இல், வார இறுதி அருண பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி போலியானது என பிரதியமைச்சர் அனில் ஜயந்த வெளியிட்ட அறிக்கையின் காணொளி.
03.03.2025 அன்று Todaynewslk.com பேஸ்புக் பக்கத்தில் வெளியான பிரதியமைச்சர் அனில் ஜயந்தவின் பாராளுமன்ற உரையின் காணொளி.
03.03.2025 அன்று புதிய வரிவிதிப்பு பொறிமுறை தொடர்பில் Newswire இல் வெளியான பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெருமவின் அறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.