Claim: 2025 வரவு செலவுத் திட்ட முன்வைப்பின் போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரொருவர் அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தினார்.
Fact: இந்தக் காணொளி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. மேலும் இந்தக் காணொளியில் உள்ள அமைச்சர் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்ல; அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போதிருந்து, வரவு செலவு திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பல விவாதங்கள் நடந்துவந்ததோடு, பொதுமக்களும் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் அவதூறான வார்த்தையைப் பயன்படுத்திய காணொளியொன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது. பயனரொருவர் ” “NPP අචාර්ය වරු….. හොරො ට වඩා බයානකයි බොරැ කියපු උන්…සදාචාරය (NPPயின் பேராசிரியர்கள்….. பொய் சொல்பவர்கள் திருடர்களை விட ஆபத்தானவர்கள்.. நல்லொழுக்கம்)” என்ற சிங்கள தலைப்புடன் இந்தக் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

மேலும், இதேபோன்ற பதிவுகளை சிலர் பேஸ்புக்கில் பகிர்ந்து, தற்போதைய NPP அரங்கம் குறித்த தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தகைய பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


Factcheck / Verification
சமூக ஊடகங்களில் பரவும் இந்த காணொளி உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, 2025 வரவு செலவு திட்ட முன்னவைப்பின்போது இந்த சம்பவம் குறித்து வெளியான சமீபத்திய முக்கிய செய்தி அறிக்கைகள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். இருப்பினும், அத்தகைய செய்திகள் எதனையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
காணொளியிலுள்ள keyframes ஐ reverse image search முறையில் தேடுதல் மேற்கொண்டு, இந்தக் காணொளி 2022 டிசம்பர் 4 ஆம் திகதியன்று Newscenter.lk பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். “අයවැය අතරතුර රාජ් ය ඇමති කියූ කුණුුහරුපය,” அதாவது “வரவு செலவுத் திட்டத்தின் போது அமைச்சரின் அவதூறான பேச்சு” என்ற சிங்கள மொழியிலான தலைப்புடன் இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.

மேலும் இந்தக் காணொளி, Mawrata News எனும் செய்த்தித்தளத்தில் 2022 டிசம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட “இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டமொன்றின் போது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதையும் எதிர்க்கட்சியினரை இழிவுபடுத்துவதையும் காண முடிந்தது. அவதூறான வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன, அதை பிரதி சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.” எனும் செய்திக் கட்டுரையிலும் இணைக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே 2022 டிசம்பர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்துப்பிரதியான ஹன்சாட்டில் “அவதூறான வார்த்தை ” அகற்றப்பட்டிருப்பதையும் நாம் உறுதிப்படுத்தினோம்.

அத்தோடு, தேனுக விதானகமகே தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பதையும், அவர் தேசிய மக்கள் கட்சியில் அங்கம்வகிக்கவில்லை என்பதையும் நாம் உறுதிப்படுத்தினோம். இவர் இலங்கையின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாராளுமன்றங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார். அவர் கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தார். மேலும், அவரது கல்வித் தகைமையில் அவர் கலாநிதிப் பட்டம் பெற்றவரல்ல என்பதும், அவர் உயர்தரம் (A/L) வரையிலான கல்வித்தகைமையை கொண்டிருப்பதும் இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடுடபட்டுள்ளது.

Conclusion
2025 வரவு செலவுத் திட்ட முன்வைப்பின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறும் காணொளி தவறானது. இந்த காணொளி உண்மையில் 2022 டிசம்பர் 3 ஆம் திகதி நடந்த பாராளுமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்டது. பெரமுனவின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார். இவர்கடந்த அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.
Result: False
எமது மூலங்கள்
04.12.2022 அன்று Newscenter.lk பேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளி.
04 .12.2022 அன்று Mawrata News இல் இக்காணொளியுடன் வெளியான செய்தி அறிக்கை.
03.12.2022 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஹன்சார்ட் அறிக்கை.
14.09.2022 அன்று வெளியான இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்.
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கல்வித் தகைமைகள்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.