Claim: தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒரு கிலோ ‘லக் லுனு’ உப்பின் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளது.
Fact: ‘லக் லுனு’ உப்பின் உற்பத்தியாளரான அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம், உப்பு இறக்குமதி காரணமாக தமது உற்பத்திப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை அறிவித்த போதிலும், ஒரு கிலோ உப்பிற்கான விலை இன்னும் 250 ரூபாயை எட்டவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு கிலோ ‘லக் லுனு’ கல்உப்பின் தற்போதைய விலை 180ரூபாய் ஆகும்.
அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் பிரபல்யமான 1 கிலோ “லக் லுனு” உப்பு பக்கட்டின் படத்துடன் “புரட்சிக்கு முன்னர் 110 ரூபாவாக இருந்த உப்பின் விலை தற்போது 250 ரூபாவாக அதிகரித்துள்ளது” என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது. இப்பதிவுகள் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்தோடு, “நீங்கள் ஒரு சிறுவனால் ஏமாற்றப்பட்டீர்கள், இறுதியில் உங்களுக்கு உப்பு கூட இல்லை” எனும் சிங்கள மொழியிலான வாசகத்தையும் கொண்டுள்ளது.
இந்த பதிவை டிக்டொக், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் நாம் அவதானித்தோம். அப்பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதேபோல், பக்கெட்டின் பிற்புற படத்தை மட்டும் கொண்ட மற்றுமொரு வகைப் பதிவு பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பகிரப்பட்டதனையும் நாம் அவதானித்தோம். இப்பதிவுகள் “75 ஆண்டுகளாக, உப்பின் விலை 35 ரூபாயிலிருந்து 85ருபாய் வரை மட்டுமே உயர்ந்தது, ஆனால் ஒரு மறுமலர்ச்சிக்குப் பிறகு அது 250 ரூபாயாக உயர்ந்தது”, “76 ஆண்டுகளாக, உப்பு 85 ரூபாயாக இருந்தது, 77 வது ஆண்டில் அது 250 ரூபாயாகியது” , “வெற்றியை அமைதியாக கொண்டாடுவோம். ஒரு பக்கெட் உப்பின் விலை 250 ரூபாய்.” போன்ற கருத்துக்களுடன் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். எனினும், இந்தப் பதிவுகள் எதுவும் உப்பின் வகை அல்லது உப்பு பக்கெட்டின் அளவு பற்றி எந்தக்கருத்துக்களையும் கொண்டிருக்கவில்லை.

Fact Check/Verification
இப்பதிவுகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில் “உப்பு விலை,” “லக் லுனு” மற்றும் “லங்கா உப்பு” போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி நாம் தேடலொன்றை மேற்கொண்டோம். அதன்போது சமீபத்தில் இந்தியாவிலிருந்து மூல உப்பு இறக்குமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உப்பின் விலை அதிகரிக்கபட்டிருப்பத்தைக் காட்டும் பல செய்தி அறிக்கைகளை நாம் கண்டோம்.
அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தந்திலக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை காரணமாகவே இந்த விலை உயர்த்தப்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளார். அதன்போது தமது நிறுவன உற்பத்தியில் 400 கிராம் மேசை உப்பு பக்கெட்டின் விலை 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், 1 கிலோ கல் உப்பின் விலை 120 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், இந்த விலை உயர்வு ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், மார்ச் மாதத்திற்குப் பிறகு விலைகள் பழைய நிலைகளுக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த செய்தியறிக்கைகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
“கடந்த 76 ஆண்டுகளாக உப்பின் விலை 85 ரூபாய்க்குள் இருந்தது என்றும், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த ஆண்டு உப்பு விலையில் கடுமையான மாற்றம் திடீரென ஏற்பட்டது.” எனும் பதிவு தொரபிலும் நாம் ஆராய்ந்தோம். அந்தவகையில் இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் “கொழும்பு மாவட்டத்தின் பிரதான சந்தைகளின் விலைகளை மையப்படுத்திய திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள்” எனும் தலைப்பில் பட்டியலிடப்பட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் காணப்பட்ட ஒரு கிலோ உப்பின் விலை என்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தோம். அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 கிலோ பக்கெட் உப்பின் விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளின் அடிப்படையில், தற்போதைய அரசாங்கத்திற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஒரு கிலோ உப்பின் விலை 85 ரூபாவுக்குள் காணப்படவில்லை என்பதும், ஒவ்வொரு ஆண்டும் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
தற்போதைய விலை உயர்வுக்கான காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையைத் தடுப்பதற்காக 30,000 மெட்ரிக் தொன் வரையிலான அயடினேற்றப்படாத உப்பை இறக்குமதி செய்ய 2024 டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் (STC) இவ்விறக்குமதி நிர்வகிக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்தியை பாதித்த பாதகமான காலநிலை காரணமாக உள்நாட்டு உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சவால்களை வெற்றிகொள்ளவும், எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், உப்பு இறக்குமதி செய்ய அனுமதி கோரி தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்தன.

உப்பு பற்றாக்குறை குறித்து இவ்வருடம் பெப்ரவரி 3 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் உப்பு நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர், அரசாங்கத்தின் இறக்குமதி வரி காரணமாக உப்பு விலை அதிகரிக்கும் என்று உப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
Conclusion
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் 1 கிலோ உப்பின் விலை 250 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ‘லக் லுனு’ உப்பு பக்கட்டின் படத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தமது உற்பத்திகளுக்கு புதிய விலையை அறிவித்துள்ளதுடன், உப்பு இறக்குமதி காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உப்பின் விலை இன்னும் 250 ரூபாயை எட்டவில்லை என்பதை செய்தியறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றது. மேலும், ஒரு கிலோ பக்கெட் உப்பின் விலை முன்னைய ஆண்டுகளில் 85 ரூபாய்க்குள் கட்டுப்பட்டிருக்கவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் விலைகள் மாறுபட்டுள்ளன என்பதையும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
Result: False
எமது மூலங்கள்
06.02.2025 அன்று themorning.lkஇல் வெளியான செய்தி அறிக்கை
03.02.2025 அன்று DailyMirror.lkஇல் வெளியான செய்தி அறிக்கை
06.02.2025 அன்று Adaderan.lkஇல் வெளியான செய்தி அறிக்கை
06.02.2025 அன்று Newswire.lkஇல் வெளியான செய்தி அறிக்கை
18.12.2025 அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊடக அறிக்கை
கடந்த ஐந்து வருடங்களுக்கான ‘கொழும்பு மாவட்டத்தின் பிரதான சந்தைகளின் விலைகளை மையப்படுத்திய திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள்‘ பற்றிய இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள்.
03.02.2025 அன்று Voice Tube YouTubeஇல் வெளியான உப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் அறிக்கைகளைக் கொண்ட வீடியோ
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.