Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
Claim: புதிய அரசாங்கம் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை 76,000 ரூபாயிலிருந்து370 ரூபாயாக குறைத்துள்ளது.
Fact: புற்றுநோய்க்கான தடுப்பூசி Papaverine இன் விலை குறைக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது எனவும் Papaverine புற்றுநோய்க்கான தடுப்பூசியில்லையெனவும், அது இருதய சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்தெனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய அரசாங்கம் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை 76,000 ரூபாயிலிருந்து 370 ரூபாயாக குறைத்துள்ளதாக பல சமூக ஊடக பயனர்கள் மற்றும் செய்தி வலைத்தளங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.
பேஸ்புக்கில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் புகைப்படத்துடன் இதனை பதிவிட்டிருந்த பயனர் ஒருவர், “76000 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Cancer மருந்து அதே நிறுவனத்திடமிருந்து 370 ரூபாய்க்கு.” எனக்குறிப்பிட்டு இவ்விலைக்குறைப்பிற்காக அரசாங்கத்தை வாழ்த்தியும், பிற்குறிப்பில் மருந்தின் பெயர் Papaverine injection BP 60mg/2ml (anti-cancer drug) என அறியமுடிகிறது எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
“கடந்த காலங்களில் புற்று நோயாளிகளுக்கு 76 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட மருந்தை இப்போது நாம் 370 ரூபாவுக்கு வழங்குகிறோம் ; சுகாதார பிரதியமைச்சர்” எனும் தலைப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் புகைப்படத்துடன் Madawalanews இணையத்தளம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
“புற்றுநோய் மருந்து விலை ரூ .76,000 முதல் ரூ .370 வரை வீழ்ச்சியடைந்த கதை முற்றிலும் சரியானது – சுகாதார பிரதி அமைச்சர்” எனும் கூற்றுடன் சுகாதார பிரதி அமைச்சர் பேசும் காணொளியை @breakingnewssl3178 எனும் YouTube பயனர் பகிர்ந்திருந்தார்.
பேஸ்புக் மற்றும் செய்தி வலைத்தளங்களில் இதேபோன்ற கூற்றுக்களை நியூசெக்கர் குழு கண்டறிந்தது. அவ்வாறான பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல பதிவுகள் ‘லங்காதீப’ இணையத்தளத்தில் வெளியான ஒரு செய்தியை ஆதாரமாகக் குறிப்பிவிட்டிருந்தன. இந்த கூற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, நாங்கள் முதலில் லங்காதீப இணையதளத்தில் இது குறித்த தேடலை மேற்கொண்டோம். சுகாதார மற்றும் ஊடக பிரதியமைச்சர் ஹன்சக் விஜயமுனி பகிர்ந்த அறிக்கையின் அடிப்படையில் லங்காதீப தொலைக்காட்சியில் வெளியான ‘76,000 ரூபா விலையுள்ள புற்றுநோய் மருந்தை 370 ரூபாவுக்கு கொண்டு வந்தோம்‘ என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையை நாங்கள் கண்டோம். இருப்பினும், குறிப்பிட்ட மருந்தின் பெயர் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இதனடிப்படையில், சுகாதார மற்றும் ஊடக பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்த கருத்தை நாம் இச்செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்தோம். “இதுவரை மருந்துகள் ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன, இதன் விளைவாக ஒரு நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை கிடைக்கப்பெற்றது. எவ்வாறாயினும், சுகாதார அமைச்சு இப்போது மருந்துகளை இறக்குமதி செய்ய ஏனைய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது, இது மருந்துகளின் விலைகளை 200% ஆல் குறைக்க வழிவகுத்தது. இதன் விளைவாக 70,000 விலையில் இருந்த மருந்து தற்போது 370 ஆக குறைக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது உரையில் எந்தவொரு மருந்தின் பெயரோ அல்லது அதன் பாவனை பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
அமைச்சர் தனது அறிக்கையில் எந்தவொரு மருந்தின் பெயரையோ அல்லது அதன் தொழிற்பாடு பற்றியோ குறிப்பிடாத போதிலும், “நாங்கள் ரூ.76,000 விலையுள்ள புற்றுநோய் மருந்தை 370 ரூபாவுக்கு கொண்டு வந்தோம்” என்ற தவறான தலைப்புடன் லங்காதீப இணையதளம் தவறாக செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், சமூக ஊடக பதிவுகளின் தடுப்பூசியின் பெயர் ‘papaverine’ என்று குறிப்பிட்டிருந்த கருத்தை நாம் ஆராய்ந்தோம். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சவீன் செமகே ஆகியோர் தெரண தொலைக்காட்சியின் Big Focus நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேளையில், ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைப் போல ‘Papaverine’ புற்றுநோய்க்கான தடுப்பூசி அல்ல, அது இதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.
2025 ஆம் ஆண்டிற்கான Papaverine தடுப்பூசி இதுவரை வாங்கப்படவில்லை என்று வைத்தியர் செமகே வலியுறுத்தினார், அதேவேளை தடுப்பூசியின் விலைக் குறைப்பு அசாதாரணமாகத் தோன்றினாலும், அது பொய்யல்ல என்றும் அவர் கூறினார்.
Papaverine Hydrochloride முதன்முதலில் 2018 இல் 76,000 ரூபாய்க்கு விற்கப்பட்டபோது விலைக் கட்டுப்பாடுகள் இல்லாததால் அதன் விலை அதிகமாக இருந்தது. அந்நேரத்தில் பிராந்திய விலைகளுடன் ஒப்பிட்டு இலங்கையில் மருந்துகளின் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. அண்மையில் சிறப்பு மருத்துவரகள் உள்ளிட்ட விலைக்கட்டுப்பாட்டு நிர்ணய குழு இந்த மருந்தின் அசாதாரண விலையைக் கண்டறிந்த பின், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விலையை ரூ .370 ஆக திருத்தியது என வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெளிவுபடுத்தினார்.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் இம்மருந்திற்காக அரசாங்கம் 342.49 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், இதன் விலை ரூபா 34,000 முதல் ரூபா 76,000 வரை (2018: 76,500; 2019: 34,000; 2020: 35,000; 2021: 41,000; 2022: 72,500; 2023: 50,776) இருந்திருக்கிறது என தெளிவுபடுத்தினர். மேலும், 2024ஆம் ஆண்டில் இந்த மருந்துக்கான நிலையான விலை 81,327.44 ரூபாய் என இது மருத்துவ வழங்கள் பிரிவின் இணையதளத்தில் ‘மதிப்பிடப்பட்ட பொருள் பட்டியல் – ஆண்டு 2024’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான Papaverine தடுப்பூசி இதுவரை வாங்கப்படவில்லை என்று வைத்தியர் செமகே கூறினார். அதேபோல் இந்த விலை குறைப்பு அசாதாரணமாகத் தோன்றினாலும், அது பொய்யல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். மேலும் Papaverine மருந்தின் தற்போதைய விலை 370 ரூபாய் என பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி அரச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் வலைத்தளம் உட்பட ஏனைய மருந்தகங்களின் வலைத்தளங்களில் Papaverine Hydrochlorideஇன் தற்போதைய விலையைக் கண்டறிய முயற்சித்தோம், ஆனால் எந்த மருந்தக தளங்களிலும் மருந்தின் விலை கணக்கிடைக்கவில்லை.
மேலும், தற்போதைய விலை குறித்து விசாரிக்க நாங்கள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை தொடர்பு கொண்டபோது, விநியோகப்பிரிவான ஒசுசலவில்விலையை சரிபார்க்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நாங்கள் ஒசுசலவை தொடர்புகொண்டபோது, தற்போது அம்மருந்து தமது கையிருப்பிலில்லை எனவும், விலை புதிய மருந்தின் இறக்குமதியைப் பொறுத்தது என்றும் தெரிவித்தனர்.
புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலையை அரசாங்கம் 76,000 ரூபாயில் இருந்து 370 ரூபாய் வரை குறைத்ததாக கூறும் செய்தி தவறானது. Papaverine புற்றுநோய்க்கான தடுப்பூசியில்லையெனவும், அது இருதய சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்தெனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. முன்னைய அரசாங்கங்கள் டெண்டர் இல்லாமல் ஒற்றை விநியோகஸ்தர் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்ததே மருந்துகளின் விலை உயர்விற்கான காரணம் என்றும், தற்போதைய விலைக் குறைப்பானது ஒற்றை விநியோகஸ்தருக்கான ஏகபோகங்களை அகற்றி சந்தைப் போட்டியை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எமது மூலங்கள்
20.01.2025 அன்று Hiru TV YouTube இல் வெளியிடப்பட்ட மருந்துகளின் விலைக் குறைப்பு குறித்த சுகாதார மற்றும் ஊடக பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனியின் அறிக்கை
21.01.2025 அன்று ITN YouTube இல் வெளியான NMRA இன் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவின் அறிக்கை
20.01.2025 அன்று ADA DERANA YouTube BIG FOCUS நிகழ்ச்சியில் வெளியான NMRA தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியின் அறிக்கை
21.01.2025 அன்று ADA DERANA YouTube இல் வெளியான அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு
20.01.2025 அன்று Rupavahini News YouTube இல் வெளியான சுகாதார மற்றும் ஊடக பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனியின் அறிக்கை
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
மருத்துவ வழங்கல் பிரிவின் இணையத்தளம்
அரச ஒசுசலவில் பெறப்பட்ட(SPC) அறிக்கை
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.
Keerthika Mahalingam
March 10, 2025
Keerthika Mahalingam
March 5, 2025
Keerthika Mahalingam
February 17, 2025