புற்று நோய்க்கான சிகிச்சை தொடர்பில் விஞ்ஞான சமூகம் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சூடான அன்னாசி நீர் மூலம் “புற்று நோயை வெல்லலாம்” என்ற பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
வாட்ஸ்அப் குழுக்களில் பரவும் இந்த வைரல் செய்தியின் படி, அன்னாசிப்பழத்தின் சில துண்டுகளை வெந்நீரில் சேர்த்து தயாரிக்கப்படும் கலவையை குடிப்பதன் மூலம் இந்த நோயை எதிர்த்துப் போராடும் திறனை உடலில் அதிகரிக்க முடியும். மாறாக, சூடான அன்னாசி நீர் புற்று நோயை குணப்படுத்தாது. இதனால், குறித்த கூற்று தவறானது என்பதை நியூஸ்செக்கர் கண்டறிந்துள்ளது
2021ஆண்டும் இந்த கூற்று சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்தப் பதிவு உண்மை என்று நம்பி பல பயனர்கள் பகிர்ந்து கொண்டனர். அத்தகைய ஒரு பதிவினை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
ஐசிபிஎஸ் பொது மருத்துவமனையின் பேராசிரியரான டாக்டர் கில்பர்ட் ஏ. குவாகினை மேற்கோள்காட்டி வைரலாக பரப்பப்படுகின்ற இந்த செய்தியில், “சூடான அன்னாசி நீர் புற்று நோய் எதிர்ப்பு பொருட்களை வெளியிடுகிறது. இது பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவத்தின் அண்மைய முன்னேற்றமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50% வாக்குகளைப் பெற்றாரா?
“சூடான அன்னாசிப் பழம் நீர்க்கட்டிகள் மற்றும் கட்டிகளைக் அழிக்கும் தன்மை கொண்டது. அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்பத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமையின் காரணமாக உடலிலுள்ள அனைத்து கிருமிகளையும் நச்சுகளையும் சூடான அன்னாசி நீர் அழிக்கும். அன்னாசி சாறு கொண்ட மருந்து வகை அபாயகரமான உயிரணுக்களை மட்டுமே அழிக்குமே தவிர ஆரோக்கியமான உயிரணுக்களை பாதிக்காது.
இதற்கு மேதிகமாக, அன்னாசிப் பழச்சாற்றில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் அன்னாசிப் பாலிஃபீனால்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சரிசெய்துஇ இக்கட்டிகளைக் குறைக்கும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact check/Verification
இந்த விடயம் தொடர்பில் விரிவான ஒரு தேடலை மேற்கொண்ட போதிலும் இப்பெயருடன் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும் பேஸ்புக்கில் “அன்னாசி சுடு நீர்” என்ற முக்கிய வார்த்தையை பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொண்டோம்.
அப்போது இதே தகவலைப் பகிர்ந்த பல பதிவுகளைக் கண்டோம். ஆனால் இந்தப் பதிவுகள் குவாக்கிற்குப் பதிலாக டாக்டர் கில்பர்ட் ஏ. கவாக்கினை மேற்கோள்காட்டி, அவரை ஐசிபிஎஸ் வைத்தியசாலையின் வைத்தியர் என்று அடையாளப்படுத்தியது. இருப்பினும், கில்பர்ட் அனிம் கவாக்கி என்பவரின் லிங்டின் கணக்கை நாங்கள் கண்டறிந்தோம். அதில் அவர் கானா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆசிரியர் என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
thereporters.com.ng என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான ஒரு அறிக்கையையும் நாங்கள் கண்டோம். அதில் அந்த வைத்தியர் சானாவில் உள்ள ஐசிபிஎஸ் வைத்தியசாலையில் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை.
சானாவில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவர் பற்றிய எமது மேலதிக தேடல் எந்த எந்த முடிவையும் தரவில்லை. இதனால் அப்படியான ஒரு நபர் இல்லை என்ற முடிவை எம்மால் எடுக்க நேர்ந்தது.
புற்றுநோயில் அன்னாசிப்பழத்தின் விளைவுகள் தொடர்பில் நியூஸ்செக்கர் மேலும் தேடலை முன்னெடுத்தது. இதன்போது தைவானில் உள்ள மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில், அன்னாசிப் பழம் மற்றும் அதன் தண்டுகளில் காணப்படும் ப்ரோமெலைன் என்ற நொதிகள், ‘பெருங்குடல் புற்றுநோய் (பெருங்குடல் புற்றுநோய்)’ பெருகும் திறனைத் தடுக்கிறது என்பதை முதலில் கண்டறிந்தோம்.
Also Read: இலங்கைக்கு கொரோனா வைரஸை முஸ்லிம்கள் கொண்டு வந்தனர் என சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினாரா?
“ப்ரோமெலைன் உயிரணு வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் வெவ்வேறு பாதைகள் மூலம் வெவ்வேறு புற்றுநோய்களில் செல் அப்போப்டொசிஸை தூண்டும் என்று பல கற்கைகள் காட்டுகின்றன” என்று ஆய்வுக் கட்டுரையொன்று கூறுகிறது. எவ்வாறாயினும், ப்ரோமைலைன் மனிதர்களில் புற்றுநோயை கணிசமாக பாதிக்கும் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ப்ரோமெலைன் என்பது புரத மூலக்கூறுகளை உடைத்து அன்னாசிப் பழத்தின் தண்டுகளிலிருந்து பெறப்படும் ஒரு நொதியமாகும். ஆய்வக சோதனைகளில், ப்ரோமிலைன் இரத்தம் உறைவதைத் தடுத்ததுடன் வீக்கத்தையும் குறைத்தது. எனினும், மனிதர்கள் தொடர்பான ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. மருத்துவ அமைப்புகளில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது, தீக்காயங்களினால் இறந்த மற்றும் சேதமடைந்த டிசுக்களை அகற்ற உதவுகிறது.
செரிமானம் மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவ ப்ரோமெலைன் சில நேரங்களில் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. மனிதர்களில் புற்றுநோயின் விளைவுகள் குறித்தும் இது ஆய்வு செய்யப்படவில்லை. ப்ரோமைலைன் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் உறிஞ்சுதலை அதிகரிக்கக் கூடும்” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஏனைய பழங்களைப் போலவே – ஆப்பிள் மற்றும் வெண்ணெய் உட்பட அன்னாசிப்பழங்களும் ஆரோக்கியமானவை” என இந்தோனேசிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரான பேராசிரியர் டாக்டர் அரு விசாக்சோனோ சுடோயோவை மேற்கோள் காட்டி ஏஎப்பி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
“அவை பொதுவான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆதரிக்கக்கூடிய பழங்கள். அதற்கு மேல் எதுவுமில்லை. அன்னாசிப்பழம் உள்ளிட்ட ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். அவை மருத்துவ சிகிச்சைகள் அல்லது நோய்க்கான சிகிச்சைகளுக்கு சமமானவை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்”.
இதற்கு மேலதிகமாக இந்தியாவின் கேரளாவில் உள்ள காரிடாஸ் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மூத்த புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோஜோ வி ஜோசப்பை நியூஸ்செக்கர் அணுகிய போது, இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அன்னாசிப்பழம் – ஒரு பழமாக உங்கள் உணவிற்கு நல்லதாகும். அதனால் கூடுதல் நன்மை எதுவுமில்லை. இது புற்று நோய்க்கு மாய சிகிச்சை அல்ல. புற்றுநோய்க்கான மருந்தாக இதைப் பயன்படுத்த முடியாது. நீண்ட நாட்களுக்கு சாப்பிடுவது புற்றுநோயைத் தடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்காது” என்றும் டாக்டர் ஜோஜோ கூறினார்.
அன்னாசிப்பழத்தின் ‘காரத்தன்மை’ குணம் குறித்துப் பேசிய போது, “அன்னாசி ஒரு அமிலப் பழம். ஒருவர் எவ்வளவு உட்கொண்டாலும் அன்னாசிப் பழத்தின் PH அளவு 3-4 ஆக இருக்கும். இது ஒருபோதும் காரமாக மாறாது” என டாக்டர் ஜோஜோ கூறினார்.
Also Read: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் வைரல் புகைப்படம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னையது
Conclusion
புற்று நோய்க்கு மருந்தாக சூடான அன்னாசி தண்ணீரை பயன்படுத்தலாம் என்ற கூற்று தவறானது என்று நியூஸ்செக்கர் ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தியது. அத்துடன் சூடான அன்னாசி நீர் புற்று நோயை குணப்படுத்தாது. அத்துடன் அன்னாசிப்பழத்தில் உள்ள நொதி, உயிரணு வளர்ச்சியைத் தடுக்கலாம். அத்துடன் சோதனைக் குழாய் அமைப்புகளில் வெவ்வேறு புற்று நோய்களில் உயிரணு அப்போப்டொசிஸை தூண்டலாம் என்றாலும், அது புற்றுநோய்க்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
Result: தவறானது/ False
Our Sources
Memorial Sloan Kettering Cancer Center
National Medical Library of India
AFP
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்