Claim: சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச் சீட்டின் புகைப்படம், ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று பதிவான வாக்குச் சீட்டின் புகைப்படம்.
Fact: இந்த கூற்று தவறானதாகும். தபால் மூல வாக்களிப்புக்காக விநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டையே இந்த புகைப்படம் காட்டுகின்றது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டு என்று கூறி வாக்குச்சீட்டொன்றின் புகைப்படத்தினை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், அப்போதைய வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டதைக் காட்டுகிறது.
இந்தப் பதிவு டிக்டக், பேஸ்புக் மற்றும் எலக்கிரி போன்ற ஏனைய சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை நியூஸ்செக்கர் கவனித்தது. அத்தகைய பதிவுகளின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்புகளை இங்கே, இங்கே, இங்கே, பார்வையிட முடியும்.
வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டினை புகைப்படமாக அல்லது வீடியோவாக எடுக்க இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது வைரலாகியுள்ள படத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க நியூசெக்கர் முடிவு செய்தது.
Also Read: ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50% வாக்குகளைப் பெற்றாரா?
Fact check/ Verification
இந்த புகைப்படம் @nilmeenyasantha என்ற பயனரின் டிக்டோக்கில் 2024.09.22ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதை நியூசெக்கர் குழு முதலில் கண்டது. இந்த படத்தினை ரீவர்ஸ் ஈமேஜில் தேடல் மேற்கொண்ட போது செப்டம்பர் 21ஆம் திகதி ஆகக் குறைந்தது இரண்டு பேஸ்புக் கணக்குகளில் இந்த புகைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.
தேர்தலுக்கு முன்னதாக (செப்டம்பர் 20) ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எலகிரி மன்றத்தில் இந்த பதிவை கண்டுபிடிக்க முடிந்தது. “நாளைய வாக்களிப்புக்கு முன்னதாக யாராவது பார்க்க மற்றும் தெரிந்திருக்க வேண்டிய வாக்குச் சீட்டுகளின் உதாரணமாக இந்த பதிவு இருக்கிறதா” என குறித்த பயனர் கேட்டிருந்தார்.
வாக்களிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னைய நாள் இரவு யாரோ ஒருவர் வாக்குச் சீட்டைக் கண்டுபிடிக்க முடியும் என்ற சந்தேகத்தினை கருத்திற் கொண்டு, நியூஸ் செக்கர் குழு “இலங்கை ஜனாதிபதித் தேர்தல்”, “வாக்குச் சீட்டு”, “இலங்கை தேர்தல் சட்டங்கள்” மற்றும் “அநுர குமார திசாநாயக்க” என்ற முக்கிய சொற்களில் ஒரு தேடலை மேற்கொண்டது.
இதன்போது, ஒரு சம்பவம் குறித்து பல செய்தி அறிக்கைகளைக் கண்டது. அதாவது, தபால் மூல வாக்களிப்பினை மேற்கொண்ட ஒருவர், தனது வாக்குச்சீட்டினை அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என்பதை எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. கடந்த 2024.09.07ஆம் திகதி வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக இந்த செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. தபால் மூல வாக்களிப்பு கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024.09.12ஆம் திகதி இலங்கை ஊடக சங்கத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழு மேற்படி நிலைமை காரணமாக எவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் தங்கள் கையடக்க தொலைபேசியினை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டதை நாங்கள் மேலும் கண்டறிந்தோம். இந்த செய்தியாளர் சந்திப்பை இங்கே காணலாம்:
வாக்காளர்கள் தமது தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார். இந்த விதிமுறைகளை மீறும் எவரும் தேர்தல் சட்டங்களின்படி கைது செய்யப்பட்டு 400,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read: இலங்கைக்கு கொரோனா வைரஸை முஸ்லிம்கள் கொண்டு வந்தனர் என சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினாரா?
இதே செய்தி டெய்லி மிரர் மற்றும் நியூஸ்வயர் ஆகிய இணையத்தளங்களில் செப்டெம்பர் 13ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக நாட்டில் உள்ள தேர்தல் சட்டங்கள், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டங்கள் குறித்து நியூஸ் செக்கர் குழு ஆராய்ந்தது.
1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு கடைசியாக 1988 இல் திருத்தப்பட்டது என்பதால், சட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் குறித்து சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், பிரிவு 33 (3) இல் எந்தவொரு நபரும் வாக்களிக்கும் நேரத்தில் தேர்தல் அதிகாரிகளின் விதிகளை தவறாக நடத்தினால் அல்லது பின்பற்றவில்லை என்றால், அவர் தேர்தல் தொடர்பான குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படலாம், மேலும் முடிவெடுப்பதற்கும் தண்டனைக்கும் ஒரு நீதவானிடம் கொண்டு செல்லப்படும் வரை காவலில் வைக்கவும் முடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், அதாவது 2023 ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள் சட்டம்) மூலம் இலங்கையில் தேர்தல்களுக்கான அபராதத் தொகை இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையில் திருத்தப்பட்டது.
அதன் படி, சட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அட்டவணைகளின் படி – இந்த வகையான தேர்தல் தொடர்பான குற்றத்திற்கு 50,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை அபராதம் விதிக்க முடியும்.
Conclusion
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டு என்று வைரலாகும் படம் தவறானதாகும். தபால் மூல வாக்களிப்பின் போது வாக்களிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வாக்குச்சீட்டையே படத்தில் காணலாம்.
Result:தவறானது/False
Our sources
சுய பகுப்பாய்வு
2024.09.12ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக மாநாடு
2024.09.07ஆம் திகதிய ஹிரு தொலைக்காட்சியின் செய்தி அறிக்கை
2024.09.07ஆம் திகதிய நியூஸ்பெஸ்டின் செய்தி அறிக்கை
2024.09.13ஆம் திகதிய டெய்லிமிரரின் செய்தி அறிக்கை
2024.09.07ஆம் திகதிய நியூஸ்வயரின் செய்தி அறிக்கை
1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 33ஆவது பிரிவு
2023ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள) சட்டத்தின் பகுதி I & II
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்