Claim: ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50% வாக்குகளைப் பெற்றார் என்ற பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
Fact: இது தவறான பதிவாகும். ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 42.31% வாக்குகளைப் பெற்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50% வாக்குகளைப் பெற்றார் என்ற டிக்டொக் வீடியோவொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த பதிவு டிக்டொக்கில் @deyyai..manikai..youtube எனும் பெயரிலேயே பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு 4,500க்கு மேற்பட்ட விருப்பங்களையும் 600 பகிர்வுகளையும் கொண்டிருந்தது.
இதே வடிவமைப்புடனான பதிவு பேஸ்புக்கிலும் இதே போன்ற தலைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாக வாக்கெண்ணும் நடவடிக்கை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இந்த முறையே முதற் தடவையாக இடம்பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் இறுதித் தேர்தல் முடிவு தொடர்பான தவறான செய்திகள் மற்றும் பிழையாக வழிநடத்தப்படும் அறிக்கைகளும் சமூக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்டன.
பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை உண்டாக்கும் நோக்கிலும் பிழையான தகவல்களை வழங்கும் நோக்கிலும் பொய்யான முடிவுகள் பகிரப்பட்டன.
Also Read: இலங்கைக்கு கொரோனா வைரஸை முஸ்லிம்கள் கொண்டு வந்தனர் என சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினாரா?
Fact check/Verification
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க , முதல் சுற்றில் 50.3% வாக்குகளை பெற்றார் என்று பகிரப்படும் சமூக ஊடக பதிவுகள் தொடர்பில் நியூஸ்செக்கர் தேடலை ஆரம்பித்தது.
எமது தேடலின் போது எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை முதல் சுற்றில் பெறவில்லை என்பதை கண்டறிந்தோம். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், 2ஆம் மற்றும் 3ஆம் வாக்கெண்ணும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுகளின் பிரகாரம் அனுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42.31 சதவீதத்தினையும் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 சதவீதத்தினையும் பெற்றார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 சதவீதத்துடன் 3ஆம் இடத்தினைப் பெற்றார்.
விருப்பு வாக்கு என்றால் என்ன?
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம், ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்க செல்லுபடியான வாக்குகளில் 50%+1க்கு மேல் பெற வேண்டும்.
எந்தவொரு வேட்பாளரும் இந்த வரம்பை எட்டாததால், தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி வாக்காளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை கணக்கிட்டது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றமை இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். மீதமுள்ள 36 ஜனாதிபதி வேட்பாளர்களிடமிருந்து இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சஜித் பிரேமதாச 167,867 வாக்குகளையும் அநுரகுமார திஸாநாயக்க 105,264 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இறுதியாக, அனுர குமார திசாநாயக்க தேர்தலில் 50% வாக்குகளைப் பெறாவிட்டாலும் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அவரை அறிவித்தது.
Also Read: பேராசிரியர் மெத்திகா விதானகே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவா? தவறான கூற்றுடன் எடிட் செய்யப்பட்ட படம்
Conclusion
அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்ற கூற்று தவறானதாகும். முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Result: False
Our Sources
விருப்பு வாக்கு எண்ணுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு தொடர்பான பேஸ்புக் வீடியோ
தேர்தல் ஆணைக்குழுவின் இறுதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பான பேஸ்புக் வீடியோ
தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இறுதித் தேர்தல் முடிவு
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்