Claim: கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடும் காணொளி.
Fact: இது உண்மையல்ல. இந்த காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் 2025.02.19 ஆம் திகதி மாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, சந்தேக நபர் சிரிப்பதையும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் நட்புடன் உரையாடுவதையும் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
CCTV Sri Lanka 01 என்ற யூடியூப் கணக்கில் ‘ගණේමුල්ල සංජීවයකගේ වෙඩික්කරු,’ அதாவது ‘கனேமுல்ல சஞ்சீவவை சுட்டவர்’ என சிங்கள மொழியிலான தலைப்புடன் இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது.

இதே காணொளி tikuu_2024 என்ற டிக்டொக் கணக்கிலும் “ලංකාවෙ කෙල්ලන්ගෙ Crush එක 🥹♥️” அதாவது “இலங்கை பெண்களின் தற்போதைய Crush” எனும் சிங்கள மொழியிலான தலைப்புடன் இந்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது.

“அழகான கொலையாளி”, “நீதிமன்றத்தில் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த சிறுவன்” போன்ற தலைப்புகளுடன் இந்த காணொளி டிக்டொக்கில் வைரலாகி வருவதையும் நாங்கள் கவனித்தோம். அப்பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.






டிக்டொக் தவிர, இந்த காணொளி யூடியூப் மற்றும் பேஸ்புக்கிலும் வெவ்வேறு தலைப்புகளுடன் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



சம்பவத்தின் பின்னணி
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, 2025 பெப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கொன்றிற்காக அழைத்துவரப்பட்டிருந்தபோது, இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி வேடத்தில் வந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சட்டத்தரணி வேடத்தில் வந்த பிரதான சந்தேக நபர், அன்றைய தினமே மாலை புத்தளம் பாலாவிய பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Fact Check/ Verification
சமூக ஊடகங்களில் பரவும் இந்த காணொளி உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான ஊடகங்களில், குறிப்பாக தொலைகாட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்தோம். இந்த அறிக்கைகளில் சந்தேக நபரின் புகைப்படங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததோடு சமூக ஊடகங்களில் பகிரப்படுவது போன்ற காணொளிகள் எதுவும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
மேலும் எமது நுட்பமான ஆய்வில், சமூக ஊடகங்களில் பரவும் இந்த காணொளியில் அடையாளம்காணக்கூடிய சில நம்பத்தகாத கூறுகளை நாங்கள் இனங்கண்டோம். கதவு திறந்தே இருக்கும்போது வாகனம் நகர்வது, முகங்கள் மற்றும் கைகளின் தெளிவற்ற தன்மை, மேலும் வழக்கத்திற்கு மாறாக தோலின் மென்மையான தோற்றம் போன்ற அசாதார அம்சங்களை இந்த காணொளி கொண்டிருந்தது. அத்தோடு, கண்டறியக்கூடிய எந்த உடலும் இல்லாத கூடுதலான கைகள், யதார்த்தமற்ற பெரும் எண்ணிக்கையிலான விரல்களின் அசைவு போன்றவை இந்த காணொளி AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.



நியூஸ்செக்கர் ஒரு உறுப்பினராக அங்கம் வகிக்கும் Misinformation Combat Alliance (MCA), Deepfakes Analysis Unit (DAU) ஆனது ‘Contrails AI’ மூலம் இக்காணொளியின் காட்சிகளை ஆராய்ந்தபோது, இந்தக் காணொளி, குறிப்பாக காணொளியின் இரண்டாம் பாதி, AI- தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது.

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில படங்கள் உண்மையானவை அல்ல என்றும் அவை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்தப்பட்டவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 2025 .02. 21 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Conclusion
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடுவதாக பகிரப்படும் காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
Result: Altered Media
எமது மூலங்கள்
இலங்கை பொலிஸ் இணையத்தளம்
Deepfake Analytics Report
21.02.2025 பாராளுமன்ற அமர்வின் Daily Mirror யூடியூபில் வெளியான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அறிக்கை
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.