Claim: பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கலாநிதி பட்டம்/PhD இல்லை.
Fact: ஹரினி அமரசூரிய இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
“இலங்கையின் தற்போதைய பிரதமரும், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியும் (NPP) கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியது போல், ஹரினி அமரசூரிய PhD அல்லது கலாநிதி பட்டம் பெற்றிருக்கவில்லை,” எனக் கூறி பிரதமரின் கல்வித்தகுதியை கேள்விக்குட்படுத்தும் வகையிலான பதிவை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
“பிரதமரின் கல்வித்தகுதி பற்றிய பிரச்சினையும் உள்ளது. ஹரினி கலாநிதி பட்டம் பெற்றதாக கூறும் எடின்பர்க் பல்கலைக்கழகம், அவர் 3 மாத முதுகலை பட்டம் பெற்றதாக மட்டுமே கூறுகிறது. அவரும் பொய் சொன்னார் போல! நான் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஒரு வாழ்த்து பதிவிலே இதைக் கண்டேன், அப்பதிவு அவரை ஒரு ‘மாணவி’ என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இப்போது எஞ்சியிருப்பது ஜனாதிபதியின் கல்வித் தகுதிதான்!” என TikTok பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் Facebook மற்றும் TikTok இல் ஹரினி அமரசூரியவின் கல்வித் தகுதியை கேள்விக்குட்படுத்தும் கூற்றுக்களை நாம் கண்டறிந்தோம். அவ்வாறான பதிவினை இங்கே காணலாம்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ள பல அரசியல்வாதிகளின் கல்வித் தகைமைகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கூற்றின் உண்மைத் தன்மையை ஆராய நாம் தீர்மானித்தோம்.
Fact Check/Verification
பிரதமர் ஹரினிஅமரசூரிய பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர், சிரேஷ்ட விரிவுரையாளராக (தரம் I) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதோடு, குறிப்பிட்டதொரு காலம் சமூகக் கற்கை துறையின் தலைவராகவும் பணியாற்றினார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அத்தோடு, பல்கலைக்கழகத்தின் ஆசிரியப் பட்டியலில் உள்ள அவரது முழு சுயவிவரம் அவரது ஆராய்ச்சி வெளியீடுகளை மேலும் விரிவாகக் குறிப்பிடுகிறது.
சமீபத்தில் அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற அரச பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக (தரம் I) இருப்பதற்கு, ஆய்வறிக்கையுடன் கலாநிதிப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு NPP இன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டதிலிருந்து, பாராளுமன்றத்தின் இணையத்தளத்தில் அவரது சுயவிவரம் பின்வருமாறு அவரது கல்வித் தகுதிகளை பட்டியலிட்டுள்ளது:
BA (Hons) Sociology
MA App. Anthropology & Development Studies
PhD, Social Anthropology
ஹரினி அமரசூரியவின் PhD தகுதி மற்றும் அதன் விபரங்கள் தொடர்பில் நாம் ஆராய முடிவு செய்தோம். அந்தவகையில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் அரசியல் அறிவியல் பிரிவில் பதிவிடப்பட்ட ஒரு வாழ்த்து பதிவை நாம் கண்டறிந்தோம்.
“கலாநிதி அமரசூரிய 2010 இல் SPS இல் சமூக மானுடவியல் பாடப் பிரிவில் PhD முடித்தார். அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மனிதநேய உயர்நிலைக் கற்கைகள் நிறுவனத்தில் (IASH) ஒரு சக ஊழியராகவும் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கைக்கு முன்னர், கலாநிதி அமரசூரிய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.” என அந்த வாழ்த்து பதிவு குறிப்பிடுகிறது.
“நான் ஹரிணியை கிட்டதட்ட 20 ஆண்டுகளாக ஒரு சிறந்த மாணவியாகவும் நெருங்கிய தோழியாகவும் அறிவேன். அவர் மிக நேர்மையான மற்றும் நுண்ணறிவு கொண்டவர். அவர் எதிர்கொள்ளும் பணி சவாலானது, மற்றும் அவர் ஒரு அசாதாரண திறன் கொண்ட பெண்.” என SPS இன் தெற்காசிய மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜொனாதன் ஸ்பென்சர் கூறினார்.
மேலும், பல்கலைக்கழகத்தின் தரவுத்தளத்தில் ஹரினி அமரசூரியவின் PhD ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதையும் எம்மால் உறுதி செய்ய முடிந்தது.


இந்த தரவுகள் யாவும் பிரதமர் ஹரினி அமரசூரிய உண்மையில் சமூக மானுடவியலில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது.
Conclusion
பிரதமர் ஹரினி அமரசூரிய கலாநிதி பட்டம் பெறவில்லை அல்லது அவரது கலாநிதி பட்டம் போலியானது என்று பரவும் சமூக ஊடக பதிவுகள் போலியானவை என்பது உறுதியாகிறது. அவர் இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
Result: False
எமது மூலங்கள்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் உள்ள ஹரினி அமரசுரியவின் முழு சுயவிபரம்
இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் உள்ள ஹரிணி அமரசூரியவின் சுயவிவரம்
02.10.2024 அன்று எடின்பரோ பல்கலைக்கழக இணையதளத்தில், இலங்கையின் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டது தொடர்பில் வெளியான செய்தி
2010 ஆம் ஆண்டு எடின்பரோ பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் அரசியல் விஞ்ஞான பிரிவில் சமர்ப்பிக்கப்பட்ட ஹரிணி அமரசூரியவின் ஆய்வுக் கட்டுரை
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ checkthis@newschecker.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.