Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
Claim: ஏப்ரல் 4ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்திருந்தார்.
Fact: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்திருந்ததாக பரவும் புகைப்படங்கள் தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தை அவர் சென்றடைந்தவுடன் எடுக்கப்பட்டவை. பிம்ஸ்டெக் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு அவர் புடவை அணிந்து சென்றார்.
கடந்த வாரம் ஏப்ரல் 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய, தாய்லாந்தில் நடைபெற்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC /பிம்ஸ்டெக்) உச்சி மாநாடு உட்பட இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டார். உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொண்டது தொடர்பில் பல்வேறு சமூக ஊடக பதிவுகள் பகிரப்பட்டு வந்தது. அவற்றில் சில பதிவுகளில் பிரதமர் நீல நிற குர்தா மற்றும் காற்சட்டையுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து அவர் உச்சிமாநாட்டிற்கு “பொருத்தமற்ற” சாதாரணமான உடையணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த புகைப்படத்தை சமூக ஊடக பதிவில் பகிர்ந்த பயனர் “பிரதமர் ஹரிணி பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு பிரச்சினைக்குரிய உடையில் செல்கிறார்!” என்ற சிங்களத் தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்ற கருத்தை முன்வைக்கும் பல X தள பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இப்பதிவுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆடை குறித்த பெரிதளவிலான விமர்சனங்கள் எழுந்ததால், நாம் இதன் உண்மைத்தன்மையை ஆராய முடிவு செய்தோம்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய உண்மையிலேயே நீல நிற குர்தா மற்றும் காற்சட்டை அணிந்திருந்தாரா என்பதை அறிய “ஹரிணி அமரசூரிய”, “பிரதமர்” மற்றும் “பிம்ஸ்டெக்” ஆகிய முக்கிய சொற்களின் மூலம் தேடலை மேற்கொண்டோம்.
எமது தேடலின் முடிவில், தாய்லாந்திற்கான விமானப் பயணத்தின் போது அவர் இந்த ஆடையை அணிந்திருந்ததை நாம் அவதானித்தோம். ஏப்ரல் 3ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தனது பேஸ்புக் கணக்கில், “இலங்கை பிரதமர் கௌரவ ஹரிணி அமரசூரிய தாய்லாந்திற்கு வருகை தந்துள்ளார்” என்ற தலைப்பில் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் தாய்லாந்து அதிகாரிகளால் வரவேற்கப்பட்ட பின்னர், விமான நிலைய வளாகத்தில் மேற்கூறிய ஆடைகளுடன் நடந்து செல்வதைக் காணலாம்.
மேலும், பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டமை தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் மூலங்களை ஆராய்ந்ததில், பிம்ஸ்டெக் வலைத்தளம் இந்த நிகழ்வு தொடர்பான ஒரு செய்திக்குறிப்பையும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளின் புகைப்படத்தையும் பதிவிட்டிருப்பதையும் நாம் கண்டோம். அதில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்குறிப்பிட்ட ஆடைக்கு மாறாக, சிவப்பு நிற புடவை அணிந்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
அத்தோடு, பிரதமர் தாம் பிம்ஸ்டெக் மாநாட்டில் உத்தியோகபூர்வ கடமைகளை ஆற்றும் புகைப்படங்களை அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிட்டிருந்தார். அவற்றிலும் அவர் சிவப்பு நிற புடவை அணிந்திருப்பதை எம்மால் காண முடிந்தது.
மேலும் இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதியையும் நாங்கள் தொடர்பு கொண்டோம். அதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ புகைப்படங்களில் காணப்படுவது போல் பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு புடவை அணிந்திருந்ததாகவும், தாய்லாந்திற்கான விமான பயணத்தின் போது நீல நிற குர்தா மற்றும் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்திருந்ததாக பரவும் புகைப்படங்கள் தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தை அவர் சென்றடைந்தவுடன் எடுக்கப்பட்டவை. பிம்ஸ்டெக் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு அவர் புடவை அணிந்து சென்றதை உத்தியோகபூர்வ புகைப்படங்கள் உறுதிபடுத்துகின்றன.
எமது மூலங்கள்
05.04.2025 அன்று உத்தியோகபூர்வ பிம்ஸ்டெக் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு.
04.04.2025 அன்று பிரதமர் ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டமை தொடர்பில் Daily News இல் வெளியான செய்தியறிக்கை.
03.04.2025 அன்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பதிவிட்ட உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவு.
05.04.2025 அன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு.
பிரதமர் அலுவலக பிரதிநிதியின் உறுதிப்படுத்தல்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.