Claim: 2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாமே பொலிஸாரிடம் சரணடைந்தமைக்காக நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Fact: இந்த கூற்று தவறானது. நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அத்தகைய எந்த அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
2023ஆம் ஆண்டு W 15 ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கடந்த பெப்ரவரி மாதம் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தலைமறைவாகியிருந்த நிலையில், இம்மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் புகைப்படத்துடன் சிங்கள மொழியில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. “நாலந்தா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரியில் உருவான முதல் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த செயலுக்காக நாங்கள் அவரை நினைத்து பெருமைப்படுகிறோம்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னகோன் கல்வி கற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இப்பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. அப்பதிவுகளில் சிலவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இப்பதிவின் சர்ச்சைக்குரிய தன்மை காரணமாக, இந்த கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய நாம் தீர்மானித்தோம்.
W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு வழக்கின் பின்னணி என்ன?
2023 டிசம்பர் 31 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பொலிஸ் அதிகாரிகள் ‘ஹரக் கட்ட’ மற்றும் ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் பாதாள உலக குழுத் தலைமையிலான போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தேடலை மேற்கொள்வதற்காக ஹோட்டல் W15 க்கு வேனில் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த பயணத்தின் போது, ஹோட்டல் வளாகத்திற்குள் இருந்து ஒரு சிப்பாய் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் இவர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சி.சி.டி பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோகம் தொடர்ந்த நிலையில், வெலிகம பொலிஸார் உத்தரவை பொருட்படுத்தாது சி.சி.டி. வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் கலேவெல பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் உபுல் சமிந்த குமார என்பவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளுக்குப் பிறகு, பெப்ரவரி 2025 இல், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ், சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இம்மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவ்வழக்கு மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Factcheck/ Verification
தேசபந்து தென்னக்கோன் சரணடைந்தது தொடர்பாக நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏதும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனவா என அறிய பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளை நாம் ஆராய்ந்தோம். ஆனால் அதுபோன்ற எந்தவொரு பதிவுகளும் காணக்கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில் தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவைத் தொடர்ந்து தென்னகோன் தொடர்பான எத்தவொரு பதிவும் அவர்களின் உத்தியோகபூர்வ பக்கத்தில் காணப்படவில்லை.
இந்த graphic குறித்து நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகாரளித்துள்ளதாகவும், இது ஒரு போலியான படம் என்றும் தெரிவித்து மார்ச் 21 ஆம் திகதி தினமின மற்றும் நியூஸ்வயர் ஆகிய செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் நாம் அவதானித்தோம்.

மேலும், இவ்வாறானதொரு வாழ்த்துப் பதிவு உண்மையிலேயே பழைய மாணவர் குழுவினரால் வெளியிடப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை நாங்கள் தொடர்புகொண்டபோது, அவர்கள் கூற்றை மறுத்ததுடன், தென்னகோனை பகிரங்கமாக வாழ்த்தவோ அல்லது அவர் சரணடைந்தமை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
Conclusion
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸில் சரணடைந்தமைக்காக அவரை நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பகிரங்கமாக பாராட்டியதாக பரவும் தகவல் போலியானது.
Result: False
எமது மூலங்கள்
21.03.2025 தினமின செய்தித்தளத்தில் வெளியான செய்தி அறிக்கை.
21.03.2025 NewsWire LK செய்தித்தளத்தில் வெளியான செய்தி அறிக்கை.
நாலந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பேஸ்புக் கணக்கு
நாலந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.