Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
தேசபந்து தென்னகோனின் குற்றச்சாட்டுக்கெதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிட்ட கடிதம்.
இது ஒரு போலியான கடிதமென்றும், அவ்வாறானதொரு கடிதத்தை வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக் காலத்தில் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி என சிறப்பு பாராளுமன்றக் குழு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ கடித அமைப்பைக்(letterhead) கொண்ட இந்த வைரல் கடிதம், கட்சியின் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது சக உறுப்பினர்கள் இந்த தீர்ப்பை தன்னிச்சையானது மற்றும் தவறானது என்று கருதியதாக சிங்களத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “வரலாற்றின் இருண்ட காலங்களில் கூட, [தென்னகோன்] நமது தாய்நாட்டை ஒரு சுத்தமான மற்றும் ஊழல் இல்லாத இடமாக மாற்ற ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்களைப் பாதுகாத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர் தன்னிடமிருந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக உழைத்தார், பிரஜைகளுக்கு நெருக்கமாக இருந்தார். அந்த வரலாற்றை ஒரு நொடியில் மறந்துவிடுவது நமது நன்றியின்மையையும் கோழைத்தனத்தையும் காட்டுகிறது. [முன்னாள்] ஜனாதிபதி ரணசிங்க விரைவில் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுவார்” என அந்த கடிதத்தில் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் வஜிர அபேவர்தன கையொப்பமிட்டதாக காட்டப்பட்டுள்ளது.
இந்த கடிதம் பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டிருந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் கடந்த சில மாதங்களாக தென்னக்கோன் மீது சிறப்பு அரசியலமைப்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணைக் குழுவின் அறிக்கை தென்னக்கோனை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அறிவித்து, அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து அவரை நீக்க ஜூலை 22ஆம் திகதி (2025.07.22) பரிந்துரைத்தது.
அறிக்கைகளின்படி, 159 ஆண்டுகால வரலாற்றில் பதவி நீக்கத்தை எதிர்கொள்ளும் முதல் துறைத் தலைவர் தென்னக்கோன் என, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் முழு அறிக்கையையும் இங்கே காணலாம்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி பதவி நீக்க வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தில் இது நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விடயத்தின் முக்கியத்தன்மை காரணமாக, இந்தக் கடிதம் உண்மையானதா என்பதைச் சரிபார்க்க நாம் முடிவு செய்தோம்.
பாராளுமன்ற சிறப்புக் குழுவின் முடிவைக் கண்டித்து இதுபோன்ற கடிதத்தை வெளியிட்டார்களா என்பதைச் சரிபார்க்க, முதலில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேசபந்து தென்னகோன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபகர் வஜிர அபேவர்தன போன்ற முக்கிய சொற்களினூடாக தேடலை மேற்கொண்டோம். எனினும் அத்தகைய கடிதம் எதுவும் எமக்கு காணக்கிடைக்கவில்லை. அதேபோல் இந்தக் கடிதம் நம்பகமான பிரதான செய்தித்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
எனவே நாம் ஐக்கிய தேசிய கட்சி, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபகர் வஜிர அபேவர்தன ஆகியோரின் சமூக ஊடக கணக்குளை ஆராய்ந்ததில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் வஜிர அபேவர்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளை நாங்கள் கண்டோம். ஐக்கிய தேசிய கட்சியின் பதிவில் அந்தக் கடிதம் போலியானது என்றும், ஐ.தே.க. அதை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
“இந்தக் கடிதம் UNP லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற எந்த ஆவணத்தையும் நான் அல்லது UNP வெளியிடவில்லை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று அபேவர்தனவின் பதிவில் கூறப்பட்டுள்ளது, இது வைரலான கடிதம் போலியானது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு பாராளுமன்றக் குழு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிட்ட கடிதம் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கடிதம் போலியானது என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் ஸ்தாபகர் வஜிர அபேவர்தன ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது மூலங்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவு.
வஜிர அபேவர்த்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவு.