Claim: கழிவறையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கலந்து கொண்டார்.
Fact: வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவழறையைத் திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானது. இந்த புகைப்படங்கள் உண்மையில் 2019 ஆம் ஆண்டு பொலன்னறுவை பிரதேசத்தில் நடந்த சமூக நலன்புரி நிகழ்வொன்றில் எடுக்கப்பட்டவை. சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என்பதை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு பிரதியமைச்சருமான டி.பி.சரத் அண்மையில் கழிவழறையைத் திறந்து வைத்ததாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கழிவறையொன்றின் அருகில் பிரதியமைச்சர் நிற்கும் படங்களுடன் இப்பதிவை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதனை x தளத்தில் பகிர்ந்த பயனரொருவர் “விழாவொன்றில் பிரதியமைச்சர் கழிவறையொன்றை திறந்து வைக்கிறார்” என்ற சிங்கள தலைப்புடன் பதிவிட்டிருந்தார்.

இதனை பேஸ்புக்கில் பகிர்ந்த மற்றொரு பயனர், “இலங்கையில் கழிவறை பிரச்சினை மிகவும் தீவிரமானது. இதனை நிவர்த்தி செய்வதற்காக ‘Clean Sri இலங்கை’ செயற்திட்டத்தின் கீழ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.சரத் அவர்கள், அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து “அனைவருக்கும் கழிப்பறை” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்தேசிய விழாவின் அடையாளமாக முதல் கழிவறை திறந்து வைக்கப்பட்டது.” என பதிவிட்டிருந்தார்.

இதே போன்ற பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.






Factcheck / Verification
வீடமைப்பு பிரதியமைச்சர் அண்மையில் கழிவறையைத் திறந்து வைத்தாரா என்பதை உறுதிப்படுத்த இது தொடர்பான செய்தியறிக்கைகள் ஏதேனும் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.
2025 மார்ச் 24 ஆம் திகதி ஹிரு தொலைக்காட்சியின் யூடியூப் சேனலில் வெளியாகியிருந்த காணொளியொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு உரையாற்றும் வேளையில் “அமைச்சர் டி.பி.சரத் ஒரு கழிவறையைத் திறந்து வைத்து அதை முகநூலில் பதிவிட்டுள்ளார்” என குறிப்பிடுவதை அவதானிக்க முடிந்தது. இதே காணொளி ஹிரு நியூஸ் பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.
2025 மார்ச் 25 ஆம் திகதி அருண சிங்கள பத்திரிகையின் முதற் பக்கத்தில், “பிரதி அமைச்சர் புதிய கழிவறையை திறந்து வைத்து அப்புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகிருப்பதையும், அதன் தொடர்ச்சி இரண்டாவது பக்கத்தில் வெளியாகிருந்ததையும் கண்டோம். இச்செய்தியறிக்கை ஹிரு நியூஸில் வெளியான தயாசிறி ஜயசேகரவின் அறிக்கையை மையப்படுத்தி அமைந்திருந்தது. இக்கட்டுரையை அருண பத்திரிகையின் மின்னிதழில் காணலாம்.
இருப்பினும், இந்த இரண்டு செய்திகளிலும் சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள் பிரதியமைச்சரின் புகைப்படங்கள் எதுவும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களைGoogle Reverse Image Search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்தோம். அதன்போது இந்த புகைப்படங்கள் டி.பி.சரத் என்ற பெயரில் உள்ள பிரதியமைச்சரின் பேஸ்புக் கணக்கில் 2019 மார்ச் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டது என்பதை கண்டறிந்தோம்.

மேலும், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு பிரதியமைச்சருமான டி.பி.சரத் அண்மையில் கழிவறையொன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தவறானவை என்றும், இந்த சம்பவம் உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்றும் அமைச்சு அவ்வறிக்கையில் உறுதிப்படுத்தியது.

அவ்வறிக்கையின்படி, டி.பி.சரத், பொலன்னறுவைப் பகுதியில் உள்ள சில இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் சேர்ந்து, கழிவறை தேவையுள்ள குடும்பமொன்றிற்கு கழிவறை கட்ட உதவினார். இது ஒரு சம்பிரதாய விழாவாக அல்லாமல் ஒரு நலன்புரி செயலாகவே மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இந்த சம்பவம் அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வாகும்.
மேலும், News Center யூடியூப் அலைவரிசைக்கு வழங்கிய தொலைபேசி மூலமான நேர்காணலில் பிரதியமைச்சர் டி.பி.சரத், சில முக்கிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி பொய்யானவை என்பதை உறுதிப்படுத்தினார். பகிரப்படும் புகைப்படங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு சமூக நலத் திட்டத்தின் போது எடுக்கப்பட்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Conclusion
வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.சரத் அண்மையில் கழிவறையைத் திறந்து வைத்ததாக பகிரப்படும் தகவல் பொய்யானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தமது அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சமூக நலன்புரி செயற்றிட்டத்தின் செயல்திட்டத்தின்போது எடுக்கப்பட்டவையாகும்.
Result: False
எமது மூலங்கள்
25.03.2025 Newswire இல் வெளியான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அறிக்கை
04.03.2019 இல் பிரதியமைச்சர் T B Sarath இன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்களுடனான பதிவு
24.03.2025 News Center யூடியூப் அலைவரிசைக்கு பிரதியமைச்சர் டி.பி.சரத் வழங்கிய தொலைபேசி மூலமான நேர்காணலின் பதிவு.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.