Claim: மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வ கடிதமொன்று வெளியிடப்பட்டது.
Fact: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த கடிதம் போலியானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுமதி வழங்கியதாகக் கூறி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 2024 நவம்பர் 17 என திகதியிடப்பட்ட தமிழ் மொழியிலான இந்த கடிதத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முகம் மற்றும் அவரது கையொப்பம் பொறிக்கப்பட்டுள்ளது.
30 வருட கால உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27 அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் அங்கத்தவரான லெப்டினன்ட் சங்கரின் முதலாவது மரணத்தை நினைவுகூரும் விதத்திலே இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மாவீரர் தினத்திற்கான பாரிய கூட்டங்கள் அல்லது பொதுவெளியிலான கொண்டாட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதில் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் கடுமையாக இருந்தன.
அந்தவகையில் தற்போது பரவலாக பகிரப்படும் இந்த கடிதம் மக்கள் மத்தியில் ஒரு முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
இந்த கடிதமானது செய்தித்தளங்கள், பேஸ்புக் மற்றும் டிக்டொக் போன்ற சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
Fact Check/Verification
சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த கடிதம் வழக்கமான ஜனாதிபதியின் அறிவிப்புகள் / கடிதங்களின் நிறம் மற்றும் வடிவத்திலிருந்து மாறுபட்டிருப்பதை நாங்கள் அவதானித்தோம். அத்தோடு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடித அமைப்புக்கு (லெட்டர்ஹெட்) மாறாக இந்தக்கடிதம் மஞ்சள் நிறத்திலும் ஜனாதிபதியின் முகம் பொறிக்கப்பட்டதாகவும் காணப்பட்டது.
இக்கடிதத்தின் உண்மைத்தன்மையை அறிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ பக்கங்களிலும் தேடலை மேற்கொண்டோம். ஆனால் அத்தகைய கடிதம் / அறிக்கை பற்றிய பதிவுகள் எதுவும் எங்களுக்கு உத்தியோகபூர்வ பக்கங்களில் கணக்கிடைக்கவில்லை.
எனவே நாங்கள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு இந்த கடிதம் தொடர்பில் கேட்டபோது, அவர்கள் இக்கடிதம் முற்றிலும் போலியானது என்று எங்களுக்குத் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எந்தவொரு கடிதமோ, ஊடக அறிக்கையோ அல்லது வர்த்தமானி அறிவித்தலோ வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
அத்துடன், அனுமதியின்றி ஜனாதிபதியின் கையொப்பத்தை கடிதத்தில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Conclusion
இலங்கையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனுமதி வழங்கியதாக பரவும் கடிதம் போலியானதாகும். இந்தக் கடிதம் போலியானது என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்திய அதேவேளை, மாவீரர் தினம் தொடர்பான எந்தவொரு கடிதமோ, ஊடக அறிக்கையோ அல்லது வர்த்தமானி அறிவித்தலோ ஜனாதிபதியால் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
Result: False
எமது மூலங்கள்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.