Claim: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்
Fact: புதிய நாணயத்தாள்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்பதை அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகத்துடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள் என சமூக ஊடகங்களில் ஒரு படம் பரவி வருகிறது. இந்த பதிவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டிக்டொக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்தே 5,000 ரூபாய் நாணயத்தாள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், வைரலாக பரவிய இந்த பதிவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க நியூஸ்செக்கர் முடிவு செய்தது.
Fact Check/Verification
புதிய நாணயத்தாள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அல்லது விசேட நோக்கங்களுக்காக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முதலில் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தை பார்வையிட்டோம். “சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தாள்கள்” மற்றும் “ஞாபகார்த்த நாணயத்தாள்களும் குத்திகளும்” என்ற இரு பிரிவுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம், ஆனால் இரண்டிலும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள்களின் படங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தோம்.
மேலும், பணம் அச்சிடுதல் பற்றி வேகமாக பரவிய செய்திகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தை தொழிற்பாடுகள் மற்றும் பணம் அச்சிடல் தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அதில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் பொறிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய நாணயத்தாள்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத், அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது உறுதிப்படுத்திய கூற்றொன்றை நாம் கண்டறிந்தோம்.
Conclusion
புதிய 5,000 ரூபா நாணயத்தாள்களில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் இருப்பதாக பரவும் செய்தி பொய்யானது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் புதிய நாணயத்தாள்கள் எதுவும் அச்சிடப்படவில்லை. மேலும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகத்துடன் கூடிய போலி நாணயத்தாளின் படத்தை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Results: False
எமது மூலங்கள்:
இலங்கை மத்திய வங்கி இணையதளத்தின் “சுற்றோட்டத்திலுள்ள நாணயத்தாள்கள்” மற்றும் “ஞாபகார்த்த நாணயத்தாள்களும் குத்திகளும்“ஒக்டொபர் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட மத்திய வங்கி ஊடக அறிக்கை நவம்பர் 5ஆம் திகதி News 1st இல் வெளியிடப்பட்ட செய்தி அக்டோபர் 29ஆம் திகதி வெளியான அமைச்சரவை ஊடக அறிக்கை தொடர்பான யூடியூப் காணொளி
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.