Claim: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.
Fact: இந்த செய்தி போலியானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்க உறுதிப்படுத்தினார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்ததாகவும் அவர் இந்நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகளும் வெளிப்படாது எனவும் சில பதிவுகள் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.
இலங்கையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது 5 ஆம் தர மாணவர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ரீதியிலான போட்டிப் பரீட்சையாகும். கல்வி அமைச்சின் கீழ் பரீட்சைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இது முன்னெடுக்கப்படுகிறது. இந்த பரீட்சையின் நோக்கம் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மேலதிக கல்விக்காக புலமைப்பரிசில்களை வழங்குவதாதோடு இலங்கை முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளில் (மதிப்புமிக்க அரச பாடசாலைகளில்) அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகும்.
இந்த செய்தி பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரியவின் புகைப்படத்துடன் டிக்டொக் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.




Factcheck / Verification
சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் / பிரதமர் அலுவலகம் அல்லது கல்வியமைச்சினால் செய்தி அல்லது அறிவிப்புகள் ஏதும் வெளியிட்டப்பட்டிருக்கிறதா என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் நாம் முதலில் தேடலை மேற்கொண்டோம். ஆனால் அவ்வாறான எந்தவொரு முடிவையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
எனவே நாம் பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்கவை தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவினோம். 2024 ஆம் ஆண்டு முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முற்றாக இரத்துச் செய்வதற்கு பிரதமரினால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், இந்த செய்தி முற்றிலும் போலியானது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகளும் வெளியிடப்படாது எனும் தகவல் தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம். இவ்வருட பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் சில பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுக்களைத் தொடர்ந்து, பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை கடந்த நவம்பர் 18 ஆம் பிறப்பித்தது.
இத்தடையுத்தரவானது தற்காலிகமானதோடு இந்த ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதும் உறுதிபடுத்தப்படுகிறது.
Conclusion
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்ததாக பரவும் செய்தி போலியானதென பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்க உறுதிப்படுத்தினார். மேலும் இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்னும் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை என ஊடக அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
Result: False
எமது மூலங்கள்
பிரதமரின் ஊடகச் செயலாளரின் அறிக்கை
2024.11.19 அன்று Ceylon Today இணையத்தளத்தில் வெளியான செய்தி அறிக்கை
2024.11.25 அன்று News 1st இணையதளத்தில் வெளியான செய்தி அறிக்கை
2024.11.18 அன்று Daily Mirror இன் யூடியூப் அலைவரிசையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் பற்றிய செய்தி
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.