Claim: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பை குறித்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Fact: இந்த கூற்று தவறானது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 19 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவு செய்தது. இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷபிவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 350 உத்தியோகத்தர்கள் தற்போது 60 பேராக குறைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இது நியாயமற்ற முடிவு எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து அதன் நிலை குறித்து வெவ்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சமூக ஊடக பயனர்கள் சிலர் இம்மனு நிராகரிக்கப்பட்டதாகவும் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

அவ்வாறான சில பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த கூற்றுக்கள் பெரும்பாலும் பேஸ்புக் மற்றும் டிக்டொக்கில் அதிகளவில் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நியூஸ்செக்கர் குழு முடிவு செய்தது.
Fact Check/Verification
“மகிந்த ராஜபக்ஷ”, “பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை”, “அடிப்படை உரிமை மீறல் மனு” போன்ற இச்சம்பவத்துடன் தொடர்பான முக்கிய சொற்களினூடான தேடலில், தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து 2025 ஜனவரி 24 ஆம் திகதி பிரதான ஊடகங்களில் வெளியான பல செய்தியறிக்கைகளை நாம் கண்டோம்.
Hiru News இல் வெளியான அத்தகைய ஒரு கட்டுரையில், மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும், மேலும் இந்த சம்பவம் “சரியான பாதுகாப்பு மதிப்பீடு” இல்லாமல் செய்யப்பட்டது என்றும், மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ராஜபக்ஷவின் பங்கு காரணமாக அவரது வாழ்க்கை தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்று இம்மனு தொடர்பில் வெளியாகிய செய்திகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை மார்ச் 19 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பல முக்கிய செய்தி ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 19 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபயகோன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உரிய மதிப்பீடு இன்றி தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமையால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வருணிகா ஹெட்டிகே, அறிவுறுத்தல்களைப் பெற்று ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரினார். நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது, இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை சமர்ப்பிக்க அனுமதித்தது” என்று இந்த சம்பவம் குறித்து News 1st இன் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் மனு மீதான விசாரணை திகதி குறித்த செய்தியறிக்கைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த வழக்கு தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ தரப்பின் சட்டத்தரணியும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியை நாங்கள் தொடர்பு கொண்ட போது அவர் இம்மனு மீதான விசாரனை மார்ச் 19 ஆம் திகதியன்று நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
Conclusion
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை 2025 மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Result: False
எமது மூலங்கள்
24.01.2025 அன்று NewsFirst LKஇல் மகிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மார்ச் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது தொடர்பில் வெளியான செய்தி.
06.02.2026 அன்று Ada Dherana LKஇல் பாதுகாப்பு தொடர்பான மஹிந்த ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணை குறித்து வெளியான செய்தியறிக்கை.
மகிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாணையை மார்ச் 19ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்.
இந்த வழக்கில் மகிந்த இராஜபக்ஷ சார்பிலான சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரியின் அறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.