Claim: இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் 100 பில்லியன் இலங்கை ரூபா அச்சிடப்பட்டது.
Fact: வர்த்தக வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை பேணுவதற்காக மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக வழமையான முறையில் ‘பணம் வெளியிடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி 100 பில்லியன் இலங்கை ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை “அச்சிடுகிறது” என குற்றம் சாட்டி பல சமூக ஊடக பயனர்கள் ட்விட்டர், டிக்டொக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், “முன்னைய அரசாங்கத்தில் நாட்டின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிக்க மத்திய வங்கியின் நிதியைப் பயன்படுத்தியமை 2022 இல் நாட்டை பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. அதேபோல் தற்போதைய அரசாங்கமும் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான ஆபத்தில் உள்ளது.” எனவும் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Fact Check/Verification
மத்திய வங்கி 100 பில்லியன் இலங்கை ரூபாய்களை அச்சிட்டதா?
இவ்விடயம் தொடர்பில் கீவேர்ட் தேடலை நியூஸ்செக்கர் மேற்கொண்ட போது, மத்திய வங்கி 100பில்லியன் இலங்கை ரூபா மதிப்புள்ள பணத்தை வெளியிட்டிருப்பதை எமது குழு கண்டறிந்தது. EconomyNext இன் (இந்த கட்டுரையில்), 2024 அக்டோபர் 25ஆம் திகதி நிலவரப்படி, இலங்கை மத்திய வாங்கியால் 100 பில்லியன் இலங்கை ரூபா திறந்த சந்தை நடவடிக்கைகள் மூலம் “அச்சிடப்பட்டது/ வெளியிடப்பட்டது” என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவலாக கூறப்படுவது போல, இது பணத்தாள்களின் நேரடி அச்சிடல் மூலம் செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய வங்கியின் இந்த செயற்பாடு சாதாரணமானது எனவும் இது இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறையிலே மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் கருதும் பணம் அச்சிடும் செயல்பாடும் மத்திய வங்கியினால் தற்போது திறந்த சந்தை நடவடிக்கைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பணம் வெளியிடும் செயல்பாடும் வேறுபட்டவை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் கலாநிதி சுஜீதா ஜெகஜீவன் யூடியூப் அலைவரிசையொன்றுக்கு அணைமையில் வழங்கிய நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார். அந்நேர்காணலை இங்கே காணலாம்.
திறந்த சந்தை நடவடிக்கைகள் என்றால் என்ன?
திறந்த சந்தை நடவடிக்கைகள்(Open Market Operations) பற்றி தெளிவாக அறிந்துகொள்வதற்காக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பில் நிபுணத்துவம் பெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியாளரான உமேஷ் மொரமுதலியை நியூஸ்செக்கர் அணுகியது.
“திறந்த சந்தை நடவடிக்கைகள் மற்றும் நிலையான கடன் வசதிகள் எனக்கூறப்படுவது என்னவென்றால், வர்த்தக வங்கிகள் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிற பொழுது, குறிப்பாக அவற்றின் நடவடிக்கைகளுக்கு பணம் சற்று பற்றாக்குறையாக இருக்கும் சூழ்நிலைகளில் அவற்றிற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கும் செயற்பாடாகும். எனவே, அந்த சூழ்நிலைகளில், வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தை கடன் பெறலாம் மற்றும் / அல்லது அவர்கள் வைத்திருக்கும் சில அரசாங்க பத்திரங்களை பிணையமாக பயன்படுத்தலாம். இது மத்திய வங்கியின் அன்றாட நடவடிக்கையாகும்,” என்று அவர் விளக்கினார்.
இது அதிக நாணயத்தாள்களை அச்சிடுவதிலிருந்து வேறுபட்டது என்பதை தெளிவுபடுத்திய மொரமுதலி, “ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவது நாணயத்தாள்களை அச்சிடுவது அல்ல, ஆனால் மத்திய வங்கி குறுகிய காலத்தில் வர்த்தக வங்கிகளுக்கு பணத்தை வழங்கும் செயல்பாட்டை ஆகும்” எனவும் கூறினார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிக்க பணம் வழங்கப்பட்டதா?
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய அல்லது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் கட்டளையின் பேரில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக பணம் வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு சான்றுகளும் இல்லை.
மேலும், 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், மத்திய வங்கி தொடர்பான எந்தவொரு அன்றாட விடயங்களிலும் தலையிடுவதிலிருந்து அரசாங்கத்தைத் தடைசெய்கிறது. மத்திய வங்கியின் தன்னாட்சி எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சட்டத்தின் பிரிவு 5 (3) கூறுகிறது.
இப்போது ஏன் இந்தப் பணம் வழங்கப்பட்டது?
2024 ஒக்டோபர் 29 ஆம் திகதி மத்திய வங்கியின் உள்நாட்டு தொழிற்பாடுகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி,
“இந்த 100 பில்லியன் இலங்கை ரூபா திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. திறந்த சந்தை ஒப்பீட்டின் மூலம் உட்செலுத்தப்படும் திரவத்தன்மை(liquidity) என்பது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி விகிதங்களை உறுதிப்படுத்துவதற்கும், விலை நிலையுறுதியை உறுதி செய்வதற்கும் வங்கி அமைப்பில் போதுமான பணப்புழக்கத்தை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு வழக்கமான மத்திய வங்கி செயல்பாடாகும், எனவே இது ‘பணம் அச்சிடுதல்’ என்று தவறாக விளக்கப்படக்கூடாது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
எனவே EconomyNext கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பணம் அச்சிடுதல்’ என்பது சமூக ஊடக பயனர்களால் நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலம் அரசாங்க வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதாக தவறாக விளக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
மேலும், மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி லசித பத்பெரிய மற்றும் சக்தி ராஜகருணா (சிரேஷ்ட பொருளியலாளர்) ஆகியோர் இணைந்து எழுதிய செய்திக் கட்டுரையில் மத்திய வங்கி பொதுவாக இதுபோன்று எவ்வகையாக சந்தர்ப்பங்களில் அதிக பணத்தை வெளியிடுகிறது என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
Conclusion
திறந்த சந்தை நடவடிக்கைகள் ஊடாக மத்திய வங்கியின் நாளாந்த நடவடிக்கைகளுக்காக அண்மையில் 100 பில்லியன் இலங்கை ரூபா வெளியிடப்பட்டமை, பணத்தாள்கள் அச்சிடப்பட்டது என தவறாக பகிரப்பட்டுள்ளது. அத்தோடு, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்கான வகையில் பணத்தை அச்சிடுவதாக சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவையாகும்.
Result: Missing context
எமது மூலங்கள்
2024.10.27 அன்று EconomyNext இல் வெளியான அறிக்கை
29.10.2024 அன்று இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம்
13.10.2024 அன்று Daily FT பத்திரிகையில் வெளியான விளக்கக் கட்டுரை
2024.11.03 அன்று பெறப்பட்ட உமேஷ் மொரமுதலியின் அறிக்கை
2024.11.17 அன்று வெளியான கலாநிதி சுஜீதா ஜெகஜீவனின் யூடியூப் காணொளி
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.