Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் இந்தியாவுக்கு விற்றதாக ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க தெரிவிப்பதாக பரவும் காணொளி.
இந்தக் கூற்று தவறானதாகும். இக்காணொளியானது, 2025.01.19 அன்று களுத்துறை, கட்டுக்குருந்தவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக, இலங்கை உட்பட உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க, அரசு இந்தியாவிற்கு ஏராளமான எண்ணெய் தாங்கிகளை விற்றுள்ளதாக கூறும் காணொளியொன்று TikTok மற்றும் YouTube இல் பரவியுள்ளது.


2026 மார்ச் 6, அன்று பதிவேற்றப்பட்ட TikTok காணொளியில், ஜனாதிபதி “திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கு மிக அதிகம், எமக்கு 24 மட்டுமே தேவை. அவற்றை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி, மீதமுள்ளவற்றை இந்தியாவிற்குக் கொடுத்தோம்” எனக் கூறும் அதேவேளை, காணொளிலுள்ள சிங்கள கூற்று “இந்த ஜனாதிபதி எண்ணெய்க் கிணறுகளை விற்றுவிட்டார்” என்று குறிப்பிடுகிறது.
நாம் முதலில் Reverse Image Search முறையைப் பயன்படுத்தி, இந்தப்பதிவானது அனுர குமார திஸ்ஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ YouTube கணக்கில் 2025.01.19 அன்று பதிவேற்றப்பட்ட களுத்துறை, கட்டுக்குருந்தவில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளி என்பதை உறுதி செய்தோம்.
இந்தக் காணொளியில், “திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 24 மட்டுமே இலங்கைக்கு தேவைப்படுகிறது. ஏனெனில் எமக்கு ஏற்கனவே கொலன்னாவ மற்றும் முத்துராஜாவெலவில் உள்ள எண்ணெய் தாங்கிகள் எமது தேவைக்கான எண்ணெய்யை களஞ்சியப்படுத்த போதுமானவை” என குறிப்பிடுகிறார்.
“எனவே திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தின் 24 எண்ணெய் தாங்கிகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தாலும் (CPC), 14 எண்ணெய் தாங்கிகள் இலங்கையிலுள்ள இந்திய எண்ணெய் கம்பனியினாலும்(Lanka IOC) பயன்படுத்தப்படும் அதேவேளை, 61 எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்துவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
“இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தத்தின்படி, 61 எண்ணெய் தாங்கிகள் சுத்திகரிக்கப்பட்டு, பிற நாடுகளுடனான வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.” இம்முழுமையான உரையில் அரசாங்கம் இந்தியாவிற்கு எண்ணெய்க் தாங்கிகளை விற்கவில்லை என்பதையும், மாறாக இந்த ஒப்பந்தத்தின் கீழ் 61 தாங்கிகளை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பதையும் காட்டுகிறது.
இந்த உரையின் ஆங்கில சுருக்கம் 2025.01.19 அன்று LankaENews செய்தித்தளத்திலும் வெளியாகியிருந்தது.
மேலும் ஆராய்ந்ததில், 2022 முதல் நடைமுறையில் இருந்து வந்த இவ்வுடன்படிக்கையை 2025 வரை நீட்டிப்பது தொடர்பான அனுர அரசாங்கத்தின் முடிவையே அவர் அந்த கூட்டத்தில் விளக்கினார் என்பதை நாம் கண்டறிந்தோம். திருகோணமலை பெட்ரோலிய முனையமானது (Trinco Petroleum Terminal Ltd) 2022இல் இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கையில் உருவாக்கப்பட்டு, 2022.01.06 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தால் கையொப்பமிடப்பட்டது.
மேலும், “இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் களஞ்சிய மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் களஞ்சிய வளாகத்திலுள்ள 61 தாங்கிகள் CPC மற்றும் Lanka IOC ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இணைந்து மேம்படுத்தப்படும்.” என 06.01.2022 அன்று வெளியான அத தெரண செய்தியறிக்கை குறிப்பிடுகிறது.
அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அதே ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளதை 05.03.2025 அன்று Daily FTயில் வெளியான செய்தியறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரேல் –ஈரான் மோதலால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு QR மற்றும் வாகன இலக்கத்தினடிப்படையிலான ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதற்கிடையில், திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் தொடர்பான இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பிலான இந்த கருத்து தவறான முறையில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
அரசாங்கம் இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை விற்றதாக ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க கூறுவதாக பரவும் காணொளியானது, 2025.01.19 அன்று களுத்துறை, கட்டுக்குருந்தவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். அதில் அவர் திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு விற்றதாக கூறவில்லை. மாறாக 2022இல் செய்துகொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாகவே குறிப்பிடுகிறார்.
FAQs
Q1. இந்தக் காணொளி எதைக் காட்டுகிறது?
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்திலுள்ள 99 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கு மிக அதிகம் என்பதால், அவற்றில் 61 தாங்கிகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விளக்குவதை காட்டுகிறது.
Q2. இந்த காணொளி எச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டது?
19.01.2025 அன்று களுத்துறை, கட்டுக்குருந்தவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றியபோது பதிவு செய்யப்பட்டது.
Q3. இலங்கை அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்றுள்ளதா?
இல்லை. இலங்கையின் தேவைக்கு மேலதிகமான எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசுடன் 2022 இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நீடிக்கிறது.
எமது மூலங்கள்
19.01.2025 அன்று அனுர குமார திசாநாயக்கவின் அதிகாரப்பூர்வ YouTubeல் பதிவிடப்பட்ட காணொளி.
05.03.2025 அன்று DailyFT தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
09.01.2025 அன்று Lanka ENews தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
06.01.2022 அன்று Ada Derana தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
திருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம்.

Keerthika Mahalingam
April 7, 2026

Keerthika Mahalingam
March 23, 2026
Keerthika Mahalingam
January 23, 2026