Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
"விவசாயிகளால் இயற்றப்பட்ட சமீபத்திய மறுமலர்ச்சி பாடல்" என்ற தலைப்பில் அரசாங்கத்திற்கெதிராக விவசாயிகள் சமீபத்தில் வீதிகளில் போராடுவதாக TikTok காணொளியொன்று காட்டுகிறது.
நாட்டில் தற்போது இதுபோன்ற எந்தவொரு போராட்டமும் நடைபெறவில்லை. இது 10.11.2025 அன்று கெப்பெட்டிபொல நகரில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காணொளியாகும்.
தற்போது TikTokல் வைரலாகி வரும் ஒரு பதிவில், “விவசாயிகளால் இயற்றப்பட்ட சமீபத்திய மறுமலர்ச்சி பாடல்….. வந்து தாளத்திற்கு பாடுங்கள்…” என்ற சிங்கள தலைப்புடன் அரசாங்கத்திற்கெதிராக விவசாயிகள் வீதிகளில் போராடுவதைக் காட்டும் காணொளியொன்று பகிரப்பட்டு வருகிறது.

இந்த காணொளியில் பயன்படுத்தப்பட்ட “පුනරුදය” அதாவது மறுமலர்ச்சி என்ற பொருள் தரும் சிங்கள சொல் பொதுவாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை விமர்சிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். எனவே, இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் தீர்மானித்தோம்.
நாட்டில் தற்போது இதுபோன்ற போராட்டங்கள் ஏதும் நடைபெறுகின்றனவா என நாம் பிரதான ஊடகங்களின் செய்திகளை ஆராய்ந்ததில் இதுபோன்ற எந்தவொரு செய்தியையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
இந்த TikTok காணொளியில் Mature Leadership என்ற watermark காணப்பட்டதை நாம் அவதானித்தோம். Mature Leadership எனும் சொல்லைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில், Mature Leadership பேஸ்புக் பக்கத்தில் இந்தக் காணொளியானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் K.D. லால் காந்த ஆகியோரின் புகைப்படத்துடன், “விவசாயிகளால் இயற்றப்பட்ட சமீபத்திய மறுமலர்ச்சி பாடல்” என்ற சிங்கள வாக்கியத்துடன் 10.11.2025 அன்று பகிரப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம்.

மேலும், அந்தக் காணொளியில் தெரண தொலைக்காட்சியின் இலச்சினை (logo) காணப்பட்டதையும் நாம் அவதானித்தோம். Google reverse image தேடல் மூலம் காணொளியில் உள்ள பல key frameகளைக் கொண்டு ஆராய்ந்தபோது, இந்த காணொளி “நாட்டின் விவசாயிகளின் குரல்” என்ற தலைப்பில் கடந்த வருடம் 2025 நவம்பர் 10 ஆம் திகதி கெப்பெட்டிபொல நகரில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் காட்டும் தெரண தொலைக்காட்சியின் செய்தியறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம்.
மேலும், நவம்பர் 10, 2025 அன்று நடந்த இந்த போராட்டம் தொடர்பில் பல்வேறு செய்தி ஊடகங்களும் அக்காலகட்டத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அரசாங்கம் தங்கள் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாகவும், 2026 வரவு செலவு திட்டத்தில் விவசாயத் துறையைப் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டி, நவம்பர் 10, 2025 அன்று விவசாய நடவடிக்கைகளில் இருந்து விலகிய வெலிமடை மற்றும் ஊவா பரணகம உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டமே இது. எனினும், எவ்வித தொடர்பும் இன்றி மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த காணொளி தற்போது பகிரப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கெதிராக விவசாயிகள் வீதிகளில் போராடுவதாக பரவும் TikTok காணொளி சமீபத்தைய நிகழ்வல்ல. இது கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி கெப்பெட்டிபொல நகரில், 2026 வரவு செலவு திட்டத்தில் விவசாயத் துறையைப் புறக்கணித்ததாக குற்றம்சாட்டி விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காணொளியாகும்.
FAQs
Q1. இந்த TikTok காணொளியில் காட்டப்படுவது சமீபத்தில் நடந்த விவசாயிகள் போராட்டமா?
இல்லை. இது சமீபத்தில் நடந்த போராட்டம் அல்ல.
Q2. இந்த காணொளி எப்போது, எங்கு எடுக்கப்பட்டது?
இந்த காணொளி 2025 நவம்பர் 10 அன்று கெப்பெட்டிபொல நகரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
Q3. இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன?
2026 வரவு செலவு திட்டத்தில் விவசாயத் துறையை புறக்கணித்ததாகவும், தங்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எமது மூலங்கள்
10.11.2025 அன்று அத தெரண யூடியூப் தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
10.11.2025 அன்று Daily Mirror தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
11.11.2025 அன்று The Morning தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
10.11.2025 அன்று News Tube தளத்தில் வெளியான செய்தியறிக்கை.

Keerthika Mahalingam
April 7, 2026

Keerthika Mahalingam
March 30, 2026

Keerthika Mahalingam
March 23, 2026