Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks

இலங்கையில் தற்போது ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் பதற்றமடைவதைக் காட்டும் காணொளி.
இந்தக் கூற்று தவறானது. ஜனவரி 22.01.2026 அன்று வெளியான இந்தக் காணொளி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மருத்துவர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் பதற்றமடைவதைக் காட்டுகிறது.
இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பிலிருப்பதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தபோதிலும், ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலினால் இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற பதற்றத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில், கொழும்பில் உள்ள எரிபொருள் பற்றாக்குறையினால் மக்கள் பதற்றமடைவதையும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் குறித்து குற்றம் சாட்டுவதையும் காட்டும் ஒரு காணொளி TikTok இல் பகிரப்பட்டுள்ளது.

மக்களின் துன்பத்தைப் போக்கவும், யாரும் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பெண்ணொருவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதை இந்த காணொளி காட்டுகிறது. மேலும், “கொழும்பு சூடுபிடிக்கிறது! மக்கள் அரசாங்கத்தை சபிக்கிறார்கள், மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்கச் சொல்கிறார்கள், NPPக்கு வாக்களித்தவர்கள் இப்போது தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்!” என்று காணொளியிலுள்ள சிங்கள மொழியிலான வாசகம் கூறுகிறது.
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாததால், இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நாம் முடிவு செய்தோம்.
இந்த காணொளியில் “APÉ MEDIA” என்ற ஊடக நிறுவனத்தின் இலச்சினையை நாம் அவதானித்தோம். எனவே அந்த காணொளி எப்போது வெளியிடபட்டது என்ற தேடலில், 22.01.2026 அன்று APÉ MEDIA YouTube அலைவரிசையில் வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். எனவே இது தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது என்பதை கண்டறிய முடிந்தது.
மேலும், இந்த காணொளி கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு முன்னால் எடுக்கப்பட்டுள்ளதைக் கவனித்தோம். பின்னர் தேசிய கண் மருத்துவமனை பகுதியில் சமீபத்தில் நடந்த வேறு ஏதேனும் போராட்டங்கள் குறித்து ஆராய்ந்ததில், 22.01.2026 அன்று, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் மருத்துவமனை அருகே கூடி அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதைக் கவனித்தோம். அந்த காணொளிகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.

மருத்துவ அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டின் இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்கும் சுகாதார அமைச்சு தீர்வுகளைச் செயல்படுத்தத் தவறியதால் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறித்த அறிக்கைகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கேயும் காணலாம்.
நேற்று (09.03.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள நிலையில், எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையேதும் வெளியிடப்படவில்லை.
இலங்கையின் தற்போதைய எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக மக்களின் போராட்டத்தைக் காட்டுவதாக பரவும் காணொளி தவறானது. இந்த காணொளி 22.01.2026 அன்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தின் போது, பொதுமக்கள் எதிர்நோக்கிய அசௌகரியத்தைக் காட்டுகிறது.
FAQs
Q1.இந்தக் காணொளி எதை காட்டுகிறது?
GMOA மேற்கொண்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தின் போது ஏற்பட்ட மக்களின் பதற்றத்தை காட்டுகிறது.
Q2.இந்தக் காணொளி எப்போது எடுக்கப்பட்டது?
இந்தக் காணொளி 22.01.2026 அன்று கொழும்பு தேசிய கண் மருத்துவமனை அருகே எடுக்கப்பட்டது.
Q3.இலங்கையில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை உள்ளதா?
இல்லை. இதுவரை எரிபொருள் பற்றாக்குறை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
எமது மூலங்கள்
22.01.2026 அன்று APE Media YouTube அலைவரிசையில் பதிவேற்றப்பட்ட காணொளி.
22.01.2026 அன்று Ada Derana தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
22.01.2026 அன்று Newsfirst தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
25.01.2026 அன்று வீரகேசரி தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
21.01.2026 அன்று தமிழன் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
09.03.2026 அன்று Economy next தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
22.01.2026 அன்று Ada Derana YouTube தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆங்கில செய்திக் காணொளி.
22.01.2026 அன்று News 1st YouTube தளத்தில் பதிவேற்றப்பட்ட சிங்கள செய்தியறிக்கையின் காணொளி.
09.03.2026 அன்று Newswire தளத்தில் வெளியான செய்தியறிக்கை.

Keerthika Mahalingam
April 7, 2026
Keerthika Mahalingam
March 6, 2026

Keerthika Mahalingam
September 25, 2025