Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
இந்த காணொளியில் உள்ள இலங்கையர், தொழிலுக்காக இஸ்ரேலுக்குச் சென்று அங்கு சிக்கித் தவிக்கிறார். இவர் குறித்து ஏற்கனவே அவரது நண்பர்கள் தூதரகத்தில் தகவல் வழங்கியிருந்தபோதும், தூதரகத்தால் அவருக்கு எந்த உதவியும் வழங்கபடவில்லை.
இந்த நபர் இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளி போலியானது எனவும், இவரை ஏற்கனவே தூதரகம் அறிந்திருப்பதாகவம், அவருக்கு தேவையான உதவிகளை தூதரகம் முறைப்படி மேற்கொள்வதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நெதன்யா பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஆணொருவருடன் இன்னும் இரண்டு இலங்கையர்கள் சிங்கள மொழியில் உரையாடும் காணொளியொன்று சமீபத்தில் பேஸ்புக்கில் பரவி வந்தது. இந்த காணொளியில் அவர் தான் இலங்கையில் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும், கட்டுமான வேலைக்காக இஸ்ரேலுக்கு வந்திருப்பதாகவும் கூறுகிறார். இந்த காணொளியைப் பதிவு செய்த மற்றைய இரண்டு இலங்கையர்களும் இதனைப் பார்ப்பவர்களிடம் உடனடியாக இலங்கையில் உள்ள அவரது நண்பர்களில் ஒருவருக்கோ அல்லது தொடர்புடைய அதிகாரிக்கோ அவரைப் பற்றித் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த காணொளி வைரலாக பரவியதைத் தொடர்ந்து, தங்கள் மகன் என்று கூறி ஒருவர் அனுப்பிய சிங்கள மொழியிலான வாட்ஸ்அப் செய்தியும் வைரலாகி வருகிறது. இதில், இலங்கையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அவரைப் பற்றிய விபரங்களை தெரிவித்திருந்தோம், ஆனால் அவர்கள் எந்த வகையிலும் உதவவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த சமூக ஊடக பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
அதில் “இந்த நபர் குறித்து பரவும் தகவல்கள் உண்மை இல்லை என்றும், குறித்த நபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அரசாங்க ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் துறையில் பணிபுரிவதற்காக கடந்த ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் வந்துள்ளார். 42 வயதான அந்த நபர் இஸ்ரேலுக்கு வந்து சிறிது நாட்களிலேயே அதிகமாக மது அருந்தத் தொடங்கியுள்ளார்.மேலும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்துள்ளார். இறுதியில் தனது பணியிடத்தையும் கைவிட்டுள்ளார். அந்த நபர் இலங்கையில் இருக்கும் போதும் மதுபாவனைக்கு அடிமையாக இருந்து பின்னர் மறுவாழ்வு பெற்றவர். இந்த விடயங்களை ஒகஸ்ட் 30 அன்று அவரது பெற்றோர் தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். மேலும், அவரை இலங்கைக்கு திரும்ப அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நபரைப் பற்றி தூதரகம் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும், இந்த விடயம் பொறுப்புடன் கையாளப்பட்டாலும், சமூக ஊடகங்களில் சில தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.”
சமீபத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக செல்லும் பல இலங்கையர்கள் இஸ்ரேலுக்குச் செல்கின்றனர். குறிப்பாக தற்போது நிலவும் அசாதாரண போர் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் குறித்த பதிவுகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றது. இந்நிலையில் இஸ்ரேலில் தொழிலுக்காக சென்ற இந்த நபர் குறித்த காணொளியும் அதைத் தொடர்ந்து பரவிய WhatsApp screenshot என்பன வைரலாகியது.
தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கித் தவிப்பதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி போலியானது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தூதரகம் அவரைப் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பதோடு, இந்த காணொளி வெளியிடப்படுவதற்கு முன்பும், அதன் போதும் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதும் தெளிவாகிறது.
FAQs
Q1. இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது?
இஸ்ரேலின் நெதன்யா பகுதியில் எடுக்கப்பட்டது.
Q2. இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ள நபர் யார்?
இஸ்ரேலுக்கு தொழிலுக்காக சென்ற இலங்கையில் மொனராகலையைச் சேர்ந்த நபர். இஸ்ரேலிய தூதரகத்தின் அறிக்கையின்படி, அவரைப் பற்றிய மேலும் தனிப்பட்ட தகவல்களை மற்றும் அவரது முகம் ஊடகங்களிலிருந்து மறைக்கப்பட வேண்டும் என்று தூதரகம் கோரியுள்ளது.
Q3. இந்த நபர் ஏன் இவ்வளவு கடினமான மற்றும் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறார்?
தூதரகத்தின் கூற்றுப்படி, அவர் ஒரு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
Q4. இந்த காணொளி வைரலாவதற்கு முன்பு தூதரகம் இந்த காணொளியில் உள்ள நபரைப் பற்றி அறிந்து அவருக்கு ஆதரவளித்ததா?
ஆம்
எமது மூலங்கள்
18.09.2025 அன்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு.
18.09.2025 அன்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தின் பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட பதிவு.
18.09.2025 அன்று கெகிராவ நியூஸ் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவு.
18.09.2025 அன்று Daily Mirror செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
18.09.2025 அன்று Newswire செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.