Fact Checks
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என பரவும் புகைப்படம் உண்மையானதா?
Claim
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வணக்கம் தெரிவிப்பதாக பரவி வரும் புகைப்படம்.
Fact
பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி இப்பதிவுகளை பகிரங்கமாக மறுத்து, அந்தப் புகைப்படத்தில் இருப்பது அவரல்ல என்பதையும், அந்த நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தவறான பதிவைப் பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வணக்கம் தெரிவிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன், ராஜபக்ச குடும்பத்தினர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கடந்த வருட தேர்தலுக்கு முன்னர் ஆற்றிய உரையுடன் கூடிய ஒரு சமூக ஊடகப் பதிவு TikTokஇல் வைரலாகி வருகிறது. இது இந்த புகைப்படத்திலுள்ள உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சி என்று மறைமுகமாகத் தெரிகிறது.
இதே புகைப்படம் Facebook, YouTube மற்றும் X போன்ற தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.


Evidence
இப்பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை reverse image search மூலம் ஆராய்ந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 29.10.2025 அன்று பதிவேற்றப்பட்ட புகைப்படத் தொகுப்பை கண்டறிந்தோம். இப்பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி பற்றி எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி 30.10. 2025 அன்று பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் நபர் நான் அல்ல. இந்த புகைப்படம் எந்த வகையிலும் எடிட் செய்யப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
பல முக்கிய செய்தி வலைத்தளங்களும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் மறுப்பை மேற்கோள்காட்டி, படத்தில் உள்ள பெண் அவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி அறிக்கைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேலும், ProFaceFinder மற்றும் ToolPie ஆகிய இரண்டு டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட முக ஒப்பீட்டு பகுப்பாய்வு, சமூக ஊடக பதிவில் உள்ள பெண்ணின் முகத்தோற்றத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் முகத்திற்குமிடையில் எவ்விதப் பொருத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தின.


Context
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்பட தொகுப்பிலிருந்த புகைப்படமொன்று ராஜபக்ஷவுக்கு பெண் ஒருவர் வணக்கம் தெரிவிப்பதைக் காட்டுகிறது. இப்புகைப்படத்தில் உள்ள பெண் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி என்று சமூக ஊடக பயனர்கள் தவறாக பகிர ஆரம்பித்தனர்.
நிலந்தி கொட்டஹச்சி 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜபக்ச குடும்பத்தினர் உகாண்டாவில் மில்லியன் கணக்கான ரூபாய்களை பதுக்கி வைத்திருப்பதாக அவர் ஆற்றிய உரை மிகவும் பிரபல்யம் பெற்றது. எனவே இப்புகைப்படம் நிலந்தி கொட்டஹச்சி அவரது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்திலிருந்து மாறியிருப்பதாக விமர்சிக்கும் வகையில் பரவி வருகிறது.
Verdict
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வணக்கம் தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தவறானது. புகைப்படத்தில் இருப்பவர் அவரல்ல என நிலந்தி கொட்டஹச்சி பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் படத்தில் உள்ள பெண்ணுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கும் இடையே எந்தப் பொருத்தமும் இல்லை என்பதை முக ஒப்பீட்டு கருவிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
FAQs
Q1.மஹிந்த ராஜபக்ஷவுக்கு வணக்கம் தெரிவிக்கும் படத்தில் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியா?
இல்லை. புகைப்படத்தில் உள்ள பெண் தானல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி உறுதிப்படுத்தியுள்ளதோடு, சுயாதீன சரிபார்ப்பு இந்தக் கூற்று தவறானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
Q2. இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது?
இந்தப் புகைப்படம் ரதிஷான் சிறிபதன மற்றும் மனுஷி சேனாரத்னவின் திருமண விழாவின் போது எடுக்கப்பட்டதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
Q3. புகைப்படத்தில் உள்ள பெண் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அல்ல என்பது எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது?
படத்தை பகுப்பாய்வு செய்ய ProFaceFinder மற்றும் ToolPie போன்ற முக ஒப்பீட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டதோடு, வைரலான புகைப்படத்தில் உள்ள பெண்ணின் முகம் நிலந்தி கொட்டஹச்சியின் முகத்துடன் பொருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
எமது மூலங்கள்
29.10.2025 அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக்பக்கத்தில் பதிவிடப்பட்ட புகைப்படத்தொகுப்பு.
30.10.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிற்ப்பட்ட அறிக்கை.
30.10.2025 அன்று Newswire வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
30.10.2025 அன்று Hiru News வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
30.10.2025 அன்று Daily Mirror வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.
ProFaceFinder – முக ஒப்பீட்டு கருவி.
ToolPie – முக ஒப்பீட்டு கருவி.


