Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
2025 செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பாடசாலை மாணவனின் எலும்புக்கூடு எச்சம் மற்றும் அதற்குரிய சிறுவனின் புகைப்படம்.
வைரலாக பகிரப்படும் எலும்புக்கூடு எச்சம் மற்றும் அதற்குரிய சிறுவனின் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியின் போது எலும்புக்கூடு எச்சங்களும் ஒரு நீல நிற பையும் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்குரிய நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி-சிந்துபாத்தி மனித புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தினமும் இலங்கை உள்நாட்டு போருடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் வகையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகிறது. இப்புகைப்படம், “அவர்களால் கொன்று புதைக்கப்பட்ட இந்த ‘சிறுவன்’ தன்னுடைய இளநீலநிறப் புத்தகப்பையுடன் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தவர். உடைமைகளை அதற்கு உரியவர்களுடன் சேர்த்துப் புதைப்பது நல்ல பழக்கமா! செம்மணி புதைகுழியிலிருந்து அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவனின் எலும்புக்கூடு.” என்று பரவுகிறது.
இதே புகைப்படம் பல்வேறு உணர்ச்சிகரமான தலைப்புகளுடன் Facebook, TikTok, X மற்றும் YouTube இல் பரவலாகப் பகிரப்பட்டது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் உண்மையானதா என்பதை கண்டறிய, சமூக ஊடக தளங்களில் “செம்மணி மனித புதைகுழி” என்ற முக்கிய சொல்லினூடாக தேடலை மேற்கொண்டோம்.
அதன் முடிவில், வடக்கில் உள்ள பிரச்சினைகளை, குறிப்பாக இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பான தகவல்களை தொடர்ந்து அறிக்கையிடும் வடக்கை மையமாகக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளரான குமணன் கண்ணாவால் அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்கள் அவரது சமூக ஊடகங்க தளங்களில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். அதேபோல், Daily Mirror, News Wire மற்றும் Island போன்ற பிரதான செய்தி ஊடகங்களின் அறிக்கைகளில் இந்தப் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததையும் நாங்கள் அவதானித்தோம்.
“இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) தடயவியல் ஆய்வாளர்கள், எலும்புக்கூடுகளில் ஒன்றின் அருகே ஆடைத் துண்டுகள், சிறிய கண்ணாடி வளையல்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட நீல நிற துணிப் பை ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இது அண்ணளவாக மூன்று அடி நீளம் கொண்டது. போர் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மனிதாபிமான உதவியாக விநியோகித்த பாடசாலைப் பைகளை இந்த நீல நிற துணிப் பை ஒத்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பு சில எச்சங்கள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது” என்று ஜூன் 30, 2025 அன்று Daily Mirror வெளியிட்ட செய்தியறிக்கை குறிப்பிடுகிறது.
இருப்பினும், எந்த செய்தியறிக்கையும் எலும்புக்கூட்டின் அடையாளத்தையோ, அல்லது எச்சங்கள் யாருடையது என்ற தகவலையோ வெளிப்படுத்தவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய புகைப்படத்தை உன்னிப்பாக ஆராய்ந்ததில், அவை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டும் பொருந்தியிருக்கவில்லை. மேலும், வைரலான படத்தில் உள்ள சிறுவன் மற்றும் எலும்புக்கூடு இரண்டும் வழக்கத்திற்கு மாறாக மென்மையான அம்சங்களைக் கொண்டிருந்ததோடு எலும்புக்கூட்டின் தன்மை இயற்கைக்கு மாறான அமைப்பைக் கொண்டிருந்ததையும் நாம் கண்டறிந்தோம்.
எனவே நாம் இப்புகைப்படத்தை Hive Moderation மற்றும் WasItAI போன்ற AI பகுப்பாய்வு தளங்களின் மூலம் ஆராய்ந்ததில், இப்புகைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. எனவே, செம்மணிப் புதைகுழி ஆய்வில் மனித எச்சங்கள், பைகள் கண்டறியப்பட்டிருந்தாலும் தற்போது பரவும் சிறுவனின் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகிறது.
செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு எச்சம் மற்றும் அதற்குரிய சிறுவன் என்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும். செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் யாருடையது என்ற தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எமது மூலங்கள்
HIVE Moderation
Wasitai
30.06.2025 அன்று செம்மணியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் Daily Mirrorஇல் வெளியான செய்தியறிக்கை.
30.06.2025 அன்று செம்மணியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் News Wireஇல் வெளியான செய்தியறிக்கை.
01.07.2025 அன்று செம்மணியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் The Islandஇல் வெளியான செய்தியறிக்கை.
29.06.2025 அன்று ஊடகவியலாளர் குமணன் கண்ணாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட செம்மணி அகழ்வாராய்ச்சின் புகைப்படங்கள்.