Fact Checks
செம்மணி மனிதபுதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் எலும்புக்கூடுகள் எனப் பரவும் AI புகைப்படம்!

Claim
2025 செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு குழந்தையை அனைத்துக்கொண்டிருக்கும் தாயின் எலும்புக்கூடு எச்சத்தைக் காட்டும் புகைப்படம்.
Fact
வைரலாக பகிரப்படும் எலும்புக்கூடு எச்சம் மற்றும் ஒரு குழந்தையைத் அனைத்துக்கொண்டிருக்கும் பெண்ணின் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களில் ஒரு தாய் தனது குழந்தையை அனைத்துக்கொண்டிருக்கும் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதற்கான எவ்வித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் இல்லை.
யாழ் செம்மணி–சிந்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், இது உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான கொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்த பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்து வருகிறது.
கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆடை, ஒரு பை, செருப்புகள் மற்றும் ஒரு பொம்மை ஆகியவற்றை மீட்டனர், இது செம்மணி பகுதியில் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் பாதிக்கப்பட்டவர்களின் இருப்பைக் குறிக்கிறது.
இந்நிலையில், பேஸ்புக்கில் பகிரப்பட்ட இரண்டு புகைப்படங்களின் தொகுப்பொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அவ்விரண்டு புகைப்படங்களில் ஒன்று ஒரு குழந்தையை அனைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் காட்டுகிறது, மற்றையது இதேபோன்ற நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதொரு எலும்புக்கூட்டு எச்சத்தைக் காட்டுகிறது. இந்த பதிவு “மண்ணில் புதைக்கப்பட்டாலும் கூட, ஒரு தாயின் அன்பு வாழும்” எனும் வகையிலான கூற்றுடன் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் , #மண்ணுக்குள் #ஒரு #மகாகாவியம் என்ற ஹேஷ்டேக்குகளும் இப்பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதே புகைப்படம் அதே ஹேஷ்டேக்குகள் மற்றும் பல்வேறு உணர்ச்சிகரமான தலைப்புகளுடன் Facebook, TikTok, X மற்றும் Instagram போன்ற தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது. அப்பதிவுகளில் சிலவற்றை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்தப் பதிவுகளில் உள்ள தலைப்புகள், இந்த எலும்புக்கூட்டு எச்சம் செம்மணியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
Fact check/ Verification
சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் உண்மையானதா என்பதை கண்டறிய, Google keyword research மற்றும் Reverse Image Search ஆகியவற்றை நாம் மேற்கொண்டோம். அதன்போது, இப்பதிவு தவறானது என்பதை உறுதிப்படுத்தும் செய்தி அறிக்கையை நாம் கண்டறிந்தோம். ஜூன் 30, 2025 அன்று, டெய்லி மிரர் வெளியிட்டிருந்த செய்தியறிக்கையில், அதே நாளில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்தப் படத்தைக் காட்டியதாகவும், இப்புகைப்படம் தவறானது என்றும், அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் போது குழந்தையைத் அனைத்துக்கொண்டிருக்கும் தாயின் எலும்புக்கூடு எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் குறிப்ப்பிடப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய புகைப்படத்தை உன்னிப்பாக ஆராய்ந்ததில், அது உண்மையானதல்ல என்பதைக் குறிக்கும் பல கூறுகளைக் நாம் அவதானித்தோம். உதாரணமாக, படத்தொகுப்பில் உள்ள இரண்டு படங்களும் வழக்கத்திற்கு மாறாக மென்மையான அம்சங்களைக் கொண்டிருந்ததோடு, குழந்தையின் எலும்புக்கூடு இயற்கைக்கு மாறான தலை மற்றும் முக அமைப்பைக் காட்டியது.

எனவே நாம் இப்புகைப்படத்தை Hive Moderation மற்றும் WasItAI போன்ற AI பகுப்பாய்வு தளங்களின் மூலம் ஆராய்ந்ததில், இப்புகைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.


மேலும், வடக்கை மையமாகக் கொண்ட ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் பிரபாகரன் திலக்சனன் ஆகியோரால் எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் உண்மையான படங்களை அவர்களின் சமூக ஊடக கணக்குகளில் ஆராய்ந்ததில், 2025 செம்மணி அகழ்வாராய்ச்சியின் ஆரம்ப பரீட்சார்த்த சோதனைகளின்(pit test) போது, வளர்ந்தொருவரது எலும்புக்கூட்டின் அருகே ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்கள் இருப்பதைக் காட்டும் ஒரு படத்தைக் கண்டோம். பரீட்சார்த்த சோதனைகளின் இறுதி நாளான ஜூன் 7, 2025 அன்று இந்தப்புகைப்படம் இவ்விரு ஊடகவியலாளர்களாலும் வெளியிடப்பட்டிருந்தது.
ஜூன் 8, 2025 அன்று தமிழ் கார்டியன் வெளியிட்ட செய்தி அறிக்கையிலும் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், ஜூலை 2, 2025 அன்று யூடியூப்பில் Al Jazeera English இல் வெளியான செம்மணி தொடர்பான அறிக்கையின் காட்சிகளில் அதே எலும்புக்கூடு எச்சங்களைக் கண்டறிய முடிந்தது.
Conclusion
2025 ஆம் ஆண்டு செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தனது குழந்தையை அனைத்துக்கொண்டிருக்கும் ஒரு தாயின் எலும்புக்கூடு எச்சங்களைக் காட்டுவதாகக் பரவும் வைரல் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியின் ஆரம்ப பரீட்சார்த்த சோதனைகளின் போது ஒரு வளர்ந்தொருவரின் எலும்புக்கூட்டின் அருகே ஒரு சிறிய குழந்தையின் எலும்புக்கூடு எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எச்சங்களின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
எமது மூலங்கள்
HIVE Moderation
Wasitai
04.07.2025 அன்று Tamil Gaudianஇல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
02.07.2025 அன்று Daily Mirrorஇல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
30.06.2025 அன்று News Cut தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
02.07.2025 அன்று Newswire இல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
30.06.2025 அன்று Daily Mirrorஇல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
02.07.2025 அன்று Aljazeera English YouTubeஇல் வெளியிடப்பட்ட ஆவணப்பட அறிக்கை.
07.07.2025 அன்று News 1st Tamil YouTubeஇல் வெளியான செய்தியறிக்கை.
08.06.2025 அன்று Tamil Gaudianஇல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
07.06.2025 அன்று ஊடகவியலாளர் குமணன் கண்ணாவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட செம்மணி அகழ்வாராய்ச்சின் புகைப்படங்கள்.
07.06.2025அன்று ஊடகவியலாளர் பிரபாகரன் திலக்சனின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட செம்மணி அகழ்வாராய்ச்சின் புகைப்படங்கள்.