Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் NPP அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்தார்.
இந்த செய்தி தவறானது என இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ அறிக்கையுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் சிவப்பு முத்திரையின் கீழ் சோதனைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ் போதைப்பொருள்) உடன் தொடர்புடைய இரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்ததாக ஒரு பதிவை TikTok பயனரொருவர் பதிவிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் இந்த பதிவு குறித்து இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட உத்தோயோகபூர்வ அறிக்கையில் இது முற்றிலும் தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இது தவறான செய்தி என உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடிப்பட்டுள்ளது.
மேலும், இந்த சமூக ஊடக பதிவுகள் போலியானவை எனவும், இப்போலிச் செய்திகள் குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார் எனவும் பிரதான செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. Hiru News, Newswire மற்றும் Daily News போன்ற பல செய்தி வலைத்தளங்களில் இச்செய்தி பிரசுரமாகியிருந்தது.
இந்தோனேசிய பொலிஸின் உதவியுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ஐவர், கடந்த 30 ஆம் திகதி இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்களிடமிருந்து தெரியவந்த தகவல்களின்படி, நாட்டில் போதைப்பொருள் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்களில் ஐஸ் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் மித்தேனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இப்போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களும் நாட்டிற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நடந்து வரும் விசாரணை தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் அறிக்கை என பரவிய இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிகளவில் கவனத்தை ஈர்த்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உத்தரவினால் போதைப்பொருளுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக ASP ரொஹான் ஒலுகல தெரிவித்ததாக ஒரு கூற்று சமீபத்தில் பரவியது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
FAQs
Q1: உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரொஹான் ஒலுகல, NPP அரசாங்கம் போதைப்பொருள் கொள்கலன்களை விடுவித்ததாக உண்மையிலேயே கூறியிருந்தாரா?
இல்லை. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்தக் கூற்று பொய்யானது. இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வமாக இது தவறான செய்தி என அறிவித்துள்ளது.
Q2: இந்தப் பொய்யான செய்தி இப்போது அதிகமாக பரவ காரணம் என்ன?
சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலகத் தலைவர்களிடமிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போதைப்பொருள் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்களில் ஐஸ் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு தொகை இரசாயனங்கள் மித்தேனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
Q3: இந்த தவறான செய்தி குறித்து இலங்கை பொலிஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பொலிஸ் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய பொய்யான பதிவுகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எமது மூலங்கள்
இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்ட உத்தோயோகபூர்வ அறிக்கையைக் கொண்ட ASP ரொஹான் ஒலுகலவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவு.
08.09.2025 அன்று Hiru News செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
08.09.2025 அன்று Newswire செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
09.09.2025 அன்று Daily News செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
28.08.2025 அன்று Newswire செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
07.09.2025 அன்று The Sunday Times செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
14.09.2025 அன்று Ada Derana YouTube தளத்தில் வெளியான செய்தியறிக்கை.
14.09.2025 அன்று News 1st English செய்தித்தளத்தில் வெளியான செய்தியறிக்கை.