Fact Checks
பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு அனுர அரசு மன்னிப்பு வழங்காது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தாரா?

Claim: தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறினார்.
Fact: தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்கான எந்தவொரு பொது பதிவுகளும் இல்லை.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இம்மாதம் 8 திகதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளையான் தொடர்பிலும், துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் தொடர்புடையவர் என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன் “தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது” என கூறியதாக சிங்களத்தில் ஒரு பதிவு, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

TikTok, X மற்றும் Facebook போன்ற தளங்களில் பரவி வரும் இந்த பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த பதிவுகளின் சர்ச்சைக்குரிய தன்மை காரணமாக இதன் உண்மைத்தன்மையை அறிய நாம் தீர்மானித்தோம்.
Factcheck / Verification
இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய முதலில் இது போன்ற செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றனவா என நாம் ஆராய்ந்தபோது, அதுபோன்ற எவ்வித பதிவுகளையும் காணக்கிடைக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ்ப்பாண தேர்தல்கள் அலுவலகத்திற்கு முன் நின்று கருத்து தெரிவித்திருப்பதனை காட்டும் புகைப்படத்துடனேயே மேற்குறித்த பதிவானது பகிரப்பட்டிருந்தது. எனவே அந்த புகைப்படத்தை Google reverse image search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது, “எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (14.03.2025) யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.” என்ற தலைப்பில் இந்த புகைப்படம் உள்ளடங்கலாக இன்னும் சில புகைப்படங்கள், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதனின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்டறிந்தோம்.

அத்தோடு, அவர் யாழ். தேர்தல்கள் அலுவலகத்திற்கு முன்நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணொளியொன்றையும் கண்டறிந்தோம். எனினும் அதில் அவர் தேர்தல் தொடர்பிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததோடு, பிள்ளையான் மற்றும் கருணா அம்மன் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவித்திருக்கவில்லை. மேலும், அவரது சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள் மற்றும் பொது அறிக்கைகளை மீளாய்வு செய்ததில், அவர் பிள்ளையான் மற்றும் கருணா தொடர்பிலோ அல்லது அவர்கள் தொடர்பில் சட்டத்தின் நிலைப்பாடு குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தினோம்.
இந்த பதிவுகள் குறித்து மேலதிக உறுதிப்படுத்தலுக்காக, நாம் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தொடர்புகொண்டு இது குறித்து வினவியிருந்தோம். இதன்போது பிள்ளையான் மற்றும் கருணா தொடர்பில் தான் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும், தமது கட்சியும் இதுபோன்ற கருத்துக்களை முன்வைக்கவில்லையெனவும் உறுதிப்படுத்தினார். அரசு பிள்ளையான் மற்றும் கருணா தொடர்பில் சட்டமுறைப்படி செயற்படும் என்றே தமது கட்சி தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் தான் தெரிவித்தாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவாலானது முற்றிலும் தவறான ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சமீபத்தில் வெளியிட்ட பிற பொது அறிக்கைகளையும் நாங்கள் ஆராய்ந்ததில், அவர் அத்தகைய கருத்தை தெரிவித்ததற்கான எந்த பதிவுகளும் இல்லை.
Conclusion
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக் கொடுத்த பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் மன்னிப்பு வழங்கப்படாது என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியதாகக் கூறும் சமூக ஊடகப் பதிவுகள் தவறானவை.
Result: False
எமது மூலங்கள்
9.04.2025 அன்று Newswire இல் வெளியான செய்தியறிக்கை.
12.04.2025 அன்று Newswire இல் வெளியான செய்தியறிக்கை.
14.03.2025 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதனின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு.
14.03.2025 தேதியிட்ட People News தமிழ் பேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளி.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதனின் மறுப்புக் குறிப்பு.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.