Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
கச்சத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்திய படகொன்று இளைஞர்களை ஏற்றிச் சென்றதாகவும், வடக்குக் கடலில் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் திரும்பியதாகவும் பரவும் காணொளி.
இக்காணொளியில் உள்ள கொடி விடுதலைப் புலிகளுடையதல்ல. அது இவ்வருடம் கச்சத்தீவு திருவிழாவிற்காக இந்தியாவில் இருந்து வந்த பக்தர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் கொண்ட கொடி ஏந்தி வந்த படகொன்றாகும்.
சிவப்பு நிற கொடியொன்றை ஏந்திய படகொன்று இளைஞர்களுடன் கடலில் வேகமாக செல்லும் TikTok காணொளியொன்று சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த காணொளி “කච්චතිව් මුහුදේ.. ආයෙත්…. එයාලගේ රැගිල්ල” அதாவது “கச்சத்தீவு கடலில்… மீண்டும்… அவர்களின் சீற்றம்” என்ற சிங்கள மொழியிலான தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது.

இந்த பதிவு, அந்தக் கொடி விடுதலைப்புலிகளின் கொடி என்றும், வடக்குக் கடலில் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் தோன்றியுள்ளனர் எனும் எண்ணத்தை பிரதிபலிப்பதுடன், காணொளியின் கருத்துப் பகுதியில் பலரும் அந்தக் கொடியை விடுதலைப் புலிகளின் கொடி என நம்பி பதிவிட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.



இதே காணொளி Facebook மற்றும் TikTok தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. அப்பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையில் 1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 27ன் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே அதன் கொடி, சின்னங்கள், சீருடைகள், உருவப் படங்கள் போன்றவற்றை பொது வெளியில் பயன்படுத்துவது இலங்கையில் சட்டவிரோதமானது. எனவே இந்த காணொளியின் உண்மைத் தன்மையை சரிபார்க்க நாம் முடிவு செய்தோம்.
இந்தப் பதிவை சரிபார்க்க முதலில் “கச்சத்தீவு” மற்றும் “விடுதலைப் புலிகளின் கொடி” போன்ற முக்கிய வார்த்தைகளை மும்மொழிகளிலும் தேடினோம். ஆனால் இதனை உறுதிப்படுத்தும் எந்தவொரு நம்பகமான செய்தியறிக்கையும் கிடைக்கவில்லை.
பின்னர் reverse image search மூலம் காணொளியில் ஒரு முக்கிய காட்சியை படமாக்கி தேடியபோது, “VITHU DOT” என்ற YouTube கணக்கில் 27.02.2026 அன்று “கச்சத்தீவில் சீமான்? கொடியுடன் சீறி வந்த படகுகள்?” என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட முழுநீள காணொளியை கண்டறிந்தோம்.
இந்த காணொளியில் zoom செய்யப்பட்டு அந்த கொடியைக் காட்டும் காட்சி உள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னமான விவசாயி சின்னமும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் அவர்களின் படமும் தெளிவாகத் தென்பட்டன.


“நாம் தமிழர் கட்சி” என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் கட்சியாகும்.
தொடர்ச்சியான எமது ஆய்வில் 27.02.2026 அன்று ஒருவன் செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட “சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு” என்ற செய்தியறிக்கையும் சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில் உள்ள கொடி விடுதலைப் புலிகளுடையதல்ல என்பதை உறுதிபடுத்துகிறது.
மேலும் இந்தியாவிலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்காக வந்த பல படகுகள் சில நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சிந்னைத்தைக் கொண்ட அதே கொடியை ஏந்தியிருப்பதைக் காட்டும் பல YouTube காணொளிகளைக் காணக்கிடைத்தது. அந்தக் காணொளிகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கச்சத்தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவில் இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி, இந்திய பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க, இந்திய கடவுச்சீட்டோ அல்லது இலங்கை விசா போன்ற எந்த ஆவணங்களுமின்றி பயணிக்க முடியும்.
இவ்வருட(2026) கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த நாட்களில் தமிழ்நாட்டிலிருந்து பல படகுகள் பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்தன. சமூக ஊடகங்களில் பரவிய இந்தக் காணொளியும் கச்சத்தீவு திருவிழாவுக்காக இந்தியாவில் இருந்து வந்த இந்திய படகுகளில் ஒன்றையே காட்டுகிறது.
கச்சத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்திய படகு என் பரவும் காணொளி தவறானது. இந்தக் காணொளியில் காணப்படும் கொடி விடுதலைப் புலிகளின் கொடி அல்ல. மாறாக அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தைக் கொண்ட கொடியாகும். இக்கொடியேந்திய இந்த படகு இவ்வருடம் நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவிற்காக இந்தியாவில் இருந்து வந்த படகுகளில் ஒன்றாகும்.
FAQs
Q1. காணொளியில் காட்டப்படும் கொடி விடுதலைப் புலிகளுடையதா?
இல்லை. அந்த படகில் ஏந்தியிருக்கும் கொடி தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் கொண்ட கொடி.
Q2. ஏன் அந்த படகுகள் கச்சத்தீவு அருகே இருந்தன?
அவை 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க வந்தவை.
Q3. இத்திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு கடவுச்சீட்டு அல்லது விசா தேவைப்படுமா?
இல்லை. இந்திய –இலங்கை ஒப்பந்தத்தின் படி, இத்திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாமல் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எமது மூலங்கள்
2026.02.27 அன்று VITHU DOT YouTube கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2026.02.27 அன்று ஒருவன் செய்தித்தளம் வெளியிட்ட செய்தியறிக்கை.
2026.02.28 அன்று Anpu Tamil YouTube கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2026.02.28 அன்று Tamil Focus News YouTube கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2026.03.06 அன்று Arasiyal News YouTube கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2026.01.06 அன்று வெளியிடப்பட்ட அதியுயர் வர்த்தமானி அறிவிப்பு இல. 2470/19.
2025.05.11 அன்று The Hindu வெளியிட்ட, நாம் தமிழர்கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த செய்தியறிக்கை.
நாம் தமிழர் கட்சியின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் 2025.05.10 அன்று பதிவேற்றப்பட்ட Instagram பதிவு.
இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் Division for Ocean Affairs and the Law of the Sea, Office of Legal Affairs இன் வெளியீடு.
2026.03.03 அன்று இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.