Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
அனுரவின் அரசாங்கத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடி மற்றும் அதன் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களைத் தாங்கிய ஆதரவு பேரணியின் காணொளி.
இந்தப் பேரணி இலங்கையில் நடைபெறவில்லை. இது செப்டம்பர் 15, 2025 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவு பேரணியொன்றில் பங்கேற்றிருப்பதையும், அதில் அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடிகளையும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படங்களையும் வைத்திருப்பதைக் காட்டும் காணொளியொன்று சமீபத்தில் TikTok இல் பகிரப்பட்டிருந்தது. “அனுரவின் அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அவருக்கு வாக்களித்தவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா” என்ற சிங்கள மொழியிலான குறிப்புடன் இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. இது இப்பேரணி இலங்கையில் நடந்ததாக மறைமுகமாகக் கூறுகிறது.
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்று வருவதாகக் கூறி தமது கவலைகளை வெளிப்படுத்தும் வகையில், இதே போன்ற தலைப்புகளுடன் யூடியூப் மற்றும் பேஸ்புக்கிலும் இந்த காணொளி பகிரப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வு செப்டம்பர் 8, 2025 அன்று ஆரம்பமாகி, அக்டோபர் 8, 2025 வரை ஜெனீவாவில் நடைபெறும். அமர்வின் போது, ஐ.நா உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், இருப்பினும் ஒரு வரைவுத் தீர்மானம் சர்வதேச ஈடுபாட்டிற்குப் பதிலாக உள்நாட்டு நீதித்துறை பொறிமுறையை அங்கீகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளைப் புதுப்பிக்கக்கோரி, செப்டம்பர் 15, 2025 அன்று ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் பங்குபற்றியோர், உலகத் தமிழர்களால் ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் ஒரு முக்கிய நிகழ்வான, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து உயிர்நீத்த திலீபனின் 38வது ஆண்டிற்கான அஞ்சலியையும் செலுத்தினர்.
அனுரவின் அரசாங்கத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் பிரபாகரன் புகைப்படங்களுடன் ஆதரவுப் பேரணி நடந்ததாக பரவும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதல்ல. இந்த காணொளி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வுகளின் போது நடைபெற்ற, புலம்பெயர் தமிழர்களின் பேரணியின் ஒரு பகுதியாகும். இலங்கையில், நடைபெற்ற திலீபனின் நினைவு தின நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களோ, கொடிகளோ அல்லது பிரபாகரனின் புகைப்படங்களோ பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
FAQs
Q1. விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் கூடிய பேரணி இலங்கையில் நடந்ததா?
இல்லை. அது செப்டம்பர் 15, 2025 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்தது.
Q2. இந்தப் பேரணியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏன் அனுமதிக்கப்பட்டன?
சுவிட்சர்லாந்து போராட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளைக் காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. இருப்பினும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற காட்சிகள் சட்டவிரோதமானது.
Q3. இலங்கையில் இதே போன்ற நினைவு தினங்கள் நடத்தப்பட்டனவா?
ஆம், ஆனால் திலீபனின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் தீபச்சுடர் மட்டுமே ஏற்றப்பட்டன. LTTE சின்னங்கள் அல்லது பிரபாகரனின் புகைப்படங்கள் எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை.
Q4. ஜெனீவா பேரணியின் நோக்கம் என்ன?
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலைக் கோருவதற்கும், தியாகதீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 38வது ஆண்டு நிறைவை அனுஷ்டிப்பதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
எமது மூலங்கள்
15.09.2025 அன்று @r.sswiss என்ற கணக்கால் வெளியிடப்பட்ட TikTok காணொளி.
15.09.2025 அன்று தமிழ் கார்டியன் வெளியிட்ட செய்திக் கட்டுரை.
17.09.2025 அன்று தி ஐலண்ட் வெளியிட்ட செய்திக் கட்டுரை.
15.09.2025 அன்றுவீரகேசரியில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரை.
15.09.2025 அன்று சமுகம் அலைவரிசையில் வெளியிடப்பட்ட யூடியூப் காணொளி.
15.09.2025 அன்று நியூஸ் 1st தமிழ் யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றப்பட்ட இரவு நேர பிரதான செய்திக் காணொளி.
25 மே 2024 அன்று வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவிப்பு.
இலங்கை பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்ட ஆவணம்.
OHCHR.org வலைத்தளம்