Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
Claim: இலங்கையின் கண்டியில் உள்ள தலதா மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் “ஸ்ரீ தலதா வழிபாடு” (புத்தரின் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பு) தொடர்பான காட்சிகள்.
Fact: இந்த புகைப்படங்கள் இவ்வருடம் மார்ச் மாதம் வெளியாகியுள்ளன. “ஸ்ரீ தலதா வழிபாடு” ஏப்ரல் 18, 2025 அன்றே பொதுமக்களுக்கு திறக்கப்படது.
கண்டியில் உள்ள தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்ததாதுவை மக்கள் குழிவினர் வழிபடுவதைக் காட்டும் ஒரு நிமிட காணொளியொன்று, Facebook, YouTube மற்றும் TikTok போன்ற பல சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.
@_star_prince என்ற பயனர் TikTok இல் பகிர்ந்த இதுபோன்றதொரு பதிவில், இந்த காட்சிகள் உண்மையில் ஸ்ரீ தலதா வழிபாட்டிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை மறைமுகமாகக் குறிக்கும் வகையில், “[நேரில் ] பார்வையிட முடியாத உங்களுக்காக” எனும் தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.
இதே போன்ற பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
ஸ்ரீ தலதா வழிபாடு என்பது 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தரின் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பாகும். இதுபோன்ற வாய்ப்பு கடைசியாக 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் போது, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மாளிகைக்குள் சென்று புனித தந்ததாதுவை தரிசித்து இலவசமாக வழிபாடு செய்யலாம். இந்நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்நிகழ்வு முக்கிய பண்பாட்டு மற்றும் மதம் சார்ந்த முக்கியத்துவம் கொண்டதாலும், ஏப்ரல் 24-ஆம் திகதி நிலவரப்படி 3,00,000-ஐ கடந்த பெரிய எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகைதந்துள்ளதாலும், தலதா வழிபாட்டு நிகழ்வைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த காணொளியின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க நாம் தீர்மானித்தோம்.
இந்த காணொளியின் உண்மைத்தன்மையை கண்டறிய முதலில் நாம் சில முக்கிய காட்சிகளை Google reverse image search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்தோம். அதன்போது இந்த காணொளி, மார்ச் 9, 2025 அன்று Black Eagle என்ற TikTok கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது என்பதைக் கண்டறிந்தோம். குறித்த பதிவு எந்தவொரு தலைப்பையோ அல்லது குறிப்பையோ கொண்டிருக்கவில்லை. ஆனால் #sridaladamaligawa மற்றும் #danthadathu என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பதிவிடப்பட்டிருந்தது. அது ஸ்ரீ தலதா மாளிகை அல்லது புனித தந்ததாது வழிபாட்டை சேர்ந்தவை என்பதைக் குறிக்கிறது.
தற்போது நடைபெற்றுவரும் சிறப்பு வழிபாடான “ஸ்ரீ தலதா வழிபாடு” மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், மார்ச் 24 ஆம் திகதி அதன் இலட்சிணை வெளியிடப்படும் வரை எந்த அறிவித்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
வைரலான பரவிய இந்த பதிவுகளை கூர்ந்து அவதானித்தபோது, இந்த காணொளியானது தேவ வழிபாடு (Theva ceremony) எனப்படும் தினசரி வழிபாட்டு சேவைகளில் பதிவு செய்யப்பட்டது என நியூஸ்செக்கர் குழு கண்டறிந்தது. தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின்படி, இது தலதா மாளிகையில் தினசரி மூன்று முறை நடைபெறும் ஒரு சடங்காகும். இது ஆனந்த தேரர் தனது வாழ்நாளில் புத்தபகவானுக்கு சேவையாற்றியமையைக் குறிக்கிறது.
“அன்று ஆனந்த தேரரால் மேற்கொள்ளப்பட்ட புத்த பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சடங்குகள், இன்று தேவ வழிபாடாக (தினசரி சேவைகள்) மேற்கொள்ளப்படுகின்றன. அவை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களால் வழிநடத்தப்படுகின்றன, அதைத் தொடர்ந்து சடங்குகளைச் செய்ய அர்ப்பணிக்கப்பட்ட அந்த விகாரைகளில் வசிக்கும் மகா சங்கத்தினர் வழிநடத்தப்படுகின்றனர்.”
இந்த தினசரி வழிபாட்டிற்கு பொதுமக்கள் சிறப்பு காணிக்கைகளை நன்கொடையாக வழங்கி, அதை நேரில் பார்க்கலாம். தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள புகைப்பட ஆவணங்களின்படி, இந்த வைரல் காட்சிகள் அத்தகைய ஒரு விழாவையே காட்டுகிறது.
மேலும், ஸ்ரீ தலதா வழிபாட்டின்போது, பார்வையாளர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொலிஸாரினால் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களின்படி தொலைபேசிகளை கண்டிப்பாக நிறுத்தி(Switched off) வைக்க வேண்டும்.
ஏப்ரல் 22, 2025 அன்று, புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதைத் தடைசெய்யும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், புனித தந்ததாதுவைக் காட்டுவதாகக் கூறும் காணொளிகள் சமூக ஊடக பயனர்களிடையே பரவி வருவதாக இலங்கை பொலிஸ் அறிவித்தது. அத்தகைய படங்கள் உண்மையானவையா அல்லது AI-இனால் உருவாக்கப்பட்டவையா என்பதைப் ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வுத் துறை விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது. விசாரணை பற்றிய தகவல்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கண்டியில் உள்ள தலதா மாளிகையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வின் காட்சிகளைக் காட்டுவதாகக் கூறும் சமூக ஊடகப் பதிவுகள் உண்மையானவையல்ல. இவை தலதா மாளிகையின் பழையதொரு தினசரி வழிபாட்டு சடங்கின்போது எடுக்கப்பட்டவை.
எமது மூலங்கள்
09.03.2025 அன்று Black Eagle TikTok கணக்கில் பதிவிடப்பட்ட காணொளி.
தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையதளத்திலுள்ள தினசரி சடங்கு அல்லது தேவ வழிபாடுகள் பற்றிய விளக்கம்.
ஸ்ரீ தலதா வழிபாட்டின்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக நடைமுறைகள்.
21.04.2025 அன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் புனித தந்ததாதுவின் காட்சிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை குறித்து The Island பத்திரிகையில் வெளியான செய்தியறிக்கை.
21.04.2025 அன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் புனித தந்ததாதுவின் காட்சிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை குறித்து The Guardian இணையதளத்தில் வெளியான செய்தியறிக்கை.
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினாலோ, கருத்துக் கூற அல்லது முறைப்பாடு சமர்ப்பிக்க விரும்பினாலோ [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய முடியும். அத்துடன் தொடர்புகொள்ளுங்கள் பக்கத்திற்கு விஜயம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும் முடியும்.