Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்டதாகப் பரவும் வைரல் புகைப்படம். விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த ஒரு சிறுவனொருவரையும், தமிழ் ஈழத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கழுத்துத் துண்டு அணிந்த ஆணொருவரையும் இது காட்டுகிறது.
இந்த வைரல் புகைப்படம் இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்டதல்ல. இது இந்தியாவின் தமிழ்நாட்டில், இவ்வருடம் நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த மே 18 நினைவேந்தல் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது.
இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்டதாக ஒரு வைரல் புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் விடுதலைப் புலிகளின் சீருடையணிந்த சிறுவனும், “தமிழ் ஈழம்” என்ற சொல்லுடன் அதன் படத்தையும் கொண்ட கழுத்துத் துண்டு அணிந்த ஒருவரையும் காட்டுகிறது.
இந்த பதிவுகளில், “முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த நிராயுதபாணியான தமிழ் மக்களை நினைவேந்துவது பற்றி எதுவும் கூறுவது நல்லதல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், “#Mullivaikkal #May18 #SinhalaKoti” போன்ற ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு பதிவில், “இவர்களை (NPP) ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களை அடிக்க விரும்பவில்லையா?” என்று குறிப்பிடப்பட்டும், தற்போதைய அரசு LTTE சின்னங்களின் பொது வெளிப்பாட்டை ஆதரிக்கிறது எனவும் கூறுகிறது. மேலும் ஒரு பதிவில், “அரசு இராணுவத்தினரை பயங்கரவாதியாகியது, புலிகளை கதாநாயகனாக்கியது… ஒன்றரை ஆண்டுகால மறுமலர்ச்சி..” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.


இப்புகைப்படம் தொடர்பான உண்மைகளை கண்டறிய முதலில், “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2026” மற்றும் “இலங்கையில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள்” போன்ற முக்கிய சொற்களை ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பயன்படுத்தி தேடலை மேற்கொண்டோம். ஆனால் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் நம்பகமான செய்திகள் எதுவும் காணக்கிடைக்கவில்லை.
பின்னர் Google reverse image search மூலம், இந்த புகைப்படம் 2026 மே 18 ஆம் திகதி “Senthan Guru” என்ற X கணக்கில் பகிரப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதில், “மறைமலை நகரில் நடைபெற்ற மே 18 கூட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குட்டிப் புலி ” என்ற கூற்றோடு இப்பதிவு பகிரப்பட்டிருந்தது.

அதே புகைப்படம், அந்த பயனரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் இதே குறிப்போடு பகிரப்பட்டிருந்தது. இந்த புகைப்படம், இந்தியாவின் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மறைமலை நகரில் நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்டது என்பதும், அது நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த நிகழ்வு எனவும் கண்டறிந்தோம். மேலும், Senthan Guru என்பவரின் பேஸ்புக் சுயவிபரத்தின் படி, நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டது.
நாம் தமிழர் கட்சி என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயற்படும் ஒரு தமிழ் தேசியவாத அரசியல் கட்சியாகும். செந்தமிழன் சீமான் தலைமையிலான இக்கட்சி தமிழ் அடையாளம், தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் கருத்தியல் நிலைப்பாட்டினைக் கொண்டது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு இலங்கையிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களாலும் நினைவுகூரப்படுகிறது.
விடுதலைப் புலிகள் (LTTE) என்பது இலங்கையில் 1978 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் (Prevention of Terrorism Act No. 48 of 1978) 27 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். LTTE கொடிகள், சீருடைகள், சின்னங்கள், உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட LTTE தொடர்பான அடையாளங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது இலங்கையில் சட்டவிரோதமாகும். பொதுமக்கள் உயிரிழப்புகளை நினைவுகூரும் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டாலும், அவற்றில் LTTE தொடர்பான சின்னங்கள் இடம்பெறக் கூடாது.
எனவே இந்த வைரல் புகைப்படம், நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் அவற்றின் அரசியல் பின்னணிகள் குறித்து பொதுமக்களிடையே விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
2026 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்டதாகவும், அதில் விடுதலைப் புலிகளின் சீருடையணிந்த சிறுவனும், தமிழ் ஈழம் தொடர்பான படங்களுடன் கூடிய கழுத்துத் துண்டு அணிந்த நபரும் இருப்பதாகவும் பரவிய வைரல் புகைப்படம் தவறானது. இந்தப் புகைப்படம் இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மறைமலை நகரில் இவ்வருடம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்த மே 18 நினைவேந்தல் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது.
FAQs
1. இந்த வைரல் புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டதா?
இல்லை. இப்புகைப்படம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது.
2. இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் LTTE சின்னங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறதா?
இல்லை. இலங்கையில் LTTE கொடிகள், சீருடைகள், சின்னங்கள், உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற LTTE தொடர்பான அடையாளங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டாலும், அவற்றில் LTTE தொடர்பான சின்னங்கள் இடம்பெறக்கூடாது.
3. இந்த புகைப்படம் முதலில் எங்கிருந்து பகிரப்பட்டது?
இந்தப் புகைப்படம் முதலில் X, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் “Senthan Guru” என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டது. அது தமிழ்நாட்டில் நடைபெற்ற NTK ஏற்பாடு செய்த நிகழ்வுடன் தொடர்புடையது.
எமது மூலங்கள்
2026.05.18 அன்று Senthan Guru வெளியிட்ட X பதிவு.
2026.05.18 அன்று Senthan Guru வெளியிட்ட Facebook பதிவு.
2026.05.18 அன்று Senthan Guru வெளியிட்ட Instagram பதிவு.