Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
பிரதமர் ஹரிணி அமரசூரிய தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என விமர்சிப்பதாகக் காட்டும் காணொளி.
இக்காணொளி 2024.01.05 ஆம் திகதி பதிவுசெய்யப்பட்டது. அதாவது NPP ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக. அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை ஹரிணி அமரசூரிய விமர்சிப்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பகிரப்பட்ட TikTok காணொளியொன்றில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (AKD) அவர்களின் படத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய சிங்கள மொழியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் காணொளியொன்று இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “இந்த அரசாங்கத்திற்கு மக்கள் முக்கியமல்ல. மக்கள் மீது அரசுக்கு எவ்வித அக்கறையுமில்லை.” என அவர் கூறும் காணொளியில், அவர் தன்னுடைய அரசையே விமர்சிக்கிறார் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

இந்தக் காணொளி, தற்போதைய அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அரசின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தங்களது சொந்த கொள்கைகளுக்கு எதிராகப் பேசுகின்றனர் என்பதற்கான ஆதாரமாகவும் தவறாகப் பகிரப்பட்டு வருகிறது.
இப்பதிவின் உண்மைத்தன்மையை கண்டறிய ,முதலில் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரால் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துகளுடன் தொடர்புடைய முக்கிய சொற்களைப் பயன்படுத்தி மும்மொழிகளிலும் தேடல்களை மேற்கொண்டோம். ஆனால், தற்போதைய NPP அரசை அவர் இவ்வாறு விமர்சித்ததாகக் கூறும் எந்த நம்பகமான சமீபத்திய செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, வைரலாகப் பகிரப்பட்ட காணொளியின் முக்கிய காட்சிகளைப் பயன்படுத்தி Reverse image search முறையில் தேடலை மேற்கொண்டோம். இதன் மூலம், “ආචාර්ය හරිනි අමරසුරිය සහෝදරිය | අද පැවති ජාතික ජන බලවේගයේ මාධ්ය හමුවේදි” அதாவது “டாக்டர் ஹரிணி அமரசூரிய | இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடகச் சந்திப்பில்”.என்ற சிங்கள தலைப்புடன், 2024 ஜனவரி 5 ஆம் திகதி M P Lanka என்ற YouTube அலைவரிடையில் வெளியிடப்பட்ட காணொளியொன்றை கண்டறிய முடிந்தது.
இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியவற்றின் உத்தியோகபூர்வ யூடியூப் தளங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் ஆராய்ந்தபோது, 2024 ஜனவரி 5 அன்று நடைபெற்ற NPP ஊடகச் சந்திப்பின் முழுநீள காணொளியை கண்டரிந்தோம்.
அந்த காணொளியில், ஹரிணி அமரசூரிய, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தையே விமர்சித்ததை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்துக்கள், NPP அரசு அமைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டவை.
தற்போதைய NPP அரசு, அண்மைய மாதங்களில் எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பான பல விடயங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த விவாதங்களின் மத்தியில், NPP ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய காணொளிகள் மற்றும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அவற்றின் அசல் சூழல் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், இவ்வாறான உள்ளடக்கங்கள் சமீபத்திய கருத்துக்களாகக் காட்டப்பட்டு, அரசாங்க உறுப்பினர்கள் தங்களது சொந்த அரசை விமர்சிக்கின்றனர் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளன.
இந்தச் சம்பவத்திலும், 2024 ஜனவரியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு காணொளி, தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க கூறப்பட்ட சமீபத்திய கருத்தாக தவறாகப் பரப்பப்பட்டுள்ளது.
“இந்த அரசாங்கத்திற்கு மக்கள் முக்கியமல்ல, மக்கள் மீது அரசுக்கு எவ்வித அக்கறையுமில்லை.” என்று கூறி பிரதமர் ஹரிணி அமரசூரிய தற்போதைய NPP அரசை விமர்சிக்கிறார் எனக் கூறும் வைரல் பதிவு தவறானது. அந்தக் காணொளி 2024.01.05 அன்று நடைபெற்ற NPP ஊடகச் சந்திப்பில் பதிவுசெய்யப்பட்டது. இதில், அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தையே ஹரிணி அமரசூரிய விமர்சித்தார். எனவே, இது தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையதல்ல.
FAQs
Q1. வைரல் காணொளியில் ஹரிணி அமரசூரிய தற்போதைய NPP அரசை விமர்சிக்கிறாரா?
இல்லை. அந்தக் காணொளி NPP ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பதிவுசெய்யப்பட்டது.
Q2. இந்தக் காணொளி உண்மையில் எப்போது பதிவுசெய்யப்பட்டது?
இந்தக் காணொளி 2024.01.05 அன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) ஊடகச் சந்திப்பின் போது பதிவுசெய்யப்பட்டது.
Q3. அந்தக் காணொளியில் ஹரிணி அமரசூரிய எந்த அரசாங்கத்தை விமர்சித்தார்?
அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்ட காலத்தில் இலங்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. எனவே அவர் அந்த அரசாங்கத்தையே விமர்சித்தார்.
எமது மூலங்கள்
05.01.2024 அன்று M P Lanka YouTube இல் வெளியான காணொளி.
NPP YouTube channel 05.01.2024 அன்று NPP உத்தியோகபூர்வ YouTube அலைவரிசையில் வெளியான ஊடகவியலாளர் மாநாட்டின் காணொளி.