Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
"தரிசு நிலமாகவுள்ள கச்சத்தீவு இலங்கைக்கு ஒரு பெரும் சுமையாகும். அதைப் பராமரிப்பது கடற்படைக்கும் ஒரு பெரிய தலைவலியாக இருக்கிறது." என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததாக “Asian Mirror” செய்தி வெளியிட்டதாகப் பரவும் பதிவுகள்.
இந்தக் கூற்று தவறானது. இந்த செய்திப்பதிவு போலியாக உருவாக்கப்பட்டது என “Asian Mirror” மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
“தரிசு நிலமாகவுள்ள கச்சத்தீவு இலங்கைக்கு ஒரு பெரும் சுமையாகும். அதைப் பராமரிப்பது கடற்படைக்கும் ஒரு பெரிய தலைவலியாக இருக்கிறது.” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததாக “Asian Mirror” செய்தி வடிவமைப்பில் அமைச்சரின் புகைப்படத்துடன் சிங்கள மொழியில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த பதிவுகள், கச்சத்தீவைப் பற்றிய விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டதாகப் பரவி வருகின்றன. TikTok மற்றும் Facebook இல் பகிரப்பட்ட இப்பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.



தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது அரசியல் உரைகள் மற்றும் அமைச்சரவை ஊடகச் சந்திப்புகள் போன்ற ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் விஜித ஹேரத் இவ்வாறு கூறினாரா என்பதை உறுதிப்படுத்த, முக்கியச் சொற்களைக் கொண்டு தேடல் மேற்கொண்டோம். ஆனால், கச்சத்தீவு தொடர்பாக அவர் இவ்வாறானதொரு கருத்தை எங்கும் தெரிவித்தமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆனால், 27.08.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்நாட்டில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் கச்சத்தீவு குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் எழுப்பிய கேவிக்கு பதிலளிக்கும் காணொளியொன்றைக் கண்டறிந்தோம்.
அதில் அமைச்சர், இத்தகைய எந்தத் தீர்மானமும் அரசாங்கத்தினாலும் அல்லது தூதரக வழிகளாலும் எடுக்கப்படவில்லை என்றும், கச்சத்தீவு எப்போதும் இலங்கைக்குச் சொந்தமான தீவாகவே இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், 06.05.2026 அன்று வெளியிடப்பட்ட “Asian Mirror” இன் உத்தியோகபூர்வ Facebook பதிவில், வைரலான செய்திப்பதிவு போலியானது எனவும், இது தங்களது அதிகாரப்பூர்வ தளங்களால் வெளியிடப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

அதேபோல், விஜித ஹேரத்தின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்திலும் 06.05.2026 அன்று வெளியிடப்பட்ட பதிவில், பரவி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், அது எந்த அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்தும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், “27.08.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் நான் கூறியதுபோல், கச்சத்தீவு கடந்த காலத்திலும் இலங்கைக்குச் சொந்தமானது; இன்றும் இலங்கைக்குச் சொந்தமானதே; எதிர்காலத்திலும் இலங்கைக்கே சொந்தமானதாகவே இருக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.
கச்சத்தீவு, பாக்கு நீரிணையின், இந்திய–இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிலிருந்து சுமார் ஒன்றரை கடல் மைல் தூரத்தில் இலங்கைக் கடற்பரப்பிலுள்ள இலங்கைக்கு சொந்தமான தீவாகும்.
1974 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுக்கும் ஒப்பந்தத்தின் கீழ், கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர், குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில், கச்சத்தீவின் உரிமை உணர்வுபூர்வமான ஒரு அரசியல் விவகாரமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) கட்சி தமிழ்நாடு மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரது தேர்தல் பிரசார உரைகளில் இடம்பெற்ற கச்சத்தீவு குறித்த கருத்துகள் மீண்டும் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
இதேவேளை, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ஜுனா, மே 5 அன்று பாராளுமன்றத்தில் கச்சத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளும் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றன.
இந்தச் சூழலில், விஜித ஹேரத் கச்சத்தீவு இலங்கைக்கு சுமையானது என கூறியதாக தவறாகவெளியிடப்பட்ட பதிவுகளும் வைரலாக பரவியது.
“கச்சத்தீவு இலங்கைக்கு ஒரு பெரிய சுமை” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததாக “Asian Mirror” செய்தி வெளியிட்டதாகப் பரவும் கூற்று பொய்யானது. வைரலான “Asian Mirror” செய்திப்பதிவு போலியாக உருவாக்கப்பட்டது. இதனை “Asian Mirror” மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
FAQs
Q1. வைரலான செய்திப்பதிவு என்ன கூறுகிறது?
விஜித ஹேரத் கச்சத்தீவு இலங்கைக்கு சுமையாக உள்ளது என்றும், அதை பராமரிப்பது கடற்படைக்கு கடினம் என்றும் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Q2. விஜித ஹேரத் உண்மையில் இப்படிக் கூறினாரா?
அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டமைக்கான எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லை. மேலும், அமைச்சர் இப்பதிவை முற்றிலும் மறுத்துள்ளார்.
Q3. இந்த செய்திப்பதிவு “Asian Mirror” மூலம் வெளியிடப்பட்டதா?
இல்லை. அது தங்களது அதிகாரப்பூர்வ தளங்களில் வெளியிடப்படவில்லை என “Asian Mirror” உறுதிப்படுத்தியுள்ளது.
Q4. கச்சத்தீவு குறித்து அமைச்சர் முன்பு என்ன கூறியுள்ளார்?
“கச்சத்தீவு கடந்த காலத்திலும் இலங்கைக்குச் சொந்தமானது; இன்றும் இலங்கைக்குச் சொந்தமானதே; எதிர்காலத்திலும் இலங்கைக்கே சொந்தமானதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எமது மூலங்கள்
2025.08.27 அன்று Ada Derana Sinhala YouTube தளத்தில் பதிவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மான அறிவிப்பு காணொளி.
2026.05.06 அன்று Asian Mirror இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு.
2026.05.06 அன்று விஜித்த ஹேரத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு.