Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் பால் போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள், சிறிய காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள் மீட்கப்பட்டதாகக் காட்டும் புகைப்படம்.
இவ்வைரல் புகைப்படம் செயற்கை நுண்ணறிவினால் (AI) உருவாக்கப்பட்டதாகும்.
பேஸ்புக்கில் வைரலாகப் பரவி வரும் பதிவொன்றில், செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அப்பதிவில், அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் பால் போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள், சிறிய காலணிகள், பாடசாலைப் பைகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜூன் 9ஆம் திகதி ஒன்பது மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் எட்டு குழந்தைகளுக்குச் சொந்தமானவை என நம்பப்படுவதாகவும், அதனோடு குழந்தைகளுக்குச் சொந்தமான பல தனிப்பட்ட சான்றுப் பொருட்களும் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் அந்தப் பதிவுகள் கூறுகின்றன. அப்பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்காக, 2026 ஜூன் 9ஆம் திகதி நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது இவ்வாறான சான்றுப் பொருட்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.
செய்தி அறிக்கைகளின்படி, 2026 ஜூன் 9ஆம் திகதி நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாளில் ஒன்பது மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எட்டு சிறுவர்களுக்கானவை என நம்பப்படுகிறது. எனினும், செம்மணி புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, அடையாளம் காணப்பட்ட ஒன்பது எலும்புக்கூடுகளில் எட்டு சிறுவர்களுக்கானதாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் வயது எல்லை என்பது என்பின் ஆய்வுக்கு பின்னரே துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அகழ்வாராய்ச்சியின் 20ஆம் நாளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் தொடர்புடைய ஒரே சான்றுப் பொருளாக ஒரு நாணயம் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரலாகும் படத்தை ஆய்வு செய்தபோது, அப்படத்தில் காணப்படும் நில அமைப்பு, உண்மையான அகழ்வாராய்ச்சி தளத்தின் தோற்றத்துடன் பொருந்தவில்லை. மேலும், எலும்புக்கூடுகள் இயற்கையான புகைப்படத் தோற்றத்தைக் காட்டாமல், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களில் காணப்படும் வகையான காட்சியமைப்பைக் கொண்டிருந்தன.
எனவே இப்புகைப்படத்தின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, ZeroGPT, Undetectable AI மற்றும் Image Whisperer உள்ளிட்ட AI உள்ளடக்கங்களை கண்டறியும் தளங்களின் மூலம் ஆய்வு செய்தோம். இந்த தளங்கள் அனைத்தும், இப்புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது எனக் காட்டின.



மேலும், அகழ்வாராய்ச்சியின் 20ஆம் நாளின் ஆய்வைப் பதிவு செய்த LANKA FILES வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட காணொளிக் காட்சிகளுடனும், புகைப்படப் ஊடகவியலாளர் குமணன் வெளியிட்ட புகைப்படங்களுடனும் வைரல் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்த ஆதாரங்கள், வைரல் புகைப்படம் உண்மையான அகழ்வாராய்ச்சி தளத்தைக் காட்டவில்லை என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் 20ஆம் நாளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் பால் போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள், சிறிய காலணிகள், பாடசாலைப் பைகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டதாகக் காட்டும் வைரல் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். 2026 ஜூன் 9ஆம் திகதி அகழ்வாராய்ச்சியின் போது எலும்புக்கூடுகளுடன் தொடர்புடையதாக அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட ஒரே சான்றுப் பொருள் ஒரு நாணயம் மட்டுமே ஆகும்.
FAQs
Q1. வைரலாகும் புகைப்படம் செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டதா?
இல்லை. அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
Q2. 2026 ஜூன் 9ஆம் திகதி உண்மையில் எந்த சான்றுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது?
எலும்புக்கூடுகளில் ஒன்றுடன் தொடர்புடையதாக ஒரு நாணயம் மட்டுமே சான்றுப் பொருளாக கண்டுபிடிக்கப்பட்டது.
Q3. அந்த நாளில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டனவா?
ஆம். செய்தி அறிக்கைகளின்படி, ஒன்பது மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் எட்டு சிறுவர்களுடையது என அடையாளப்படுத்தப்பட்டன.
எமது மூலங்கள்
2026.06.09 அன்று LANKA FILES யூடியூபில் வெளியிடப்பட்ட காணொளி.
2026.06.09 அன்று Tamil Guardian வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
2026.06.09 அன்று Newswireஇல் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
2026.06.09 அன்று குமணன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செம்மணி அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
2026.06.09 அன்று யூடியூபில் பதிவேற்றப்பட்ட, சட்டத்தரணி ராணிதாவின் கருத்துக்களைக் கொண்ட DAN TV Prime Time செய்தி.
Image Whisperer
Undetectable AI
ZeroGPT