Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசு நிதியைப் பயன்படுத்தி தனியார் ஜெட் விமானத்தின் மூலம், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வியட்நாமிலிருந்து இலங்கைக்கு வந்தார்.
ஜனாதிபதி வியட்நாமிலிருந்து இலங்கை திரும்புவதற்கான தனியார் ஜெட் விமானத்திற்கு அரச நிதி பயன்படுத்தவில்லை எனவும், ஐ.நா.வுடன் இணைந்த வியட்நாமிய பௌத்த சங்கம் இதற்கு நிதியளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாம் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் வியட்நாம்-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவை (1970 – 2025) நினைவுகூரும் வகையில் இடம்பெற்றது. அத்தோடு, ஜனாதிபதி ஹோ சி மின் நகரில் ஆரம்பமான 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரை நிகழ்த்தினார். அந்தவகையில் கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி வியட்நாம் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியதோடு, அன்றைய தினம் நடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் அவரது வாக்கினைப் பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இலங்கை திரும்பிய ஜெட் விமானம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.
தேர்தல் நாளில் வாக்களிக்க வியட்நாமிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வர ஒரு தனியார் ஜெட் விமானத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசு நிதியைப் பயன்படுத்தியதாக TikTok இல் பயனரொருவர் சிங்களத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இந்த தனியார் ஜெட் விமானத்திற்கு ஜனாதிபதி ஒரு மணி நேரத்திற்கு இலங்கை ரூபாயில் 280 லட்சம் செலுத்தியதாகவும் மறைமுகமாக இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிக்டொக் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இதேபோன்ற பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அரச நிதி பயன்பாடு குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முன்னைய கூற்றுகளுக்குப் புறம்பாக இந்த பதிவுகள் காணப்படுவதன் அடிப்படையில் இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய நாம் தீர்மானித்தோம்.
சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிடப்படுவது போன்று ஜனாதிபதி திசாநாயக்க தனியார் ஜெட் விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தாரா என்பதை கண்டறிய “வியட்நாம் விஜயம்”, “அனுர குமார திசாநாயக்க”, தனியார் ஜெட் விமானம்” போன்ற முக்கிய சொற்களினூடாக தேடலை மேற்கொண்டோம். இதன்போது “வியட்நாமிற்கான தனது வெற்றிகரமான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 06 ஆம் திகதி மதியம் வியட்நாமிய அரசாங்கத்தின் சிறப்பு ஜெட் விமானம் மூலம் நாட்டிற்கு திரும்பினார்.” என வெளியாகியிருந்த செய்தியறிக்கைகளை கண்டறிந்தோம். அச்செய்தியறிக்கைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
2025.05.08 ஆம் நடந்த பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா இந்த ஜெட் விமானத்திற்கு நிதியளித்தது யார் என்பது குறித்து சபையில் ஒரு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் முகமாக, ”மே 6 ஆம் தேதி வியட்நாமில் நடைபெற்ற ஐ.நாவின் வெசாக் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார். உரையை நிகழ்த்தியதன் பின்னர் ஜனாதிபதி உடனடியாக தேர்தலுக்கு திரும்பி வர முடியாது என்பதனை நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்திருந்தோம். எனவே, ஏற்பாட்டாளர்கள், ஐ.நா.வுடன் இணைந்த வியட்நாமிய பௌத்த சங்கமொன்றின் மூலம் இந்த ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தனர். இதற்கு அரசினால் எந்தவொரு நிதியும் செலவிடப்படவில்லை.” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசு நிதியைப் பயன்படுத்தி தனியார் ஜெட் விமானத்தின் மூலம், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வியட்நாமிலிருந்து இலங்கைக்கு வந்தார் என சமூக ஊடகங்களில் பரவிய பதிவு தவறானது. இந்த தனியார் ஜெட் விமானம் ஐ.நா.வுடன் இணைந்த வியட்நாமிய பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நிதியளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
எமது மூலங்கள்
06.05.2025 அன்று Newswire இல் வெளியான செய்தியறிக்கை.
ஜனாதிபதியின் வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் வெளியான செய்தியறிக்கை
06.05.2025 அன்று Daily Mirror இல் வெளியான செய்தியறிக்கை.
06.05.2025 அன்று colombogazette.com இல் வெளியான செய்தியறிக்கை.
08.05.2025 அன்று Daily Mirror YouTube இல் வெளியான விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை