Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
அகமதாபாத் விமான விபத்தின் போது விமானத்திலிருந்து கீழே விழுந்த உடல்களைக் காட்டும் காணொளி.
இந்த காணொளி அகமதாபாத் விமான விபத்துடன் தொடர்புடையதல்ல. இது டெல்லி துவாரகாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மாடியிலிருந்து மூவர் குதித்ததைக் காட்டும் காணொளியாகும்.
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 12ஆம் திகதி(12.06.2025) 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட Air India விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி. ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சுமார் 241 பேர் உயிரிழந்ததோடு, விமானத்தில் பயணித்த ஒரேயொருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விபத்து குறித்த பல்வேறு புகைப்படங்களும், காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற அளவில் பரவி வருகின்றது. அதேவேளை “விமானத்தில் இருந்து எரிந்த நிலையில் கீழே விழுந்த உடல்கள்..! – உயிரை கீழே குதித்து காப்பாற்றி கொண்ட மாணவர்கள்.” என்ற தலைப்பில் தீ பரவிய கட்டடமொன்றிலிருந்து உடல்கள் கீழே விழுவதைக்காட்டும் காணொளியொன்றை “VettriTV News” என்ற TikTok கணக்கில் பதிவிடப்பட்டிருப்பதை அவதானித்தோம்.
இதே காணொளியை “நேற்றைய விமான விபத்தில் சடலங்கள் கீழே விழும் காட்சி” மற்றும் “சடலங்கள் கீழே விழும் கோரக்காட்சி” போன்ற தலைப்புகளுடம் மேலும் சில TikTok பதிவுகளிலும், Facebook பதிவுகளிலும் காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
சமூக ஊடகங்களில் இக்காணொளியின் வேகமான பரவல் காரணமாகவும், இதனை மக்கள் உண்மையென நினைத்து தமது இரங்கல்களை தெரிவித்து வந்ததையும் தொடர்ந்து இந்த காணொளியின் உண்மைத்தன்மையை ஆராய நாம் தீர்மானித்தோம்.
எமது முதற்கட்ட ஆய்வில் அகமதாபாத் விமான விபத்தின் போது விமானத்திலிருந்து கீழே விழுந்த உடல்களைக் காட்டும் காணொளி இந்திய மற்றும் இலங்கை பிரதான ஊடக செய்திகளில் வெளியாகியிருக்கின்றனவா என நாம் ஆராய்ந்தோம். எனினும் அதுபோன்ற எவ்வித காணொளிகளை எம்மால் காணக்கிடைக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியின் key frameகளை reverse image search முறையைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில் இக்காணொளியானது 10.06.2025 அன்று டெல்லி துவாரகா நகரின்(பிரிவு13 இல்) ஷாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் தீயிலிருந்து தப்பிக்க அவர்கள் மாடியில் இருந்து குதித்த வேளை உயிரிழந்த சம்பத்தைக் காட்டும் கானொளியென கண்டறிய முடிந்தது.
“மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்க கீழே குதித்த 3 உயிர்கள் பலி” மற்றும் “அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து” போன்ற தலைப்புகளுடன் இந்த சம்பவத்தைக் காட்டும் காணொளிகளைக் கொண்ட செய்தியறிக்கைகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அகமதாபாத் விமான விபத்தின் போது விமானத்திலிருந்து கீழே விழுந்த உடல்களைக் காட்டுவதாக பரவும் காணொளி, விமான விபத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர், 10.06.2025 அன்று டெல்லி துவாரகா நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தப்பிக்க தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் மாடியிலிருந்து குதித்ததைக் காட்டும் காணொளியாகும்.
எமது மூலங்கள்
10.06.2025 அன்று NDTV YouTube இல் துவாரகா அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து தொடர்பில் வெளியான செய்தியறிக்கை.
10.06.2025 அன்று Thanthi TVயின் X தளத்தில் துவாரகா அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து தொடர்பில் வெளியான காணொளி.
10.06.2025 அன்று Sathiyam News YouTube இல் துவாரகா அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து தொடர்பில் வெளியான செய்தியறிக்கை.
10.06.2025 அன்று News9 Live YouTube இல் துவாரகா அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்து தொடர்பில் வெளியான செய்தியறிக்கை.