Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Checks
கொழும்பு கோட்டை ஓல்கொட் மாவத்தையிலுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த கூற்று தவறானது. கொழும்பு கோட்டையிலுள்ள Charmers Granary காணிக்குரிய முதலீட்டு முன்மொழிவுகளுக்கான அழைப்பை மட்டுமே அமைச்சரவை அங்கீகரித்துள்ளதுடன், இந்நிலம் இன்னும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு(UDA) சொந்தமானதாகவே காணப்படுகிறது.
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 80% முதல் 82% வரையிலான நிலப்பரப்பு அரசுக்குச் சொந்தமானதாகவும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றன. மேலும் NPP அரசாங்கம் அந்த நிலங்களைப் பயன்படுத்தும் விதம் தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் TikTok பயனர் ஒருவர் சிங்களத்தில் வெளியிட்டடிருந்த பதிவில், “கொழும்பு கோட்டையின் ஒல்கொட் மாவத்தையில் 9 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது… அனுரவின் அமைச்சரவை ஒரு முடிவை எடுத்துள்ளது!” என்று பதிவிட்டிருந்தார். இதே கூற்று பேஸ்புக்கிலும் பரவலாகப் பகிரப்பட்டிருந்ததை நாம் அவதானித்தோம். அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இலங்கையில், 99 ஆண்டு நில குத்தகை என்பது நீண்ட கால முதலீட்டை, குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வழிமுறையாகும். அரசாங்கம், பெரும்பாலும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) மூலம், தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடுகிறது. குத்தகை காலங்கள் பொதுவாக 30 முதல் 99 ஆண்டுகள் வரை இருக்கும், இது முதலீட்டின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்து வேறுபடக்கூடியவை.
அரசாங்கத்தால் சமீபத்தில் இதுபோன்ற ஒப்பந்தம் ஏதும் கைச்சாத்திடப்பட்டதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டனவா என்பதை நாங்கள் முதலில் ஆராய்ந்தோம், ஆனால் அதுபோன்ற எந்தவொரு செய்திகளையும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.
பின்னர் “9 ஏக்கர் நிலம்,” “99 வருட குத்தகை,” மற்றும் “ஒல்கொட் மாவத்தை” என்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி கூகிளில் தேடலை மேற்கொண்ட போது, Daily FTயில் “அரசாங்க தலைமை மதிப்பீட்டாளர் வழங்கிய தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், கொழும்பு கோட்டையில் உள்ள Charmers Granary காணியை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை திங்கட்கிழமை ஒப்புதல் அளித்ததாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.” என செய்தி வெளியிட்டிருப்பதை கண்டறிந்தோம்.
இதே போன்ற செய்திகள் Economy next மற்றும் Newswire வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தன.
2025-08-05 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, “3.92 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட Charmers Granary சொத்தை குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சொத்து நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) சொந்தமானதோடு, 2022–2031க்கான கொழும்பு மாநகர சபை பகுதியின் மேம்பாட்டுத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்கான பகுதிக்குள் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.” என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
04.08.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலின் போது, இந்நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கும், Charmers Granary சொத்துக்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், இவ் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டதா? அல்லது ஒப்பந்தங்கள் ஏதும் கைச்சாத்திடப்பட்டதா என்பது தொடர்பில் எமக்கு எந்தவொரு அறிக்கைகளும் காணக்கிடைக்கவில்லை.
எனவே இதை மேலும் உறுதிப்படுத்த, நாங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையை (UDA) தொடர்பு கொண்டோம். அமைச்சரவையானது, 99 வருட குத்தகைக்குரிய முன்மொழிவுகளுக்கான அழைப்பை மட்டுமே அங்கீகரித்துள்ளதாகவும், இதுவரை எந்த முதலீட்டாளர்களுடனும் எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவில்லை என்றும், ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை அழைக்க UDA இந்த மாதத்திற்குள் அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFO) வெளியிடும் என்றும் சொத்து மற்றும் நில மேலாண்மை துணை பணிப்பாளர் நாயகம் EAC பிரியசாந்த, குறிப்பிட்டார்.
கொழும்பு கோட்டை, ஒல்கொட் மாவத்தையிலுள்ள 9 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரவும் கூற்று தவறானது. 99 ஆண்டு குத்தகைக்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரும் திட்டத்திற்கு மட்டுமே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு(UDA) சொந்தமான Charmers Granary சொத்து இன்னும் குத்தகைக்கு விடப்படவில்லை.
எமது மூலங்கள்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின்(UDA) சொத்து மற்றும் நில மேலாண்மை துணை பணிப்பாளர் நாயகம் EAC பிரியசாந்தவின் அறிக்கை.
04.08.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்.
Ada Derana யூடியூபில் வெளியான, 05.08.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் காணொளி.
05.08.2025 அன்று Newswireஇல் வெளியிடப்பட்ட நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிக்கை.
05.08.2025 அன்று Daily FTஇல் வெளியிடப்பட்ட நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிக்கை.
05.08.2025 அன்று Economy nextஇல் வெளியிடப்பட்ட நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிக்கை.
30.07.2023 அன்று The morningஇல் வெளியிடப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிலங்களை குத்தகைக்கு விடுவது குறித்த கட்டுரை.
இலங்கை முதலீட்டு வாரியத்தின்(BOI) இணையதளத்தில் வெளியிடப்பட்ட UDA இன் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான ஆவணம்.
23.07.2023 அன்று “நிலப் பிரச்சினையை நிவர்த்தி செய்தல்” என்ற தலைப்பில் Advocata.org இல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை.