Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வித ஆசனங்களையும் பெறாமையால், அக்கட்சி தலைவர் சீமான் உணர்ச்சிபூர்வமாக பேசுவதாகப் பரவும் காணொளி.
இந்த காணொளி 2021இல் எடுக்கப்பட்டது. மேலும் இக்காணொளி 2026 தேர்தல் முடிவுகளுடன் எவ்விதத்திலும் தொடர்பற்றது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வித ஆசனங்களையும் பெறாமையால் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் உணர்ச்சிபூர்வமாக பேசுவதாக காணொளியொன்று TikTok, YouTube, Facebook மற்றும் Instagram போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இப்பதிவுகளில் “இது என்னுடைய தோல்வியல்ல, இது மக்களின் தோல்வி – சீமான்”, “NTK தோல்வி 💔 சீமான் கண்ணீர் 😢”, “தேர்தல் தோல்விக்குப் பின் கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ” போன்ற குறிப்புகளுடன் பகிரப்பட்டிருந்தன.
இப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.



“2026 தேர்தலுக்கு பின் சீமான் வெளியிட்ட காணொளி” மற்றும் “NTK தேர்தல் தோல்வி குறித்து சீமானின் கருத்து” போன்ற முக்கியச் சொற்களை பயன்படுத்தி மேற்கொண்ட தேடலில், ஊடகங்களில் பரவும் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த நம்பகமான சமீபத்திய செய்தி அறிக்கைகளும் கிடைக்கவில்லை.
வைரல் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளை reverse image search மூலம் ஆய்வு செய்தபோது, அது பழைய பதிவொன்றிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தப் பதிவுகளில் உள்ள காணொளியின் முழு நீள காணொளி 2021 மே 18 அன்று நாம் தமிழர் கட்சியின் உத்தியோகபூர்வ YouTube பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. அதன் தலைப்பு “மே 18 ஈழப்போர் நினைவேந்தல்” நிகழ்வுடன் தொடர்புடையதாகவும், நினைவேந்தல் தொடர்பி சீமான் உரையாற்றும் காணொளியையும் கொண்டிருந்தது.
இதே முழு நீள காணொளி IBC Tamil இன் YouTube பக்கத்தில் 2021 மே 19 அன்று பதிவேற்றப்பட்டிருந்தது.
மேலும், நாம் தமிழர் கட்சி உறுப்பினர் இடும்பாவனம் கார்த்திக், தற்போது வைரலாக பரவி வரும் இந்தக் பதிவு 2026 தேர்தல் முடிவுகளுடன் தொடர்பற்றது என X தளத்தில் விளக்கம் அளித்த்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி (NTK) என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு தமிழ் தேசியவாத அரசியல் கட்சியாகும். இதன் ட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ் சீமான் உள்ளார். தமிழ் இன அடையாளம், தமிழ் ஈழம், மற்றும் விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வலுவான கருத்தியல் நிலைப்பாட்டிற்காக இந்தக் கட்சி அறியப்படுகிறது. இதன் காரணமாக இவரது காணொளிகள் இலங்கையர்கள் மத்தியிலும் அதிகளவு பரவலைக் கொண்டுள்ளது.
இந்த அரசியல் பின்னணியும், சீமான் பொதுவான உணர்ச்சிவசமான பேச்சு முறை காரணமாக, அவரது பழைய காணொளிகள் தேர்தல் காலங்களில் மீண்டும் வைரலாகி, தற்போதைய சம்பவங்களுடன் தவறாக இணைத்து பகிரப்படுகிறது. அதேபோல், இச்சம்பவத்திலும், சீமான் பேசும் பழைய காணொளியொன்று 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட உணர்ச்சிபூர்வமான காணொளி என தவறாகப் பகிரப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வித ஆசனங்களையும் பெறாமையால், அக்கட்சித் தலைவர் சீமான் உணர்ச்சிபூர்வமாக பேசுவதாகக் பகிரப்படும் காணொளியானது தவறானதாகும். இந்தக் காணொளி 2021 ஆம் ஆண்டில் பதிவேற்றப்பட்ட “மே 18 நினைவேந்தல்” குறித்து அவர் பேசும் முழுநீளக் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய பகுதியாகும்.
FAQs
Q1. வைரல் காணொளியில் என்ன கூறப்படுகிறது?
2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு NTK தலைவர் சீமான் உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதாகக் கூறப்படுகிறது.
Q2. இந்தக் காணொளி உண்மையில் எதனைக் காட்டுகிறது?
இது 2021 ஆம் ஆண்டு ஈழப்பூர் நினைவேந்தல் தொடர்பில் சீமான் கருத்து தெரிவிக்கும் உணர்ச்சி மிக்க உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு பதிவைக் காட்டுகிறது.
Q3. இந்த முழுநீளக் காணொளி எப்போது பதிவேற்றப்பட்டது?
2021 மே 18 ஆம் திகதி NTK இன் உத்தியோகபூர்வ YouTube பக்கத்தில்பதிவேற்றப்பட்டது.
Q4. இக்காணொளி தற்போது ஏன் மீண்டும் பரவி வருகிறது?
இந்த பழைய காணொளி சமீபத்தைய தேர்தல் முடிவுகளுடன் தொடர்புபடுத்தி தவறாக பகிரப்படுகிறது.
எமது மூலங்கள்
2021.05.18 அன்று நாம் தமிழர் கட்சியின் உத்தியோகபூர்வ YouTube பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2021.05.19 அன்று IBC Tamil YouTube பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி.
2026.05.05 அன்று NTK உறுப்பினர் இடும்பாவனம் கார்த்திக் வெளியிட்ட X தள பதிவு.