Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
2026 ஆம் ஆண்டு செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியில் ஆறு எலும்புக்கூடு எச்சங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்.
இப்புகைப்படம், உண்மையில் 2024 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரிலுள்ள மனித புதைகுழியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்களைக் காட்டுகிறது.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி–சிந்துபாத்தி புதைகுழி பகுதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட அகழாய்வு பணிகளில் மனித எச்சங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடையதாக, ஒரே குழிக்குள் ஒன்றாகக் கிடக்கும் ஐந்து முதல் ஆறு எலும்புக்கூடுகள் காணப்படும் படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
“07.06.2026 அன்று செம்மணி புதைகுழி அகழ்வாய்வின் நிலை” , “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஒரே குழியில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்” , “ஒரே குழியில் இருந்து ஆறு எலும்புக்கூடுகள் மீட்பு”, “செம்மணி – ம(றை)றக்கப்படும் நீதி!” போன்ற பல்வேறு உணர்ச்சிப்பூர்வமான தலைப்புகளுடன் இப்புகைப்படம் Facebook மற்றும் X தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.






சமூக ஊடகங்களில் பரவி வந்த இந்த புகைப்படம் உண்மையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, முக்கிய சொற்களைப் பயன்படுத்தி தேடல் மேற்கொண்டோம். அதன் போது, 2026 ஜூன் 8 ஆம் திகதி செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது ஒரே குழியில் ஆறு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது என்பது உறுதியானது.
2026.06.08 அன்று ADA DERANA Tamil YouTube இல் வெளியிடப்பட்ட காணொளியில், செம்மணி புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி V.S. நிரஞ்சன் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார். மூன்றாவது கட்ட நீதிமன்ற கண்காணிப்பு அகழாய்வின் 19 ஆவது நாளில், புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தக் கண்டுபிடிப்புகளுடன் சேர்த்து, மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 302 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு எலும்புக்கூடுகள் ஒன்றாகக் காணப்பட்ட மனித எச்சக் குவியல் ஒன்றை அகழ்வாய்வுக் குழு கண்டறிந்ததாகவும், அதற்கு “Accumulation No. 20” எனப் பெயரிடப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்தத் தொகுதியில் இருந்த எலும்புக்கூடுகளில் ஒன்றின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்தக் காணொளியிலும், Tamil Guardian மற்றும் Sri Lanka Brief வெளியிட்ட செய்தி அறிக்கைகளிலும் காணப்பட்ட படங்கள், வைரலாகப் பரவிய படத்துடன் பொருந்தவில்லை என்பதை நாம் கவனித்தோம். எனவே, அவ்வைரல் புகைப்படத்தை உண்மையான அகழ்வாய்வு தளத்தின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.


Reverse Image Search முறையில் வைரல் புகைப்படம் தொடர்பில் தேடலை மேற்கொண்டபோது, இப்புகைப்படம் 2024 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியூரம்பெர்க் (Nuremberg) நகரில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி அகழ்வாய்வின் போது எடுக்கப்பட்ட படம் என்பது கண்டறிந்தோம்.
CNN, Al Jazeera மற்றும் Archaeology Magazine வெளியிட்ட செய்தி அறிக்கைகள், இப்புகைப்படம் நியூரம்பெர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட பிளேக் நோயால் உயிரிழந்தவர்களின் பொதுக்குழியைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய பிளேக் கால புதைகுழிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அத்தோடு, புகைப்பட ஊடகவியலாளர் Kuman Kana வெளியிட்ட Facebook பதிவையும் கண்டறிந்தோம். செம்மணி அகழ்வாய்வு தளத்தை தினசரி பதிவு செய்து வரும் அவர், வைரலாகப் பரவும் புகைப்படம் செம்மணி அகழ்வாய்வுடன் தொடர்பற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளார். மூன்றாவது கட்ட அகழாய்வின் 19 ஆவது நாளில் அவர் பதிவு செய்த உண்மையான புகைப்படங்களை இங்கே காணலாம்.
மேலும், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவை யாருடையவை அல்லது அவற்றின் அடையாளம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
1998 ஆம் ஆண்டு, தமிழ்ப் பாடசாலை மாணவி ஒருவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர், 1995 மற்றும் 1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு செம்மணி பகுதியில் உள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து, இப்பகுதி முதன்முதலாக சர்வதேச கவனத்தைப் பெற்றது.
2025 பெப்ரவரி கட்டுமானப் பணிகளுக்காக நிலம் சுத்தம் செய்யும் போது மனித எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அகழ்வாய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் செம்மணி–சிந்துபாத்தி புதைகுழி பகுதியில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அகழ்வாய்வு 2 நிலைகளாக முன்னெடுக்கப்பட்டது. 2025.06.07 அன்று நிறைவடைந்த 10 நாள் பரிசோதனை அகழ்வாய்வின் போது குறைந்தது 19 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாவது கட்டத்தின் இரண்டாம் நிலை அகழாய்வு 2025.06.26 அன்று ஆரம்பமாகி, 2025.09.06 அன்று நிறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
மூன்றாவது கட்ட அகழ்வாய்வு 2026.04.28 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, மே 9 வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்றது. பின்னர் மே 9 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த அகழ்வாய்வு, 2026.06.01 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகள் தொடர்கின்றன.
2026 ஆம் ஆண்டு செம்மணி புதைகுழி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு எலும்புக்கூடுகள் அடங்கிய தொகுதியைக் காட்டுவதாக வைரலாகப் பரவும் புகைப்படம் தவறானது. செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வில் 2026.06.08 அன்று ஆறு எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு தொகுதி உண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் படம், 2024 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியைச் சேர்ந்ததாகும்.
FAQs
Q1. இந்தப் படம் செம்மணி புதைகுழி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளைக் காட்டுகிறதா?
இல்லை.
Q2. வைரலான புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது?
இந்தப் படம் 2024 ஆம் ஆண்டு ஜெர்மனியின் Nuremberg நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி அகழாய்வின் போது எடுக்கப்பட்டது.
Q3. செம்மணி அகழ்வாய்வில் உண்மையில் ஆறு எலும்புக்கூடுகள் ஒன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டதா?
ஆம். 2026.06.08 அன்று, செம்மணி புதைகுழி அகழாய்வின் போது ஆறு எலும்புக்கூடுகள் அடங்கிய ஒரு மனித என்புக் குவியல் அடையாளம் காணப்பட்டது.
Q4. செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
இல்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவை யாருடையவை என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அடையாளமும் வெளியிடப்படவில்லை.
எமது மூலங்கள்
08.06.2026 அன்று ADA DERANA Tamil YouTube இல் வெளியிடப்பட்ட சட்டத்தரணி V.S. நிரஞ்சனின் காணொளி.
08.06.2026 அன்று வெளியான Tamil Guardian செய்தியறிக்கை.
018.06.2026 அன்று வெளியான Sri Lanka Brief செய்தியறிக்கை.
06.03.2024 அன்று வெளியான CNN செய்தியறிக்கை.
06.03.2024 அன்று வெளியான Al Jazeera செய்தியறிக்கை.
11.03.2024 அன்று வெளியான Archaeology Magazine அறிக்கை .
09.06.2026 அன்று புகைப்பட ஊடகவியலாளர் Kuman Kana வெளியிட்ட Facebook பதிவு.
08.06.2026 அன்று Kuman Kana வெளியிட்ட செம்மணி அகழ்வாய்வு புகைப்படங்கள்.