Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், ராஜபக்ஷவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷ மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படம், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக திட்டமிடப்பட்டிருந்த காலப்பகுதியான 2025 மே மாதத்தில் எடுக்கப்பட்டது.
இந்தப் புகைப்படம் 2015 ஜூன் மாதம் பசில் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பான வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னர் கொழும்பில் உள்ள டர்டன்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்டது.
இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும், ராஜபக்ஷவின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷ, அவருக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மே 26, 2025 அன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய நிலையில், பசில் ராஜபக்ஷவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் நேரில் ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருதார்.
மாத்தறையின் எலியகந்த பகுதியில் நிலம் வாங்குவதற்காக 50 மில்லியன் ரூபாய் சட்டவிரோத வருவாயைப் பயன்படுத்தியதாகக் கூறி, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 2017 ஆம் ஆண்டு பசில் ராஜபக்ஷ உட்பட மேலும் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியே உள்ள நிலையில், மே 26ஆம் திகதி 2025 அன்று மாத்தறை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவரது வழக்கறிஞர், பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் நாற்காலியில் இருந்து விழுந்து காயமடைந்த பின்னர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். இந்த வழக்கு பற்றிய மேலதிக தகவல்களை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்நிலையில், மருத்துவமனை படுக்கையில் பசில் ராஜபக்ஷ இருப்பதைக் காட்டும் புகைப்படமொன்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் அவருக்கு நலம் பெற வாழ்த்துகின்ற அதேவேளை ஏனையோர் அவரது காயம் தொடர்பில் கேலி செய்வதையும் அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படத்தைப் பேஸ்புக்கில் பகிர்ந்த பயனரொருவர், “ஒரே விடயங்களைப் பற்றி பெரிய கருத்துக்களை சொல்பவர்களிடமிருந்து நாம் நமது நாட்டையும் இனத்தையும் பாதுகாக்க வேண்டும்” என சிங்களத்தில் பதிவிட்டிருந்தார்.
இதே போன்ற இன்னும் சில பதிவுகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் 2024 செப்டம்பர் மாதம் முதல் அவர் இலங்கையில் இல்லாத காரணத்தால், நியூஸ்செக்கர் இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடிவு செய்தது.
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் முதலில் Google Reverse Image Search பயன்படுத்திய தேடலை மேற்கொண்டோம். அதன்போது 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பசில் ராஜபக்ஷ திவி நெகும மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான மற்றொரு வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒரு காணொளியை நாம் கண்டறிந்தோம். இந்தப் புகைப்படம், 2015 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதியன்று அத தெரண ஊடகவியலாளருடன் பசில் ராஜபக்ஷவின் நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
மேற்குறிப்பிட்ட காணொளியை முழுமையாக இங்கே காணலாம்:
அதே காணொளியின் சில பகுதிகளை புகைப்படமாக ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் 2015 ஆம் ஆண்டு அவரது X கணக்கில் பதிவிட்டிருந்தார். அதேபோல் 2016 ஆம் ஆண்டு ஹிரு நியூஸிலும் இது பகிரப்பட்டிருந்தது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வருடம் மே 26, அன்று நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த டெய்லி நியூஸ் செய்தியில், பசில் ராஜபக்ஷவின் வழக்கறிஞரான, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, “மதிப்பிற்குரியவர்களே, எனது கட்சிக்காரர் மே 18 அல்லது 19 அன்று நாடு திரும்புவதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அமெரிக்காவில் இருந்தபோது, அவர் நாற்காலியில் இருந்து விழுந்து கழுத்து மற்றும் நரம்பு பாதிப்புக்குள்ளானார். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் அவரை ஆறு மாதங்களுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது பிணையினை இரத்து செய்து உடனடியாக இலங்கைக்கு நாடு திரும்ப வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியிருந்த போதும், இந்தக் கோரிக்கையை மாத்தறை நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண புத்ததாச நிராகரித்தார். அவர் இவ்வருடம் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் அடுத்த விசாரணையில் ராஜபக்ஷ ஆஜராக வேண்டும் என்று கூறினார்.
மருத்துவமனையில் பசில் ராஜபக்ஷ இருப்பதைக் காட்டும் வைரல் புகைப்படம் இவ்வருடம் எடுக்கப்பட்டதல்ல. இப்புகைப்படம் உண்மையில் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
எமது மூலங்கள்
23.06.2015 அன்று அத தெரண யூடியூபில் வெளியான பசில் ராஜபக்ஷவுடனான நேர்காணல்.
04.11.2016 அன்று “புதிய அரசியல் கட்சிக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டது – பசில் ராஜபக்ஷ” என்ற தலைப்பில் ஹிரு நியூஸின் யூடியூபில் வெளியான காணொளி.
26.05.2025 அன்று “மாத்தறை நில வழக்கில் பசில் ஆஜராகத் தவறிவிட்டார்” என்ற தலைப்பில் டெய்லி நியூஸில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
21.06.2015 அன்று ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் பதிவிட்ட ட்விட்டர் பதிவு.