Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check

“போக்குவரத்து விதிமீறல்” செய்துள்ளதாகக் கூறி, அதற்கான அபராதத்தை GovPay போன்ற இணைப்பின் மூலம் செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள்.
இந்த குறுஞ்செய்திகள் மோசடியானவை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அவற்றில் உள்ள இணைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
பல வாகன சாரதிகள் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (SMS) மற்றும் WhatsApp வழியாக, தாங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அதற்கான அபராதத்தை செலுத்துமாறும் தெரிவிக்கும் செய்திகளை பெற்று வருகின்றனர்.
இந்தச் செய்திகள், “நிலையான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு” (CCTV போன்ற அமைப்பு) மூலம் குறித்த விதிமீறல்கள் தானாகக் கண்டறியப்பட்டதாகக் கூறி, “govpay” என்ற சொல்லைக் கொண்ட இணையதள முகவரியைக்(url) கொண்ட இணைப்பின் மூலம் அபராதத்தை செலுத்துமாறு கோருகின்றன. GovPay என்பது போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகன சாரதிகள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் போது இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும்.


இந்தச் செய்திகளின் சந்தேகத்திற்கிடமான தன்மையை கருத்தில் கொண்டு நாம் இதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க முடிவு செய்தோம்.
இந்தச் செய்திகள், +94 என்ற இலங்கையின் தொலைபேசி குறியீட்டு எண்ணிலிருந்து அல்லாமல், +63 என்ற பிலிப்பைன்ஸ் நாட்டுக் குறியீட்டு எண்ணைக் கொண்ட தொலைபேசி இலக்கங்களிலிருந்து அனுப்பப்பட்டிருப்பதை நாம் அவதானித்தோம். மேலும், அந்தச் செய்திகளில் வாகன சாரதியின் பெயர், தேசிய அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிம எண் அல்லது வாகனப் பதிவு எண் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நாங்கள் கவனித்தோம்.
அதனைத் தொடர்ந்து, தானியங்கி கண்காணிப்பு அமைப்புகள் மூலம் கண்டறியப்படும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு இலங்கை பொலிஸார் பின்பற்றும் உத்தியோகபூர்வ நடைமுறையை ஆய்வு செய்தோம். அந்த நடைமுறையின்படி, சம்பந்தப்பட்ட காணொளி ஆதாரங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகைகள், குறித்த விதிமீறலை செய்த வாகன சாரதி வசிக்கும் பகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், அந்தப் பொலிஸ் நிலையம் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு அறிவிப்பை அனுப்புகிறது.
இந்த நடைமுறை 2024 பெப்ரவரி மாதம் முதல் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடைமுறைக்கு வந்தபோது, Ada Derana மற்றும் The Sunday Times உள்ளிட்ட பிரதான செய்தி ஊடகங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனால், WhatsApp மற்றும் SMS வழியாக பரவி வரும் இந்தச் செய்திகள் உத்தியோகபூர்வ நடைமுறைக்கு முரணானவை என்பது தெளிவாகிறது.
மேலும், கட்டண இணைப்பின் URL-ஐ ஆய்வு செய்தபோது, அது “govpay.lk” என்பதற்குப் பதிலாக “govpay.cfd” என இருந்தது. “govpay.lk” என்பதே இலங்கை பொலிஸாரும் அரச நிறுவனங்களும் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இணையதள முகவரியாகும்.
இதேவேளை, இலங்கை பொலிஸார் தங்களது சமூக ஊடகங்கள், இணையதளம் மற்றும் பிரதான ஊடகங்கள் வழியாக, இவ்வாறான இணைப்புகளை திறக்க/ பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அதே சமயம், உண்மையான போக்குவரத்து விதிமீறல் நடவடிக்கைகளில் பின்பற்றப்படும் உத்தியோகபூர்வ நடைமுறையையும் அவர்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.

மேலும், பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, அந்த இணைப்பு தற்போது முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், அந்த இணையதள முகவரியை Google Chrome இல் பார்த்தபோது, இணையதளங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிட உதவும் ScamAdviser extension அதனை “ஆபத்தானது” எனக் குறிப்பிட்டது. அதில், “இந்த இணையதளத்தை பயன்படுத்துவோர் தங்களது கடவுச்சொற்கள், தொலைபேசி தகவல்கள் அல்லது வங்கி அட்டை விபரங்களை வெளியிடுமாறு கூறி ஏமாற்றப்படலாம்” என எச்சரிக்கப்பட்டிருந்தது.

வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, GovPay அமைப்பைப் போன்ற ஒரு இணைப்பு வழியாக அதற்கான அபராதங்களைச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் SMS மற்றும் WhatsApp செய்திகள் மோசடியானவை. எனவே, பொதுமக்கள் இவ்வாறான இணைப்புகளை திறக்கவோ அல்லது அதில் தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
FAQs
Q1. SMS மற்றும் WhatsApp வழியாக பரவிய இந்த செய்தி என்ன கூறுகிறது?
தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறியப்பட்ட ஒரு போக்குவரத்து விதிமீறலை பெறுநர் செய்துள்ளார் என்றும், அதற்கான அபராதத்தை அதே செய்தியில் உள்ள GovPay போன்ற இணைப்பைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும் என்றும் இந்தச் செய்தி கூறுகிறது.
Q2. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள GovPay கட்டண இணைப்பு எது?
www.govpay.cfd
Q3. உத்தியோகபூர்வ GovPay இணைப்பு எது?
www.govpay.lk
எமது மூலங்கள்
28.05.2026 அன்று இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவு.
27.05.2026 அன்று NewsWire செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
22.04.2025 அன்று Ada Derana செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
02.02.2025 அன்று The Sunday Times செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியறிக்கை.
21.02.2025 அன்று இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையதளமான www.police.lk வெளியான செய்தியறிக்கை.